ஒரு படம் நன்றாக ஓடினால் வசூல் அதிகரிக்கும் என்று தானே நாம் கேள்விப்பட்டுள்ளோம் ஆனால், உலகதிசயமாக நாளுக்கு நாள் ஏற்கனவே வசூலித்த வசூலும் குறைந்து வந்தால் அது அதிசய நிகழ்வு தானே!
இந்த அதிசயம் தலைவர் படங்களுக்குச் சமீபமாக நடந்து வருகிறது, அதிலும் குறிப்பாக 2.0 க்கு நடந்து வருகிறது.
ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் சிலர் செய்யும் அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இவர்கள் இஷ்டத்துக்கு மனம் போன போக்கில், ஆமாம் சரியாகாத் தான் படிக்கிறீர்கள் "மனம் போன போக்கில்" வசூலை கூறி வருகிறார்கள்.
மனசாட்சி என்ற ஒன்று கொஞ்சம் கூட இல்லாதவர்கள்.
கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியான படங்களுக்கு ஈடாகக் குறிப்பாக ஒரு சில படங்களை விடச் சிறப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் 2.0 வசூலை குறைத்து காட்டி வருகிறார்கள்.
கோடிகளில் குறைக்கப்பட்ட காலா வசூல்
காலா படத்தில் தான் இது தீவிரமாக ஆரம்பித்தது.
ஸ்ரீதர் பிள்ளை அவர்கள் முதல் நாள் வசூல் என்று ஒரு வசூலை கூறினார் பின்னர் என்ன நடந்ததோ திடீரென்று அதை விடச் சில கோடிகள் குறைத்துக் கூறினார்.
இதற்குப் பேசாம காலா படம் ஒன்றுமே வசூலிக்கவில்லை என்றே கூறி இருக்கலாம்.
தவறாகக் கூறினால் அல்லது கணக்குத் தவறு என்றால், சில லட்சங்கள் கூட, குறையலாம் ஆனால், ரஜினி படம் என்றால் மட்டும் கோடிகளில் குறைகிறது.
இவர்கள் என்ன கூறுகிறார்களோ அது தான் கணக்கு.
அதற்கு என்ன ஆதாரம்? எதை வைத்து இந்த வசூலை கூறுகிறார்கள்? என்பதற்கு எந்த வெளிப்படைத் தன்மையும் இல்லை.
இவர்கள் கூறும் வசூலை கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.
யார் முதலில் குறைவான வசூலை போடுகிறார்களா அதை அப்படியே மற்ற ட்ராக்கர்ஸ் போட்டு உண்மை என்று நிரூபித்து விடுவார்கள்.
பின்னர் இதுவே ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்ட ரசிகர் சண்டையாக மாற்றப்படும்.
மற்ற ரஜினி படங்களை ஒப்பிடும் போது பல்வேறு அரசியல் காரணங்களால் காலாக்கு மக்களிடையே எதிர்பார்ப்புக் குறைவு, ப்ரோமோஷன் ஒன்றுமே இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
அதே போல வசூலும் குறைவு ஆனால், மற்ற நடிகர்களின் மிகப்பெரிய வெற்றி படங்களின் வசூல் தான் ரஜினியின் சுமாரான படங்களின் வசூல் என்பது தோல்வி அடைந்த லிங்கா வசூல் பார்த்தாலே போதும்.
இதையே காரணமாக வைத்து காலா வசூலை ஏகமாகக் குறைத்துக்காட்டினார்கள் குறிப்பாக "முதல் நாள் வசூலை". (மறக்கக் கூடிய சம்பவமா?!)
அப்போது இருந்த மனநிலை காரணமாக ரசிகர்களும் அதிக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, தற்போது கிழித்து தொங்க விடுவது போல.
இருப்பினும் 2018 டாப் 10 திரையரங்கு வசூல் பட்டியலில் மூன்றாம் இடத்தில் "காலா" அனைத்து இடங்களிலும் உள்ளது.
உலக அதிசய 2.0 வசூல் காட்டிய தமிழக ட்ராக்கர்ஸ்
2.0 க்கும் ப்ரோமோஷன் இல்லை ஆனால், ரஜினியோ "படம் பார்த்த மக்களே ப்ரோமோட் செய்வார்கள்" என்று கூறினார்.
அது தான் இன்று வரை நடந்து வருகிறது. படம் பேயோட்டம் ஓடி வருகிறது ஆமாம், வெறித்தனமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறை படங்களுக்காக தூக்கிய 2.0 படத்தை மக்கள் வரவேற்பு காரணமாக தமிழ்நாடு முழுக்க மறுவெளியீடு செய்து வருகிறார்கள்.
