7 May 2004
புதுச்சேரி: பா.ஜ.,விடமோ, அ.தி.மு.க.,விடமோ எந்த உதவியையும் எதிர்பார்க்காமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்றும், அதற்கான செலவினங்களை தலைமை மன்றம் ஏற்றுக் கொள்ளும் என்று சத்தியநாராயணா அறிவித்துள்ளார்.
பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்திருந்தார். அதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு புதுச்சேரி, திண்டிவனம், சிதம்பரம், தர்மபுரி, செங்கல்பட்டு, வந்தவாசி ஆகிய 6 தொகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகள் சென்னைக்குப் புறப்பட்டனர்.
அவர்களிடம் தலைமை ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணா பேசினார். அதில் பா.ம.க., போட்டியிடும் 6 தொகுதிகளில் ரசிகர்கள் தேர்தல் பணியில் இறங்க வேண்டும். ஆதரவு கட்சியான பா.ஜ.,விடமோ, அ.தி.மு.க.,விடமோ தேர்தலுக்காக எந்தவித பணமோ, வாகன வசதியோ பெறக்கூடாது. அதேநேரத்தில் வாகனங்களில் செல்லும் போது அமைதியான முறையில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு செல்லாமல் அந்தந்தப் பகுதி ரஜினி ரசிகர்களை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டினாலே போதும். வேறு எந்தவிதமான வெளிப்படையான பிரசாரத்திலும் ஈடுபடக்கூடாது.
ஏதாவது பிரச்னை ஏற்படுவதாக இருந்தால் அவற்றை பெரிது படுத்தாமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள். மீறி பிரச்னை ஏற்பட்டால் உடனே தலைமைக்குத் தெரியப்படுங்கள். நம்முடைய ரசிகர்மன்ற ஓட்டுக்கள் விழுந்தாலே நாம் பா.ம.க.,வை எளிதில் வீழ்த்தி விட முடியும் என்று அறிவுறுத்தினார்.
இதற்கு பின்னர் ரஜினியை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று புதுச்சேரி, திண்டிவனம், சிதம்பரம் தொகுதி ரசிகர்கள் திடீர் போர்க்கொடி துõக்கியதையடுத்து நேற்று முன்தினம் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு மதியம் 12 மணிக்கு வந்தவர் ஒவ்வொருவரிடம் அளவலாவினார். மேலும் தனித்தனியாக போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இதற்கான செலவையும் தலைமை நிலையம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதையடுத்து மாலை 3.30 மணிக்கு தான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
மேலும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு வண்டி வீதம் தரப்பட்டுள்ளன. இதில் ஏற்படக்கூடிய அனைத்து செலவினங்களுக்கும் தலைமை மன்றம் பணம் கொடுக்க முடிவு செய்துள்ளது.அதற்கான கணக்கை அந்தந்த மாவட்ட தலைவரிடம் கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவைமட்டுமின்றி ரஜினியின் மனம் திறந்த பேட்டி ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு அதற்கு "புறப்படடா... தம்பி புறப்படடா!' என்ற பெயர் சூட்டப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 3 ஆயிரம் கேசட்டுகள் வீதம் கொடுக்கப்பட்டுள்ளன.
அவற்றைப் பெற்றுக் கொண்ட பொறுப்பாளர்கள் தற்போது வாகனங்களில் சென்று விநியோகித்து வருகின்றனர். இவைமட்டுமின்றி சென்னைக்கு சென்ற அனைவருக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் வந்த வாகனங்களுக்கான வாடகையும் அங்கேயே கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - தினமலர்
|