தமிழ் சினிமாவினருடன் ரஜினி உண்ணாவிரதம் இருந்தமைக்கு கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன. எதிர்ப்புகளை பற்றி நான் கவலைப்படவில்லை என்று ரஜினி தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் மீடியாவில் உலா வரும் முக்கியமான கேள்வி.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்களுக்கு தடை விதிப்பதாகவும், ரஜினிக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நேற்று கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
'கர்நாடகத்தைச் சேர்ந்த சிலர் ரஜினிகாந்த் படங்களுக்கு தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதைத் தவிர்க்க வேண்டும் என்று கர்நாடக திரை அமைப்புகளுடன் கலந்து பேசி சுமூகமான முடிவினை எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.'
இதுதான் நடிகர் சங்கத்தின் திர்மானம். சக நடிகருக்கு எதிரான கண்டனங்கள் பற்றி கண்டுகொள்ளாமல் வெறுமனே பெயருக்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இனி மேற்கொண்டு என்ன நடவடிக்கை என்பதைப் பற்றியெல்லாம் விவரமில்லை. தங்களுக்கு பிரச்னை என்று வரும்போது ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நடிகர் சங்கம், ரஜினிக்கு பிரச்னை வரும்போது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.
நடிகர் சங்கத்தின் இரட்டை வேடம் குறித்து ரஜினி ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். இதுவரை தான் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் ரஜினியோ அவரது ரசிகர்களோ யாருடைய உதவியையும் நாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சத்யராஜ் போன்ற பொறுப்பற்ற நடிகர்களை தமிழ் சினிமாவின் பிரதிநிதியாக முன்னால் நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அவமானம்.
'யாரைப் பற்றி பேசினால் கைதட்டல் கிடைக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் செய்ய மாட்டேன். அதற்காக நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டுமானாலும் செய்வேன்'
இது சத்யராஜின் லேட்டஸ்ட் பன்ச் டயலாக். சக நடிகர்களெல்லாம் அரசியலை ஒரு கை பார்த்துக்கொண்டிருக்கும்போது எந்தவொரு நடிகனுக்கும் இருக்கும் ஆற்றாமை இப்படி எரிச்சலாய் வெளிப்படுவது இயற்கைதான். அப்படி என்னதான் பேசினார்? நமது சிறப்பு பிரதிநிதி விஜயப்பாவின் கருத்தைக் கேட்டோம்.
'சத்யராஜ்க்கு நக்கல் அடிக்க மட்டும்தான் ஸார் தெரியும். வாழ்க்கையில எதையும் அவரு சீரியஸா எடுத்துக்கிட்டது கிடையாது. இந்த முறை சீரியஸா பேசறதா நினைச்சு கத்தியிருக்கார். ஆனா, அது காமெடியா மாறிப்போயிடுச்சு.
இதில் எம்.ஜி.ஆர் பேரை வேறு இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கார். சிக்கன், மட்டன் சாப்பிட்டாராம். ஆனா, தண்ணீர் குடிக்கலையாம். அப்போ அந்த சிக்கன், மட்டனை எதில் செய்தார்களாம். எம்,ஜி,ஆருக்கு இப்படியொரு முட்டாள் ரசிகனா?
ரஜினிக்கு கிடைத்த கைதட்டல்தான் அவருக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். ரஜினி வந்த பிறகு கூடியிருந்த கூட்டம் 3 மடங்காக ஆகிவிட்டது என்று மாலை முரசு வேறு செய்தி வெளியிட்டிருந்தது. ரஜினி ரசிகர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. கர்நாடக அமைப்புகளை கண்டிக்கும் போராட்டம்தான் என்றாலும் ரஜினி ரசிகர்களால் யாருக்கும் எந்தவித பிரச்சனையும் ஏற்படவில்லையே..அப்படியிருந்தும் சத்யராஜ்க்கு என்ன கோபம் என்பதுதான் புரியவில்லை. அப்படி கோபம் என்றாலும் அதை வெளிப்படுத்த வேண்டிய இடம் வேறு. இப்படி பொது மேடையில் காட்டுக்கத்தல் கத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை.
பேச்சின்போது நிறைய இடங்களில் என்ன பேசுவதென்பதே அவருக்கு மறந்து போனது வெளிப்படையாக தெரிந்தது. பல இடங்களில் கர்நாடகாவையும், ஒகேனக்கலையும் மறந்து போயிருந்தார். இத்தனைக்கும் என்ன பேசவேண்டும் என்பதை ஒத்திகை பார்த்துக்கொண்டுதான் வந்திருக்கிறார். விகடன் பேட்டியில் அவர் பேசியிருப்பதையும் மேடையில் பேசியிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதே தெளிவாக தெரிகிறது.
ரஜினி மீது அவருக்கு பொறாமை, கோபம் எது வேண்டுமானாலும் இருக்கலாம். அதை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்தியும் வந்திருக்கிறார். ஆனால், இப்போது தமிழன் என்கிற அடையாளத்தில் பேசுவதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழ்ர்களையும் அதிர்ச்சிக்கும் அவமானத்திற்குள்ளாக்கியிருக்கிறார். சத்யராஜ் போன்ற பொறுப்பற்ற நடிகர்களை தமிழ் சினிமாவின் பிரதிநிதியாக முன்னால் நிறுத்துவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அவமானம்.'
|