அனைத்து இடங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டுள்ளது, வார நாட்களிலும் என்பது குறிப்பிடத்தக்கது.
பல இடங்களில் முதன்மை திரையரங்குகளுக்கு மாற்றி வருகிறார்கள், இந்த வார இறுதியில் 2.0 தான் பெரும்பாலான முக்கிய திரைகளை ஆக்கிரமிக்கப்போகிறது.
சர்ச்சைக்கான முதல் பிள்ளையார் சுழி போட்ட ஸ்ரீதர் பிள்ளை
2.0 க்கு முதல் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது ஸ்ரீதர் பிள்ளை அவர்கள். உலக வரலாற்றிலேயே முதல் முறையாக 3D கட்டணத்தைத் தனியாகப் பிரித்துக் கூறினார்.
இது எந்த வகையில் நியாயம் என்றும், இது போல முன்பு எந்தப்படத்துக்கு இது போலப் பிரித்துக் கூறினார்கள் என்று அவர் தான் விளக்கணும்.
இதுவரை வந்த எந்த ஹாலிவுட் படத்துக்கு இது போலக் கணக்கு காட்டினார்?
அவர்கள் விருப்ப நடிகர் படம் என்றால் பாப்கார்ன், சமோசா வசூல் முதல் அனைத்தையும் சேர்த்து கூறுகிறார்கள் ஆனால், ரஜினி படம் என்றால், அதிகாரப்பூர்வமான வசூலை கூட ஏதேதோ காரணம் கூறி குறைத்துக்காட்டுகிறார்கள்.
இவருடைய மனைவி ஸ்ரீதேவி ஸ்ரீதர் இப்பவே "பேட்ட" படத்தைப் பற்றி நெகட்டிவா எழுத ஆரம்பித்துட்டாங்க. வாழ்க வளர்க!
ரமேஷ் & கௌசிக்
இவங்க இருவரும் இன்னும் ஸ்பெஷல். நாளுக்கு நாள் 2.0 வசூலை குறைத்துக் கொண்டு வருகிறார்கள்.
இவங்க முன்னாடி போட்ட டீவீட்டை எடுத்துக்காட்டி கேட்டால் அதுக்கு ஒரு விளக்கம் கொடுப்பாங்க பாருங்க...!! அரசியல்வாதிகளே தோற்றுவிடுவார்கள்.
உலகத்திலேயே ரமேஷ் போட்ட வசூல் கணக்கு மாதிரி எவனும் போட்டு இருக்க மாட்டான். எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்!!
அமெரிக்க டாலர் ரேட் குறைந்து விட்டதாம்!!! அடேங்கப்பா! முதல் மூன்று வாரங்கள் வசூலித்த தொகை ஏன் குறையுது? என்றால், பதிலைக் காணோம்.
அது சரி! அது ஏம்பான்னு ஆஸி டாலர் ரேட் பற்றிக் கேட்டால் சத்தத்தைக் காணோம்!
கௌசிக் சென்னை வசூலை 23 கோடியை விட்டு தாண்டக்கூடாதுன்னு ஒரு முடிவுல இருப்பார் போல, ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கேயே சுற்றிட்டு இருக்கு .
ஆனால், ப்ளாக்பஸ்டர் வசூல் என்று பாராட்டுவது மாதிரி வசனம் மட்டும் பேசி விட்டு வசூலை அப்படியே வைத்து இருக்காரு.
புதிதாகப் பார்க்கிறவங்க இவர் சொல்வதை உண்மை என்று நம்பி "ஆஹா எப்படி பாராட்டுறாருயா மனுசன்!!" என்று நினைப்பார்கள்.
தொடர்ச்சியாகக் கவனித்து வருகிறவர்களுக்கு மட்டுமே இவர் செய்கிற தில்லுமுள்ளுகள் தெரிய வரும்.
சொல்வது பார்த்தீர்கள் என்றால், பெரிய நகரங்கள் சென்னை கோவை போன்ற இடங்களில் மட்டுமே படம் பிளாக்பஸ்டர் என்பது போலத் தோற்றம் காட்டி மற்ற இடங்களில் வசூல் இல்லை என்பது போலச் சொல்லாமல் சொல்வார்கள்.
தெறிக்க விடும் சென்னை கோவை தவிர்த்த நகரங்கள்
மக்கள் வரவேற்பு காரணமாகத் தமிழ்நாடு முழுக்க உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கூடுதல் காட்சிகளைச் சேர்த்து வருகிறார்கள்.
