 கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துப் படம் வெளியாகி விட்டது.
பறவைகளின் காதலன் அக்க்ஷய் வளர்க்கும் பறவைகள் Cell Phone Tower Radiation காரணமாக இறக்கின்றன.
அக்க்ஷய் கொடுக்கும் புகார்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்யும் அக்க்ஷய், அதிகச் சக்தி கொண்ட நபராக (ஆன்மாவாக – Fifth Force) மாறுகிறார்.
செல்போன் பயன்படுத்துபவர்களை அனைவரையும் கொல்ல முடிவு செய்கிறார். இவரிடமிருந்து எப்படி விஞ்ஞானி வசீகரன், சிட்டி உதவியால் மக்களைக் காப்பாற்றுகிறார் என்பதே கதை.
ஐந்து நிமிடங்களில் துவங்கும் கதை
உலகளவில் படத்தைக் கொண்டு செல்லும் முயற்சியாக அனைவருக்கும் பொதுவான கதையாக மட்டுமில்லாமல், ரஜினி படங்களுக்கே உரித்தான வழக்கமான அறிமுகக்காட்சிகள், பெயர் வரும் எழுத்துக்கள் எதுவுமில்லாமல் சாதாரணமாக வருகிறது.
படம் துவங்கிய ஐந்து நிமிடங்களில் படத்தின் கதை துவங்குவது, துவக்கத்திலேயே பார்வையாளர்களைப் பரபரப்பாக்குகிறது. Humanoid Robot ஆக வரும் எமி அசத்தலான நடிப்பு.
யார் செல்போனை தூக்குகிறார்கள், எப்படி மறைந்து போகிறது என்று அனைவரும் குழம்பும் போது, அக்க்ஷை ஒவ்வொருத்தராகப் பழி வாங்குவது பகீர் ரகம்.
அறை முழுக்கச் செல்போன்கள் குவிந்து Vibrator சத்தத்துக்குத் திரையரங்கே அதிர்கிறது.
என்ன தான் எமி, வசீகரன் உதவியாளர் என்றாலும், அரசின் முக்கியக் கலந்துரையாடல்களில் கூட உடன் வருவது கொஞ்சம் அதிகமாகத் தோன்றியது.
வசீகரன், எமி இருவரும் தங்களுக்குத் தேவையானதை எளிதாக எடுத்து விடுகிறார்கள். இவ்வளவு பாதுகாப்பில்லாமல் அல்லது பாதுகாப்பு குறைப்பாடாகவா வைத்து இருப்பார்கள்?!
அக்க்ஷய்
“Bird Man of India” என்று அழைக்கப்படும் சலீம் அலி அவர்களின் கதாப்பாத்திரத்தை அக்க்ஷய் பிரதிபலித்தாகக் கூறப்படுகிறது, ஒப்பனை கிட்டத்தட்ட அவரோடு பொருந்திப் போகிறது.
சலீம் அலி பல விருதுகள் பெற்று இருந்தாலும் இப்படம் அவருக்கு மீண்டும் புகழைக் கொண்டு வந்துள்ளது.
அக்க்ஷய் இடைவேளையில் தான் நேரடியாக அறிமுகமாகிறார்.
அக்க்ஷய் கதாப்பாத்திரத்தின் சூழ்நிலையை விளக்கினாலும், படம் ஆவணப்படம் போல ஃபிளாஷ் பேக் காட்சிகள் 20 நிமிடங்கள் செல்கிறது.
இக்கதாப்பாத்திரத்துக்கு முதலில் தேர்வானவர் அர்னால்டு. நல்லவேளை அவர் ஒப்பந்த பிரச்சனை காரணத்தால் நடிக்கவில்லை. இக்கதாப்பாத்திரத்துக்கு இந்திய முகமே சரியான தேர்வு, அக்க்ஷய் அதற்குப் பொருத்தமானவர்.
அக்க்ஷய்க்கு இன்னும் கெத்தான, சவாலான காட்சிகள் வைத்து இருக்கலாம். அக்க்ஷய்க்கு குரல் கொடுத்தது நடிகர் ஜெயபிரகாஷ்.
அக்க்ஷய் கதாப்பாத்திரம் வில்லன் என்றாலும், அவர் எண்ணங்கள் சரி, வழிமுறைகள் தவறு.
ரெட் சிட்டி
ரெட் சிட்டி 15 கிலோ உடையுடன் பார்க்கவே முரட்டுத்தனமா, செம்ம கெத்தாக உள்ளது.
அறிமுகத்தில் வில்லன் சிரிப்பை சிரித்து வசனம் போது நம்மையறியாமல் உற்சாகமாகி விடுவோம். படத்தை அதகளம் செய்வது ரெட் சிட்டி தான்.
வில்லன் சிரிப்பு சிரித்து, “செத்துப் பிழைக்கிறதே ஒரு தனிச் சுகம் தான்” என்று கூறும் போது திரையரங்கம் அதிர்கிறது.
