Related Articles
லாபத்தை பங்கிடுவதில் முதலாளி எப்படி இருக்கவேண்டும்? - FEFSI மாநாட்டில் ரஜினியின் பன்ச்
நடிகர் நடிகை சங்க கண்டனக் கூட்டத்தில் ரஜினி
கமல் 50 பிரமாண்ட பாராட்டு விழாவில் தலைவர் ரஜினி
என் குருநாதர் பாரதிராஜாவைவிட ரஜினிக்கு என் குடும்ப உறவுகள் மேல் அதிக அட்டாச்மென்ட் - மணிவண்ணன
Director Shankar interview on Enthiran movie and new movie stills
Superstar Rajinikanth at South Indian Cinema artists 80s theme party
மக்களுக்கு பயன் தரக் கூடிய பல சமூகப் பணிகளில் ரஜினி ரசிகர்கள்
மணிவண்ணன் மகள் திருமணத்தை சூப்பர் ஸ்டார் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்
10 Reasons to watch Sultan, The Warrior
சூப்பர் ஸ்டார் ரஜினி விஜிபி இல்லத் திருமண விழாவில்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பாலகுமாரன் வீட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி - திரு. பாலகுமாரனுடன் நமது சந்திப்பு
(Thursday, 22nd October 2009)

பிரபல நாவலாசியரும் எழுத்தாளருமான திரு.பாலகுமாரன் ‘பாக்கெட் நாவல்’ இதழில் சூப்பர் ஸ்டார் ரஜினி சமீபத்தில் தனது வீட்டிற்கு வந்தது பற்றி கூறியிருந்தார். நண்பர் ஒருவர் அதை நம்மிடம் சொல்ல, உடனே அது பற்றி நமது தளத்தில் செய்தி வெளியிடலாம் என்று எழுத முயற்சிக்கையில் - நேரடியாக திரு.பாலகுமாரன் அவர்களிடமே அது பற்றி பேசி அந்த புகைப்படத்தையும் பெற்று செய்தியை வெளியிட்டால் நன்றாக இருக்குமே - என்றெண்ணி அவரை தொடர்புகொண்டேன்.

நாம் முதன் முதலில் தொடர்புகொண்ட போது, எப்படி பேசுவார் எப்படி ரியாக்ட் செய்வார் என்று எனக்கு ஒரே சஸ்பென்சாக இருந்தது. (காரணம் இதுவரை நமக்கு பல CELEBRITY க்களிடம் கிடைத்த அனுபவங்கள் அப்படி.) ஆனால் நாம் எதிர்பார்த்ததைவிட மிகவும் பணிவாகவும் பொறுமையாகவும் நம்மிடம் பேசினார் திரு.பாலகுமாரன். (மேன் மக்கள், மேன் மக்களே!!) நம்மை பற்றியும் நமது தளத்தை பற்றியும் விளக்கி  கூறி நாம் தொடர்புகொள்ளும் நோக்கத்தை கூறினேன். “நான் ஒரு ரஜினி ரசிகன் தான். பத்திரிக்கையாளன் அல்ல. உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக்கொள்ளமாட்டேன் ஐயா. ஜஸ்ட் உங்களை நேரில் சந்திக்கவேண்டும் என்ற என் ஆவலை இதன் மூலம் பூர்த்தி செய்துகொள்கிறேன், அவ்வளவு தான்” என்று கூறினேன். இரண்டு நாள் கழித்து காலை வேளையில் ஒரு போன் செய்துவிட்டு வீட்டிற்கு வருமாறு கூறினார்.

குறிப்பிட்ட நாள்  (செவ்வாய் கிழமை  13/10/2009) அன்று காலை சுமார் 8.00 மணிக்கு மீண்டும் ஒரு முறை அவரை தொடர்புகொண்டு நாம் வருவதை அவருக்கு நினைவூட்டினோம். 9.30 க்கு வந்தால் தமக்கு சௌகரியமாக இருக்கும் என்றார். அவர் வீட்டிற்கு எப்படி வருவது என்றும் நம்மிடம் தெளிவாக விளக்கினார். அலுவலகத்திற்கு பெர்மிஷன் போட்டுவிட்டு, மைலாப்பூரில் உள்ள அவர் வீட்டிற்கு சென்றோம்.