அதோடு பிளாக்பஸ்டர் என்று சொல்வதை விட "மெகா பிளாக்பஸ்டர்" என்று சொல்வதே சரி என்று கூறி வருகிறார்கள்.
இதெல்லாம் இவர்கள் கண்களில் படுவதில்லை. திருச்சி, திண்டுக்கல், நெல்லை என்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் ட்விட்டரில் கூறி வருகிறார்கள்.
ட்ராக்கர்ஸை அசிங்கப்படுத்தும் ஆன்லைன் முன்பதிவு தளங்கள்
சமீபமாகத் திரையரங்குகள் BookMyShow, Ticketsnew போன்ற தளங்களில் இணைத்து வருகிறார்கள். எனவே, நமக்கு எவ்வளவு கூட்டமுள்ளது என்பதைக் காண முடிகிறது.
இதெல்லாம் இல்லையென்றால், ட்ராக்கர்கள் கூறுவதே உண்மை என்று நினைக்க வேண்டிய நிலையாகும்.
இது அனைத்துமே அதிகாரப்பூர்வமானது, போலியாகக் கூறப்படும் தககவல்கள் அல்ல.
ஏதாவது சுமாரான திரையரங்குகளில், 2D வெளியிட்ட திரையரங்குகளில் குறைவாக இருக்கலாம், அவை தவிர்க்க முடியாது காரணம், மக்கள் நல்ல திரையரங்கில் பார்க்கவே விரும்புவார்கள்.
இவ்வளவும் தெரிந்தும் ஆன்லைனில் எவ்வளவு முன்பதிவு செய்யப்படுகிறது என்று எவரும் பார்க்க முடியும் என்று தெரிந்தும் குறைத்துக்காட்டி வருகிறார்கள்.
லைக்கா மட்டும் அதிகாரப்பூர்வமாக 600 கோடி என்று அறிவிக்கவில்லை என்றால், 2.0 வசூல் 400 கோடி இன்னமும் தாண்டி இருக்காது என்பதே மறுக்க முடியாத உண்மை.
வட மாநிலங்கள், கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களில் சரியான வசூல் நிலவரம் கூறப்படும் போது தமிழ்நாட்டில் மட்டும் குறைத்துக்காட்டப்பட்டு வருகிறது.
ட்ராக்கர்ஸ் இது போல நடந்தாலும் இந்த முறை திரையரங்கு உரிமையாளர்கள் அபரிமிதமான ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
தங்கள் திரையரங்கு வசூலை, மக்கள் கூட்டத்தை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்கள்.
காறி துப்பிய இந்தியா பாக்ஸ் ஆபிஸ் தளம்
if the Diwali release was 33 crore then 2.0 is not 13 crore and if 2.0 is 13 crore then the Diwali release is not 33 crore.
"எதோ ஒரு மறைமுக எண்ணத்துடன் ரஜினி படங்களின் வசூல் தமிழ்நாட்டில் குறைத்துக்காட்டப்படுகிறது" என்று காறி துப்பாத குறையாக இந்தியா பாக்ஸ் ஆபிஸ் தளம் கட்டுரை எழுதியது.
அதையும் ஒன்றுமே தெரியாத மாதிரி இந்த ட்ராக்கர்கள் பகிர்ந்து நல்லவர்கள் போல நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ட்ராக்கர்களே! நீங்கள் யாருக்கு வேண்டும் என்றாலும் பில்டப் கொடுத்துக் கொள்ளுங்கள் ஆனால், அதற்காக மற்ற நடிகர்களின் வசூலை குறைத்துக் காட்டாதீர்கள்.
"பேட்ட", "விஸ்வாசம்" படங்களுக்கு ஏற்கனவே பிட்டை போட்டு வைத்து விட்டார்கள். இரு படங்களும் வெளியானதும் என்னெல்லாம் கூத்து நடக்கப்போகுதுன்னு மட்டும் பாருங்க!
படம் நல்லா ஓடினாலும் வசூல் நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்லும் அதிசய நிகழ்வை தமிழ்நாட்டைத் தவிர உலகத்தில் எங்கேயுமே நீங்கள் காண முடியாது.
இவர்கள் அனைவரும் கடந்த வார "சம்பவத்துக்குப்" பிறகு உக்கிரமாக இருக்கிறார்கள், பொய் பரப்புவதிலும், வசூலை குறைத்துக் காட்டுவதிலும்.
த்தா.. என்ன பிழைப்புடா இது!
- கிரி
|