‘ஜக்குபாய்’ பிரஸ் மீட்டில் சூப்பர் ஸ்டார் உணர்த்திய நிதர்சனம்!
Wednesday January 06, 2010
விவேக் ஒரு படத்தில் காமெடி காட்சியில் கேட்பார், “டேய் என்னாடா இது?” என்று… உடனே அந்த நபர், “இதோ இப்போ எடுத்தீங்களே இந்த பாட்டோட திருட்டு வி.சி.டி. சார்!” என்று பதில் கூறுவார். அது போல, சரத்குமார் நடித்த ஜக்குபாய் படம் ரிலீசாவதற்கு முன்பே ஆயிரக்கணக்கில் திருட்டு வி.சி.டி.யாகவும், இண்டர்நெட்டிலும் வெளியாகியுள்ளது. இதனால் திரை உலகினர் அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக கோடிக்கணக்கில் பொருட்செலவு செய்து படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் ராதிகாவும் சரத்குமாரும்.
இதை கண்டிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை அழைத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம் பிரிவியூ தியேட்டரில் அவசரமாக கூடி ஆலோசித்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தார்கள். அப்போது, பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நமக்குள்ளே எதிரியை வைத்துக்கொண்டு வெளியே தேடுவதா என்று நியாயமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.
சூப்பர் ஸ்டார் பேசியதாவது:
“இந்த பிரஸ் மீட்டுக்கு வரணும்னு சரத்தும் ராதிகாவும் நேத்திலிருந்து என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருந்தாங்க. இது ஜக்குபாய் சந்பந்தப்பட்ட பிரஸ் மீட். அங்க நாம எதுக்கு.. என்றுதான் முதலில் யோசித்தேன். ஒரு மாரல் சப்போர்ட்டுக்காக நீங்கள் வரணும் என்றார்கள். அதனால் நட்புக்காகஇங்கே வந்தேன்.
இந்த ஜக்குபாய் திருட்டு விசிடி பத்தி நிறைய பேசினாங்க. அதையெல்லாம் அப்புறமா பார்ப்போம். அதுக்கு முன் நான் ஒண்ணு சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க!
இந்தக் கதையப் பத்தி எனக்கு நல்லா தெரியும். வசாபின்னு ஒரு பிரெஞ்சுப் பட தழுவல்தான் இந்த ஜக்குபாய். இது நான் நடிக்கிறதா இருந்த படம். சில காரணங்களால டிராப் ஆயிடுச்சு. ஜக்குபாய்னு இந்த டைட்டில் வச்சது சரியில்ல போல… அதனால இந்தப் படத்தை நான் அறிவிச்ச பிறகு மூணு மாசமா ஒரு இன்ச் கூட மூவ் ஆகல. சரி, ஏதோ தடுக்குதுன்னு வேண்டாம்னு விட்டுட்டேன்.
ஆனா இந்தப் படத்தோட கதை நல்லா இருக்கும். இதுல, வர்ற கேரக்டர் அலெக்ஸ் பாண்டியனை விட பத்துமடங்கு பவர்புல்லானது. அந்தக் கேரக்டருக்கு வயசான பிறகுதான், தனக்கொரு மகள் வெளிநாட்டுல கோடீஸ்வரியா இருக்கிறது தெரிய வருது. கூடவே, அந்தப் பெண்ணை கொலை பண்ண சிலர் துரத்துவதும் தெரிய வருது. ஏன் இப்படி துரத்துறாங்க, எப்படி அதிலிருந்து தப்பிச்சு அந்த கேர்ளை இந்தியாவுக்கு கூட்டிட்டு வர்றார் ஹீரோங்கிறதுதான் கதை.
இந்தப் படத்துல நான் வயசான கெட்டப்ல வர்ற மாதிரி இருக்கும். நமக்கு ஏற்கெனவே வயசாகிப் போச்சி. படத்திலயும் வயசான கெட்டப்பா… இன்னும் ரெண்டு மூணு வருஷத்துக்கு சின்னப்பையனா நடிச்சிட்டு அப்புறமா வயசான ரோல்ல நடிக்கலாம்னு நினைச்சேன். (உடனே, தலைவரே சொல்லிட்டாரு இன்னும் ரெண்டு, மூணு படம் நடிப்பாருன்னு அப்படி இப்படி என்று கற்பனை குதிரையை தட்ட வேண்டாம். இப்படி அவர் நினைத்தது ஜக்குபாய் படத்தை அவர் டிராப் செய்த 2004 ஆமாண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்).