ரஜினிக்கும் அவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அவரது வீட்டு காம்பவுண்டே சொல்லாமல் சொல்லியது. அந்த பகுதி ரசிகர் மன்றம் சார்பாக வரையப்பட்டிருந்த சூப்பர் ஸ்டாரின் சித்திரம் ஒன்று நம்மை வரவேற்றது. கீழே காம்பவுண்டுக்குள் யோகி ராம் சுரத் குமார் என்று எழுதப்பட்டிருந்த அவரது ரெட் கலர்  மாருதி ஜென்  நின்றுகொண்டிருந்தது.

கீழே நின்றுகொண்டு அவருடைய செல்லில் நாம் வந்திருக்கும் விபரத்தை சொன்னவுடன், “உடனே மேலே வாங்க” என்றார்.

காலிங் பெல்லை அழுத்தி காத்திருக்க அவரது வீட்டில் கதவை திறந்தார்கள். நமது பெயரை சொன்னவுடன், உள்ள அழைத்து, ஹாலில் இருந்த ஒரு இருக்கையில் உட்காருமாறு சொன்னார்கள்.

நாம் அந்த சேரில் அமர்ந்து காத்திருந்தோம். அந்த அறை முழுக்க நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அது ஒரு வித தெய்வீக மணம் என்றே சொல்லலாம். ஹாலின் ஒரு பகுதி தான் பூஜையறையும் கூட. பூஜையறையில் பெரிதாக வைக்கப்பட்டிருந்த விசிறி சாமியார் நம்மை பார்த்து புன்னகைத்தார். சில நிமிடங்கள் நாம் அந்த “AURA” வில் லயித்திருந்தபோது முன்பொரு முறை, பாலகுமாரன் தனக்கு சூப்பர் ஸ்டாருடன் ஏற்பட்ட ஒரு அனுபவம் பற்றி ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது.  ரஜினி எந்தளவு ஒரு பண்புள்ள மனிதர் என்பதையும் பாலகுமாரன் மீது அவர் வைத்திருக்கும் மதிப்பு எந்தளவு உயர்ந்தது என்பதையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

அதாவது 1994 ஆம் ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன்.  ஒரு சிறிய அறையில்  ‘பாட்ஷா’ படத்தின் கதை விவாதத்தில் சூப்பர் ஸ்டார், சுரேஷ் கிருஷ்ணா, பாலகுமாரன்  மூவரும் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட காட்சியை பற்றி ஒரு கட்டத்தில்  எழுந்து நின்று மூன்று பேரும் ஆர்வமாக விவாதித்துகொண்டிருக்க, அது பற்றி தனது கருத்தை ஆர்வமாக விளக்கிக்கொண்டிருந்த பாலகுமாரன், பேச்சுவாக்கில் அப்படியே சுற்றி வந்து சூப்பர் ஸ்டாரின் இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதை சிறிது நேரம் கழித்து, இதை கவனித்து விட்ட சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர் ஸ்டாருக்கு தெரியாமல் “அவர் சேர்ல உட்கார்ந்துட்டீங்க… எழுந்திரிச்சிடுங்க” என்று சைகையில் பாலகுமாரனுக்கு சுட்டிக் காட்ட, பாலகுமாரன் உடனே எழ எத்தனிக்க, இதையெல்லாம் கவனித்துவிட்ட சூப்பர் ஸ்டார் ஓடி வந்து தடுத்துவிட்டார். “அட… பரவாயில்ல… நீங்க உட்காருங்க…. No problem” என்று அவரை ஆசுவாசப்படுத்தினார். “என்ன சுரேஷ் இது.. சார் என் சேர்ல உட்கார்ந்தா என்ன இப்போ…?” என்று சுரேஷ் கிருஷ்ணாவையும் கடிந்து கொண்டார்.

