Forbes பத்திரிகை இந்திய அளவில் அதிகம் சம்பாதிக்கும் திரையுலகப் பிரபலங்களைப் பட்டியலிட்டு இருந்தது. அதில் தென் இந்தியாவில் இருந்து தலைவர் 14 வது இடத்தைப் பெற்று இருந்தார்.
இதில் படத்தின் சம்பளம் மற்றும் விளம்பரங்கள் மூலமாகச் சம்பாதிப்பது என அனைத்தையும் கருத்தில் கொண்டு பட்டியிலடப்படுகிறது.
விளம்பரங்களில் தலைவர் நடிப்பதில்லை, எனவே, திரைப்படங்கள் மட்டுமே! 2018 ல் இரு படங்கள் வெளிவந்துள்ளது.
சரி இதுல என்ன பெரிய விஷயம் இருக்கு?! என்று தானே யோசிக்கறீங்க.
தெலுங்கு ட்விட்டர் பக்கம் Digital Entertainers தங்கள் தெலுங்கு நடிகர்கள் பட்டியலுடன் தலைவரையும் இணைத்து இருந்தார்கள்.
அதனால் சந்தேகமாகி தல ரசிகர் கேட்க.. விவாதம் பின்வரும்படி போனது
தல ரசிகர் - விஜய் 26 வது இடம்!
தெலுங்கு ரசிகர் - இது தெலுங்கு லிஸ்ட் ப்ரோ!
தல ரசிகர் - ஆனால், இதுல ரஜினி இருக்காரே! இவர் தமிழ்ல தான் முதன்மையா வேலை செய்யுறாரு.. அதனால் குழப்பாகி விட்டது.
தெலுங்கு ரசிகர் - நாங்க ரஜினியை எங்க சொந்த ஹீரோவாகத் தான் கருதுகிறோம்.
தல ரசிகர் - தம்ஸ் அப் (கொடுத்து இருக்காரு)
இந்த ட்வீட் நேற்று தலைவர் ரசிகர்களிடையே வைரலாகப் பரவியது. பலரும் தங்களுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டு இருந்தார்கள்.
தலைவருக்குப் பாட்ஷாவில் இருந்தே தெலுங்கில் ரசிகர்கள் பெருகி விட்டார்கள். பெத்தராயுடு (நாட்டாமை) படத்தில் நடித்த பிறகு தலைவரை அவர்களில் ஒருவராகவே கருத துவங்கி விட்டார்கள்.
படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் படங்கள் மாபெரும் வெற்றிப்படங்களாக உள்ளது.
தெலுங்கு ரசிகர்கள் தலைவரை தங்கள் சொந்த நடிகர் போலக் கருதினாலும், அவர்களுடைய திரை ரசனை என்பது கொண்டாட்டம் மிகுந்தது. ஆட்டம் பாட்டம் அதிரடி தான்.
எனவே, அதன் பிறகு வந்த தலைவர் படங்கள் கோச்சடையான், லிங்கா, கபாலி, காலா பெரிய அளவில் சோபிக்கவில்லை.
கபாலி, காலா இரு படங்களுமே தமிழ், தமிழன் என்ற கதைக் கருவில் வந்ததால், இவர்களை ஈர்க்காமல் போனதில் வியப்பில்லை. இருப்பினும், தலைவர் மீதான அன்பு மட்டும் குறையவில்லை.
தலைவர் படத்துக்கு இருக்கும் வரவேற்பு, இயக்குநர் ஷங்கர் படங்களுக்கும் உண்டு.
2.0 தலைவர் மற்றும் ஷங்கர் இருவரின் படம் என்பதால், ப்ரோமோஷன் இல்லையென்றாலும் எதிர்பார்ப்பு இருந்தது. படம் வெளியான பிறகு தமிழ்நாட்டை விட இங்கே தங்கள் சொந்த படத்துக்கான ஆதரவை போல அசத்தி வருகிறார்கள்.
அனைத்து இடங்களிலும் "Housefull" காட்சிகளாக வரவேற்பை பெற்று வருகிறது.
தலைவரை அவர்கள் தமிழ் நடிகர் என்ற எண்ணத்திலேயே நினைக்கவில்லை. தங்கள் நடிகர்களில் ஒருவராகவே நினைக்கிறார்கள்.
இதைப் பார்த்து நெகிழ்ந்த தலைவர் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழர்களின் பெருமையை, தமிழின் பெருமையை உலகமெல்லாம் தலைவர் கொண்டு சென்றாலும்...
இங்குள்ள நடிகர்களின் சில ரசிகர்கள் போட்டி பொறாமை காரணமாக மூத்த நடிகர், ஒப்பீடுகள் இல்லாதவர் என்று தெரிந்தும் அவரைத் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பக்கத்து மாநில ரசிகர்கள் தலைவரை தங்கள் நடிகர்களில் ஒருவராகக் கருதி பேசுவது என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்திதானே! :-)
|