அப்புறம் சில மாசம் கழிச்சி, நான் சரத்தை வச்சி ஜக்குபாய் ஆரம்பிக்கிறேன்னு ரவிக்குமார் சொன்னார். நமக்கு தான் அந்த பேறு ஒர்க் அவுட் ஆகலை, ஆனா சரத்துக்கு நல்ல ஒர்க் அவுட் ஆகும்போலன்னு நினைச்சி நானும் சரின்னுட்டேன். இப்போ வந்து, இந்தப் படம் திருட்டு விசிடில, இன்டர்நெட்ல வந்துடுச்சின்னு சொன்னாங்க. அது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குன்னு ராதிகாவும் சரத்தும் வருத்தப்பட்டாங்க. நியாயம்தான். ஆனா பாருங்க… இதைவிட ஒரு நல்ல பப்ளிசிட்டி உங்களுக்குக் கிடைக்காது. அஞ்சு கோடி, பத்துகோடி செலவு பண்ணாலும் கூட கிடைக்காத பப்ளிசிட்டி இது. இதையும் நீங்க யோசிக்கணும். அதனால இப்பவே படத்தை ரிலீஸ் பண்ணிடுங்க. சக்ஸஸ் ஆகிடும்.
அடுத்து இங்க சிலர் பேசும்போது ரசிகர் மன்றத்தினருக்கு காசு கொடுத்து, திருட்டு விசிடி விக்கிறவங்களை அடிக்கச் சொல்லலாம்னு யோசனை சொன்னாங்க. நோ…நோ… அது தப்பு… லா அண்ட் ஆர்டரை மீறும் செயல். இன்னொன்னு ரசிகர்களை தப்பா யூஸ் பண்ணக் கூடாது.
இந்தப் பிரச்சினை எங்கிருந்து வந்தது? சினிமாவுக்குள்ளிருந்ததான். நமக்குள்ள இருக்குற இந்த வேலைய செய்றாங்க. அதுக்கு மக்களை ஏன் பிளேம் பண்ணனும்? ரசிகர்களை எதுக்கு கூப்பிடனும்? தியேட்டர்லருந்து பிரிண்ட் வெளியில போகுதுன்னு தெரிஞ்சா அந்த தியேட்டரை தடை பண்ணுங்க. ஒரு லேப்லருந்து வெளியில போதுன்னு தெரியுதா… அந்த லேப்பை நிப்பாட்டுங்க. எபெக்ட்ஸிலிருந்து போகுதா… அதையும் கட் பண்ணுங்க. சும்மா யாராவது ஒருத்தர் மேல பழிபோடக் கூடாது.
உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்… எந்த படமா இருந்தாலும் படம் நல்லாருந்தாதான் யாரும் பார்ப்பாங்க. நல்லா இல்லேன்னா, எப்பேர்ப்பட்ட படத்தையும் தூக்கிப் போட்டுடுவாங்க. யார் சொன்னாலும் பார்க்க மாட்டாங்க. அதேபோலத் தான் பிரஸ்ஸூம். நல்லாயிருந்தா இவங்க நல்லா தான் எழுதுவாங்க. அப்படி இல்லேன்னா, இவங்க சரியா எழுதமாட்டாங்க. அது தான் உண்மை.
அதனால திருட்டு விசிடி தடுப்பது எப்படின்னு நமக்குள்ள கூடிப் பேசணும். அதுக்கு பிரஸ்ஸை கூப்பிட்டு என்ன பண்ணப் போறீங்க? எல்லாவற்றையும் ஆலோசனை செய்து தெளிவா முடிச்சிட்டு பிரஸ்ஸுக்கு சொல்லணும்.
அப்புறம் இங்க சேரனும் கமலும் ஒரு விஷயம் சொன்னாங்க. ‘எங்களுக்கு சினிமாவை தவிர எதுவும் தெரியாது. இதைவிட்டுட்டு நாங்க எங்க போவோம்னெல்லாம்’ சொன்னாங்க ஒருவேளை நான் முன்ன கண்டக்டரா இருந்ததால, திரும்பவும் கண்டக்டர் வேலைக்கே போயிடுவேன்னு நினைச்சிட்டாங்க. இல்ல… எனக்கும் சினிமாதான் எல்லாம்!” என்றார்.
ரஜினி, கமல், சரத் உள்ளிட்ட திரைத்துறையினர் முதல்வரை கோட்டையில் சந்தித்து மனு!
Saturday January 09, 2010
சரத்குமார் நடித்த ‘ஜக்குபாய்‘, திரைப்படம், ரிலீசுக்கு முன்பே இதன் திருட்டு விசிடி வெளியானதை அடுத்து, திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து கடந்த 5ந் தேதி தயாரிப்பாளர் சங்கர், நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்பட திரையிலகினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திருட்டு சி.டி. ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து, தமிழ் திரையுலகம் சார்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், நடிகர் சங்க தலைவர் சரத் குமார் உட்பட பல திரை நட்சத்திரங்கள் தமிழக முதல்வரை தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்தனர்.
ஜக்குபாய் ப்ரீமியரில் சூப்பர் ஸ்டார் - உற்சாகத்தில் மிதந்த சத்யம் வளாகம்!
Friday January 29, 2010
சத்யம் திரையரங்கில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற ஜக்குபாய் பிரீமியர் நட்சத்திரங்களின் அணிவகுப்பால் களைகட்டியிருந்தது. எனினும் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் துருவ நட்சத்திரத்துக்கு ஈடாகுமா? சூப்பர் ஸ்டாரின் வருகையால் உற்சாக அலையில் மூழ்கியது சத்யம் வளாகம் என்றால் மிகையாகாது.
|