அதற்க்கு பிறகு சிறிது நேரம் கழித்து பாலகுமாரன் ரஜினியின் சேரில் இருந்து எழுந்துகொண்டாலும், பாலகுமாரனுக்கு சங்கடத்தை தவிர்க்கும் பொருட்டு சூப்பர் ஸ்டார் கடைசி வரை அந்த சேரில் உட்காராது நின்றுகொண்டே இருந்தாராம். - இந்த செய்தி நம் தளத்தில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

இவ்வாறு பாட்ஷா காலத்து நினைவுகளில் நான் சிறிது மூழ்கியிருந்த நேரம்,  தனது அறையிலிருந்து சட்டென வெளியே வந்தார் திரு.பாலகுமாரன்.

அவரை பார்த்தவுடன் கை கூப்பி “வணக்கம்” கூறிக்கொண்டே நமது இருக்கையைவிட்டு எழுந்து முன் சென்று அவரது காலில் வீழ்ந்து “சார் என்னை ஆசீர்வதிக்கணும்” என்று கூறி ஆசிபெற்றேன். நமக்கு ஆசி கூறியவர், நம்மை சௌகரியமாக அமரச் செய்தார்.

நம்மிடம் பேசுவதற்கு முன்பு, நம்மை பார்வையால் ஒரு முழு ஸ்கேனிங் செய்தார். கண்களை மூடி சிறிது தியானத்தில் ஆழ்ந்தார். அதுவரை ஒரு வித நெர்வஸாக உணர்ந்த நான் பிறகு ஈசியானேன்.

நம்மை பற்றியும் நமது தளத்தை பற்றியும் அவருக்கு சுருக்கமாக எடுத்துக்கூறினோம். பின்னர் நமது தளத்தில் வெளியான - நண்பர் நோபிள் அலெக்ஸ் எழுதிய செப்புக் காசும்  தங்கப் புதையலும், ஈராவின் ராமகிருஷ்ண பரமஹம்சரும் ரஜினி ரசிகர்களும் கதை, நடிகர் மயில்சாமி சூப்பர் ஸ்டார் பற்றியும் திருவண்ணாமலை விசிறி சாமியார் பற்றியும் கூறிய அனுபவங்கள், மௌனம் புத்தகத்தில் சூப்பர் ஸ்டார் எழுதிய கட்டுரை பற்றிய பதிவு - உள்ளிட்ட சில முக்கிய பதிவுகளின் பிரிண்ட்களை அவரிடம் அளித்தோம்.

“உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இதை படிச்சிட்டு உங்களுடைய் மேலான கருத்துக்களை எனக்கு சொல்லணும் சார்” என்று விண்ணப்பம் வைத்தோம்.

“ஆகட்டும்…!!” என்றார்.

அதற்க்கு பிறகு நமது உரையாடல் துவங்கியது. ‘கேள்வி-பதில்’ போன்று இல்லாமல் ஒரு யதார்த்தமான உரையாடலாகவே அமைந்தது நமது சந்திப்பு. (இந்த சந்திப்பின் போது நமக்கு ஏற்பட்ட சோதனை ஒன்றையும் அது எப்படி அகன்றது என்பது பற்றி கடைசியில் விரிவாக விளக்கியிருக்கிறேன்.)

balakumaran_rajini61நமது உரையாடல் ஆரம்பிக்கும் தருவாயில், “ஐயா உங்களை ஒரு போட்டோ எடுக்க ஆசைப்படுகிறேன்” என்றேன். “ஒ… தாரளமா…” என்று கூறி, நாம் புகைப்படம் எடுக்க வசதியாக அமர்ந்து கொண்டார். சில புகைப்படங்களை நாம் எடுக்க, எடுத்த புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்து அதை பயன்படுத்துமாறு கூறினார். (அருகே நீங்கள் காண்பது நாம் எடுத்த அந்த புகைப்படம்).

பாட்ஷா வெளியான புதிதில் (1995) குங்குமத்தில் கதை விவாதத்தின்போது எழுதிய ‘சூரியனோடு சில நாட்கள்’ தொடரை பற்றி கூறி, “அப்போதிலிருந்தே நீங்கள் எங்கள் உள்ளத்தில் இடம்பெற்றுவிடீர்கள் சார்” என்றேன். (சூப்பர் ஸ்டாருடன் தாம் பாட்ஷாவில் பணிபுரிந்த அனுபவம் பற்றி அந்த தொடரில் விரிவாக கூறியிருந்தார் பாலகுமாரன்).