இதன் பிறகு வரும் 25 நிமிடங்களும் 10 நிமிடங்கள் போலக் கடந்து செல்கிறது.
அக்க்ஷய் கஷ்டப்பட்டுச் செய்ததை ரெட் சிட்டி மிக எளிதாக இரு வசனங்களில், உடல் மொழியில் அனைவரையும் கவர்ந்து விடுகிறது.
“வாங்கடா செல்ஃபி புள்ளைகளா” என்று தனக்கே உரிய பாணியில் அழைத்து ரெட் சிட்டி வெளுத்து வாங்குவதற்குப் பார்வையாளர்களிடையே பலத்த வரவேற்பு.
சில சுவாரசியமான வசனங்கள் இருந்தாலும், சுஜாதாவை ஷங்கர் தவறவிடுவது எளிதாகத் தெரிகிறது.
ரெட் சிட்டி கதாப்பாத்திரத்துக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கி இருந்தால், இன்னும் தாறுமாறாக இருந்து இருக்கும். சீக்கிரம் முடிந்து விட்டதே! என்ற ஏமாற்றத்தை தவிர்க்க முடியவில்லை.
ஸ்பைடர்மேன், சூப்பர் மேன் போல நமக்குச் சிட்டி கதாப்பாத்திரம் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதில் ஒரு பிரச்னை, இதை ரஜினியை தவிர எவர் செய்தாலும், எடுபடாது. சிலரை யோசித்துப் பார்த்தேன், திகிலாகி விட்டது.
அமீர் கான் “தன்னால் சிட்டி கதாப்பாத்திரத்தில் ரஜினி போல நடிக்க முடியாது” என்று கூறி ஒதுங்கியது ஏன் என்று புரிகிறது.
ரகுமான்
உலகத்தரத்தில் பின்னணி இசையுள்ளது ஆனால், படத்தில் மனதில் நிற்கும் பின்னணி இசையாக எந்திரனுக்குப் போட்டது தான் உள்ளது. BGM தனியாக வெளியிட வேண்டுகிறேன்.
ரசூலின் உழைப்பு நன்கு தெரிகிறது. இருவரின் உழைப்பை உணர நல்ல ஒலி அமைப்புடைய திரையரங்கில் பாருங்கள்.
படத்தில் பாடல் காட்சிகளே இல்லை, சில நிமிடங்கள் மட்டும் பின்னணி காட்சிகளாக வருகிறது. ராஜாளி பாடலை திரையரங்கில் கேட்கும் போது தாறுமாறாக இருக்கிறது.
கிராஃபிக்ஸ்
கிராஃபிக்ஸ் பற்றி ஏற்கனவே, நிறையப் பேர் கூற கேட்டு படித்து இருப்பீர்கள். எந்திரன் படத்து விமர்சனத்தில் கூறியதையே இங்கும் கூறுகிறேன்.
நம்மிடமும் பணம் இருந்தால் நாமும் ஹாலிவுட்டுக்கு நிகராக, அவர்களை விட மேம்பட்ட தரத்தில் கொடுக்கலாம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஷங்கர்
இப்படத்தின் சிறப்புகள் அனைத்தும் இயக்குநர் ஷங்கரையே சாரும். அவருடைய அபரிமிதமான கற்பனை, சிந்தனை, அதைச் செயல்படுத்திய விதம் என்று அவரை நினைத்தாலே பிரம்மிப்பாக உள்ளது.
ஷங்கர் என்ன சொன்னாரோ அதை மட்டும் தான் செய்தேன் என்று ரஜினியும் கூறி இருக்கிறார்.
தமிழ் படத்துக்கு உலக அரங்கில் கவனம் கிடைக்கக் காரணமாக இருந்த ஷங்கருக்கும், அவரின் கற்பனையை நிஜமாக்க உதவிய ரஜினி, அக்க்ஷய், ரகுமான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைவரையும் குடும்பத்துடன், குறிப்பாகக் குழந்தைகளுடன் சென்று படத்தை 3D யில் பார்த்து ரசிக்கப் பரிந்துரைக்கிறேன்.
கொசுறு 1
படம் முடிந்ததும், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களோடு “எந்திர லோகத்து சுந்தரி” பாடல் வருகிறது. பாடல் தானே! என்று எழுந்து சென்று விடாதீர்கள். 3D யில் பார்க்க அசத்தலாகவுள்ளது.
பாடல் முடிந்த பிறகு ஒரு சுவாரசியமான காட்சியுமுள்ளது .
கொசுறு 2
படத்தை 3D யில் மட்டுமே பாருங்கள், அப்போது தான் கூடுதலாக ரசிக்க முடியும். காலைக் காட்சி ரோகிணி மற்றும் மாலை சாந்தம் (சத்யம் குழுமம்) திரையரங்குகளில் பார்த்தேன். சாந்தம் தான் சிறப்பு.
படம் முடிந்து வந்த பிறகு, என்னோட பசங்க இருவரும் “சிட்டி” போலச் செய்து காட்டிக்கொண்டு இருந்தார்கள்.
- கிரி
|