அவரது நூல்களை பற்றி மெல்ல நமது பேச்சு திரும்பியது. ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வரலாற்று நூலான “உடையார்” என்னும் நூலை நூலை பற்றி சிறிது பேசினோம். மொத்தம் ஆறு பாகங்களாக அந்த நூல் வெளிவந்துள்ளது.  நட்ராஜ் உள்ளிட்ட சூப்பர் ஸ்டாரின் நண்பர்கள் அந்த நூலை படித்துவிட்டு பாராட்டியிருப்பதாக சொன்னார்.

“போன வருஷம் ராகவேந்திர சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றை “பிருந்தாவனம்” என்ற பெயரில் நூலாக எழுதினேன். ‘தமிழகத்தில் ஸ்ரீ ராகவேந்திரரை அறிமுகபடுத்திய ரஜினிகாந்துக்கு இந்நூல் சமர்ப்பணம்’ என்று அதை ரஜினிக்கு DEDICATE செய்திருக்கிறேன். அதை ரஜினியிடம் கூட நான் சொல்லவில்லை. சமீபத்தில் வந்தபோது தான் இதை சொன்னேன். “அட அப்படியா… எனக்கு தெரியாதே… ஏன் என்கிட்டே சொல்லலை”ன்னு கோபித்துக்கொண்டார். “சொல்ல தோணலை. இதையெல்லாம் போய் சொல்லனுமா… இது ஒரு ஆத்மார்த்தமான விஷயம்” அப்படின்னு சொன்னேன். “அது தான் பாலகுமாரன்” ன்னு சொன்னாரு ரஜினி அதுக்கு.

(1998 ஆம் ஆண்டு, திரு.பாலகுமாரன் யோகக் கலைகள் பற்றி, “கற்றுகொண்டால் குற்றமில்லை” என்னும் ஒரு நூலை எழுதியிருந்தார். அந்த நூலையும், “தமிழக மக்களுக்கு என்றும் நல்லதையே சொல்லிவரும் என் நண்பர் ரஜினிக்கு இந்த நூல் சமர்ப்பணம்” என்று ரஜினிக்கே DEDICATE செய்திருந்தார். பிற்பாடு நண்பர் ஈ.ரா. கூற இதை தெரிந்துகொண்டேன்.)

ரஜினி சார் இங்க வந்துட்டு போன அனுபவத்தை சொல்லுங்க ஐயா …

“அது ஒரு அதிசயம். ஆச்சரியம் கூட. நான் கொஞ்சம் கூட எதிபார்காத நேரத்துல அது நடந்தது. சில வாரங்களுக்கு முன்பு, திடீர்னு ஒரு நாள் ரஜினி சார் கிட்டேயிருந்து ஃபோன் வந்தது. “உங்களை பார்க்க வேண்டும் என்று தோணுது. அதனால் வர்றேன். ஒரு பத்து நிமிஷத்துல வந்துடுவேன்” என்று கூறிவிட்டு ஃபோனை வெச்சுட்டாரு. இங்க என் வீடு ஒரே பரபரப்பாயிடுச்சு.

“சொன்னது போலவே பத்து நிமிஷத்துல என் வீட்டுக்கு வந்தார்…. தனியாக!! ரொம்பவே எளிமையான ஒரு தோற்றத்துல ஒப்பனையின்றி யதார்த்தமாக வந்ததால் அவர் என் வீட்டிற்கு வந்த விபரம் வாசலில் இருந்தவர்களுக்கு, அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.  வீட்டில் அவர் வந்த நேரத்துல மூணு ரசிகர்களும், என் மைத்துனரின் குழந்தைகளும் கணினி, BLOG, இவற்றில் எனக்கு உதவி புரியும் ஒரு பெண்மணியும் இருந்தார்கள்.”

(இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சூப்பர் ஸ்டார் ரஜினி பாலகுமாரன் அவர்கள் வீட்டிற்கு வந்தது திட்டமிட்டு அல்ல. திடீரென போன் செய்து திடுதிப்பென வந்துவிட்டார். இருப்பினும் அவர் பாலகுமாரன் இல்லத்திற்கு வந்த நேரம் பாலகுமாரனுக்காக அவரது எழுத்து மற்றும் பிற பணிகளில் அவருக்கு உதவுபவர்களும் எதேச்சையாக அந்த சமயத்தில் அங்கிருந்திருக்கிறார்கள் என்பது தான் விஷேஷம். தன்னலம் கருதாது ஒரு தூய மனிதருக்கு தொண்டாற்றுபவர்களுக்கு எல்லாம் தானாக நடக்கிறது பார்த்தீர்களா?)

“அவர் வீட்டிற்கு வந்ததும் அனைவருக்கும் மூச்சு திணறிப் போனது. உலக மக்களுக்கு நடுவே பிரகாசமாக இருக்கும் அந்த மாமனிதர் என் வீட்டிற்கு சாதரணமாக வந்ததும் - வந்தவுடன் - கை கூப்பி - பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் என் குருநாதர் திருவண்ணாமலை மகான் யோகி ராம் சுரத் குமாரின் படத்தை பார்த்து பணிவோடு வணக்கம் செய்ததும் எனக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது.”

அவரை நேரில் சந்தித்ததில்லை என்றாலும் அந்த மகானுடன் தனக்கு ஏற்பட்ட ஒரு ஆத்ம அனுபவத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார். கடுமையான நிசப்தத்தில் என் வீடு அதை கவனத்துடன் கேட்டுக்கொண்டது. நான் வசனம் எழுதிய படங்களை பற்றி பேசினார். ஆன்மீக விஷயங்களை பற்றி பேசினார்.

என் வீட்டில் அவருக்கு குளிர்ந்த மோர் கொடுத்தார்கள். அன்புடன் பருகினார். அவருடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள எல்லோரும் பரபரக்க அமைதியாய் நின்று அனைவருடனும் படமெடுக்க உதவினார். (நம் கையில் அந்த செல்போன் படங்களை காண்பித்தார். சூப்பர் ஸ்டார் கருப்பு நிற வேட்டி வெள்ளை சட்டையில் மிகவும் யதார்த்தமான ஒரு தோற்றத்தில் அட்டகாசமாக இருந்தார்.)

சுமார் அரை மணிநேரத்திற்கும் மேல் இருந்துவிட்டு  அவர் கிளம்ப படிகளில் இறங்கியபோது, மெல்ல விஷயம் கசிந்து ஒரு பெரிய கூட்டமே சூழ்ந்துகொண்டது. என் வீட்டில் காணப்பட்ட அந்த பரபரப்பு அந்த தெரு முழுக்க தொற்றிகொண்டது. என்னையும் அவருடன் காரில் அழைத்துக்கொண்டு கிளம்ப உத்தேசம். கூட்டத்தை விளக்கிவிட்டு என்னால் காரில் ஏறவே முடியாமல் திணறினேன். சுமார் இரண்டு மணிநேரம் அவ்ருடன் காரில் என்னுடைய ஆன்மீக அனுபவங்களை விவரித்தபடியே பயணம் செய்தேன். பல விஷயங்களை இருவரும் மனம் விட்டு பேசினோம். அவரது அவரது கேளம்பாக்கம் பண்ணை வீடு, அங்கு அருகில் இருக்கும் ஒரு கோவில் என எங்கள் நேரம் இனிமையாக கழிந்தது.

ராகவேந்திரா மண்டபத்திற்கு அழைத்து சென்று தனது நண்பர்கள் பலரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். திரு.விட்டல், திரு.முரளி, இயக்குனர் திரு.நடராஜ் ஆகியோரை இளம் வயதிலிருந்தே நான் அறிவேன். நீண்ட காலம் கழித்து மறுபடியும் அவர்களை சந்தித்தபடியால் அகம் மலர கைகூப்பினேன். சிறிது நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவர்களுடன் மதிய உணவு அருந்தினேன். சூப்பர் ஸ்டார் வலது புறம் அமர, மற்ற நண்பர்கள் எதிரே உட்கார எனது மதிய உணவை அருந்தினேன்.

வீட்டிற்கு திரும்ப வந்தபோது, அனைத்தும் கனவு போல தோன்றியது. இந்த சந்திப்பில் திட்டமிடல் இல்லை, எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வெகுநாட்கள் கழித்து ஒரு நண்பரை சந்திக்கிறோம் என்ற ஒரே சந்தோஷம் தான் இருந்தது. இதை விட வேறு பயன் என்ன இருக்க முடியும்?

ரஜினி அவர்களை பற்றி உங்கள் கருத்து என்ன? (நம்மை சற்று உற்று பார்த்தார் திரு.பாலா). அதாவது சார்… How would you define Rajini? என்றோம் மறுபடியும்… நாம் கேட்ட நோக்கத்தை புரிந்துகொண்டவர்… தீர்க்கமான குரலில் தனது பதிலை கூறினார்.

(ஒரு கணம் ஆழ்ந்து யோசித்தார். அது ஒரு குறுந்தியானம் எனலாம். ரஜினி பற்றிய தனது அனுபவங்களை சற்று ரீவைண்ட் செய்துகொண்டார்.)  பிறகு அழுத்தந்திருத்தமாக பேச ஆரம்பித்தார். “முதலில் அவர் ஒரு நல்ல மனிதர் அய்யா. மத்ததெல்லாம் அதுக்கப்புறம் தான். (இந்த காலத்துல இந்த பேரைக் கூட நிறைய பேரால எடுக்க முடியல!!) உலகாய விஷயங்களில் ஈடுபட்டாலும் அவர் மனம் தான் யார் என்று தெரிந்து கொள்ள இடையறாது முயற்சிக்கிறது. தவிக்கிறது. அந்த தவிப்பு எனக்கு நன்கு புரிகிறது. இதுவே அவர் உயர்ந்தவர் என்பதற்கான சாட்சி.”

நீங்கள் எந்திரனுக்கு வசனம் எழுதுவதாக வந்த தகவல்?

அது உண்மையல்ல.

“விஜய் டி.வி.யில். அண்மையில் ஒளிபரப்பான அவரது இமயமலைப் பயணம் பற்றிய தொடரை பார்த்தீர்களா… அது பற்றி உங்க ஒப்பினியன் என்ன ?”

“அது அவரது தனிப்பட்ட விஷயம். அவரது தேடல் சம்பந்தப்பட்டது. அந்த குகைக்குள் எல்லோரும் போய்விட முடியாது. ஆனால் ஒன்று… அவர் எந்தளவு ஒரு உயரத்திலிருக்கிறார் என்று சிலருக்காவது இப்போது புரிந்திருக்கும்.”

“இறுதியாக ஒன்று கேட்க விரும்புகிறேன் ஐயா. நீங்கள் ரஜினி அவர்களின் நலம் விரும்பி மற்றும் ஒரு நெருங்கிய நண்பர் என்பதால் கேட்கிறேன். ரஜினி அவர்களை ஒரு ஆன்மீகவாதியாக நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது நாடாளும் ஒரு மன்னனாக பார்க்க விரும்புகிறீர்களா?”

சட்டென அவர் சொன்ன பதில் : “அரசியலுக்கு இங்கே நிறைய பேர் இருக்கிறாங்கப்பா. ஆன்மீகத்துக்கு தான் ஆள் இல்லை. அதுவும் அவரை போல ஒரு உண்மையான ஆன்மீகவாதி தான் ஆன்மீகத்துக்கு வேணும். அவரைப் போன்ற நல்ல மனிதர்கள் உண்மையான தேடல் உடையவர்கள் நம் ஆன்மீகத்துக்கு அவசியம் தேவை” என்றார்.

சோதனை தந்த சிலிர்க்க வைக்கும் அனுபவம்…

பாலகுமாரன் அவர்களுடன் நமது உரையாடல் முடிந்தவுடன், நமது தளத்தில் வெளியிட சூப்பர் ஸ்டார் அவரது வீட்டிற்கு வந்த புகைப்படங்களை கேட்டோம். உடனே தனது NOKIA N70 மொபைலை எடுத்து அந்த புகைப்படங்களை காண்பித்தார். “இதுல தான் இருக்கு. உங்க மொபைல்ல ப்ளூ டூத் இருந்தா காப்பி பண்ணிக்கோங்க” என்றார்.

அட… ராமா இதென்னடா சோதனை… என்னிடம் ப்ளூ டூத் மொபைல் இல்லை. திரு திருவென விழித்தேன்.  “சாரி..சார்… என் செட்டுல ப்ளூ டூத் இல்லை.” என்றேன். “அந்தப் படங்கள் எல்லாம் மொபைலில் மட்டுமே இருக்கிறது. இப்போதைக்கு வேறு எதிலும் இங்கு இல்லை” என்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை. பெரிய மனதுடன் எனக்கு அந்த படங்களை அவர் அளிக்க தயாராக இருந்தும் அவருக்கும் வேறு வழி தோன்றவில்லை. நேரமோ கரைந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே அவர் எனக்கு அளித்த நேரத்தை விட கொஞ்சம் அதிக நேரம் செல்வாகிவிட்டிருந்தது. எனக்கு டென்ஷன் அதிகரித்தது. எவ்ளோ பெரிய மனிதர் அவர். எத்துனை பிசியான ஒரு எழுத்தாளர். அவர் நேரத்தை வீணாக்கலாமா… என்னை நான் கடிந்துகொண்டேன்.

காத்திருந்த பாலகுமாரன் அவர்களிடம், “பெரிய மனது பண்ணி என்னை மன்னிச்சிடுங்க சார். உங்க நேரத்தை வீணடிக்கிறேன். ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுங்க… பக்கத்துல இருக்கிற என் நண்பர் ஒருத்தர் கிட்டே ஓடிப் போய் ஒரு ப்ளூ-டூத் செட் வாங்கிட்டு வந்துடுறேன். வந்து காப்பி பண்ணிட்டு ஓடிடுறேன்” என்று திரு.பாலகுமாரனிடம் சொல்ல, என் நிலை உணர்ந்த அவர்  “சரி..!” என்று சம்மதித்தார்.

உடனே உடனே ராயப்பேட்டையில் இருக்கும் நண்பர் ராஜலிங்கம் என்பவரிடம் செல்லை வாங்கிகொண்டு திரும்பி வந்தேன். வந்தவுடன் ப்ளூ டூத்தை ஆன் செய்து படங்களை காப்பி செய்ய எத்தனித்தேன். அங்கு மற்றொரு சோதனை காத்திருந்தது. அதாவது அவசரத்துல கை விட்டா அண்டாவுல கூட கை நுழையாதுன்னு சொல்வாங்க. அது போல ப்ளூ டூத்தை ஆன் செய்து படங்களை பெற அந்த மொபைல் செட் ரகசிய குறியீட்டு எண்ணை கேட்டது. நண்பரை தொடர்பு கொண்டால், நான் இந்த செட்டை வாங்கினதுல இருந்து ப்ளூ டூத்தை ஆப்பரேட் செய்யவேயில்லை. PASSWORD என்னன்னு எனக்கு தெரியாது” என்றார். (அந்த மொபைலை அவர் வெகு சமீபத்தில் தான் வாங்கினாராம்). ஒரு கணம் விரக்தியின் விளிம்பிற்கே சென்றேன். நான்  பேசிக்கொண்டிருக்கும்போதே இயக்குனர் விஷ்ணுவர்தன் அவரை பார்க்க வந்தார். “சரி தம்பி, நீங்க பொறுமையா எடுத்துட்டு கொடுங்க” என்று கூறிவிட்டு அவருடன் தனது அறைக்கு போய்விட்டார் பாலகுமாரன்.

கைகளில் இரு மொபைலையும் வைத்துக்கொண்டு செய்வதறியாது திகைத்தேன். என்னென்னவோ எண்களை PASSWORD போட்டு பார்த்தேன். நேரம் கரைந்து கொண்டிருந்ததே தவிர, நோ யூஸ். பரிதாபமாக இருந்தது என் நிலை. என்ன இப்படி தடங்கல் வருதே.. என்று சோகத்தில் ஆழ்ந்தேன். (ஒரு கணம் என் சூழலில் உங்களைப் பொருத்தி பார்த்தால் உங்களுக்கு என் நிலை புரியும்). எதிரே பூஜையறை சுவற்றில் சிரித்துகொண்டிருந்த விசிறி சாமியாரை பார்த்தேன். “என்ன சுவாமி இது. இப்படி ஒரு சோதனை. சாமி வரம் கொடுத்தும் பூசாரி கொடுக்காத கதையா ஆயிடுச்சே. இந்த படங்களோட இந்தப் பதிவை போட்டால் தானே நன்றாக இருக்கும். கொஞ்சம் தயவு பண்ணக்கூடாதா? ப்ளீஸ்… நீங்க தான் அருள் புரியனும்” என்று உருக்கமாக பிரார்த்தித்து கொண்டேன். என்ன அதிசயம், அடுத்து நான் அப்ளை செய்த எண் “1 2 3″ உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டு படங்கள் திரு. பாலகுமாரனின் மொபைலில் இருந்து ரிசீவ் ஆகத் துவங்கியது. (முதலில் நான் 1111, 0000, 12345 போன்ற  எண்களை போட்டுப்பார்தேனே தவிர இந்த எண்ணை அப்ளை செய்யவில்லை!) தலைவர் கூறிய ‘சோதனை வந்தா தானேய்யா சாதனை’ என்பதை ஒரு கணம் நினைத்துகொண்டேன். சில படங்களை மட்டும் காப்பி செய்துவிட்டு மொபைலை அவரிடம் பத்திரமாக திரும்ப அளித்தேன்.

ஒரு கணம் நினைத்து பாருங்கள்… பாலகுமாரன் அவர்கள் எத்துனை பெரிய மனிதர்… கொஞ்சம் கூட எந்த பந்தாவும் இன்றி அவர் என்னை மரியாதையாக நடத்திய விதம், பொறுமை, என் கேள்விகளுக்கு பதில் சொன்ன பாங்கு, அவரது பணிவு இப்போழுது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கிறது. உண்மையான பெரிய மனிதர்கள் அனைவரும் அப்படித்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. இன்னொன்று… ‘ரஜினி’ என்ற எந்த நல்ல மனிதரின் பெயரை சொல்லி நான் வந்த ஒரே காரணத்துக்காக அவர் மொபைலையே என்னை நம்பி கொடுத்தாரு பாருங்க…. எத்துனை பெரிய விஷயம்.

எல்லாம் முடிந்த பிறகு எழுத்துச்சித்தருக்கு நன்றி கூறிவிட்டு, யோகி ராம்சுரத் குமாரின் படத்தை ஒரு முறை கண்குளிர பார்த்துவிட்டு கிளம்பினோம். (ஒரு நல்ல மனிதரை பார்க்க வந்து எனக்கு ஏற்பட்ட ஒரு தெய்வீக அனுபவத்தை நினைத்தால் சிலிர்க்கிறது எனக்கு. இதை அனுபவிச்சாத் தாங்க புரியும்.)

வெளியே வந்தபோது,

நல்லாரைக் காண்பதும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.

- ஔவையாரின் பாடல் தான் நினைவிற்கு வந்தது.

இந்தப் பதிவை இன்னும் சிறப்பாக கொண்டுவந்திருக்க முடியும் என்று எனக்கு தெரியும். பாலகுமாரன் மிகப் பெரிய மனிதர் என்பதால் சந்திப்பு முழுக்க சற்று பதட்டத்துடனே இருந்தேன். அவரை கூடுமானவரை கேள்விகள் கேட்பதை தவிர்த்தேன். பேசிய அனைத்தையும் மறுபடியும் நினைவு கூர்ந்து எழுத முடியவில்லை. எப்படியாகிலும் எனக்கு மிகுந்த ஒரு மனநிறைவை தந்த ஒரு சந்திப்பு / பதிவு இது என்றால் மிகையாகாது. நல்ல விஷயங்கள் எப்போதும் எளிமையாக தானே இருக்கும்..!!


 
0 Comment(s)Views: 682

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information