நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினி, அம்பிகா, ஜெய்சங்கர், ஜனகராஜ், விஜய்பாபு, தேங்காய் சீனிவாசன்
கௌரவத் தோற்றம்: நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
ஒளிப்பதிவு: ரங்கா
இசை: இசைஞானி இளையராஜா
இயக்கம்: கே.ராஜசேகர்
தயாரிப்பு: என்.வீராசாமி, வி.ரவிச்சந்திரன் (ஈஸ்வரி புரொடக்ஷன்ஸ்)
ரசிகர்கள் அல்லாத பொதுமக்களை, குறிப்பாக பெண்களை அதிகம் கவர்ந்த ரஜினி படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் படிக்காதவனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இருக்கும். திரைக்கதையும் சரி பாடல்களும் சரி சூப்பர் ஹிட்தான்.
கதைப் பற்றி கூற புதிதாக எதுவுமில்லை அனைவரும் அறிந்ததுதான். படிக்காத அண்ணன், தன் தம்பி மீது வைத்து இருக்கும் பாசத்தை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட திரைக்கதை.
இந்த படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்திருந்தது, இதுவும் படத்திற்கு ஒரு மரியாதையை கொடுத்திருந்தது, ரஜினி படம் என்றாலும் நடிகர் திலகம் அவர்களுக்கு எந்த ஒரு மரியாதை குறைவும் வந்து விடக்கூடாத அளவிற்கு அருமையாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
பொதுவாகவே ரஜினிக்கு கஷ்டப்பட்டு முன்னேறும் கதாபாத்திரம் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி இதில் அதற்க்கு கொஞ்சமும் குறை வைக்காமல் அசத்தியிருப்பார். வாடைகைக்கார் ஓட்டும் நபராக வரும் ரஜினி, அதன் மூலம் வரும் வருமானத்தில் தன் தம்பியை படிக்க வைப்பார், ஆனால் அவரின் தம்பியோ சொகுசான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன் அண்ணனின் உண்மையான அன்பை புரிந்து கொள்ளமாட்டார்.
ரஜினிக்கு ஜோடியாக அம்பிகா,இவருக்கு நடிக்க பெரிதாக எதுவும் வாய்ப்பில்லை, கர்ப்பிணி போல நடித்து சாராயம் கடத்துவார், அதை ரஜினி உண்மை என்று நம்பி விடுவார், அடுத்த நாள் பார்த்தால் அம்பிகா சாதாரணமாக இருப்பார்! என்னங்க குழந்தை பிறந்து விட்டதா! என்றால் ம்ம் ஸ்கூலுக்கு போய் விட்டது என்று ரஜினியை அதிர வைப்பார். அதை பற்றி தன் வளர்ப்பு தந்தை நாகேஷிடம் விளக்கம் கேட்பது காமெடியாக இருக்கும், தற்போது இவை லாஜிக் இல்லாத காமெடியாக தெரிந்தாலும் அப்போது அனைவராலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.
படிக்காதவன் படத்தில் பாடல்களை பற்றி குறிப்பிடாமல் இருக்கவே முடியாது,அந்த அளவிற்கு பாடல்கள் சூப்பர் ஹிட். அதில் வரும் “ஊரை தெரிந்துகிட்டேன்” பாடல் இன்றும் அனைவராலும் விரும்பபடுவதே அதற்க்கு சாட்சி. இன்றும் ஏதாவது யாராவது பிரச்சனை என்றால் கிண்டலுக்காவது இந்த பாடலை பாடுவார்கள். இந்த பாடலின் வெற்றியால் “சம்சாரம் அது மின்சாரம்” படத்திலும் இந்த பாடலை மாற்றி விசு அவர்கள் எடுத்து இருப்பார்.
அடுத்து “ராஜாவுக்கு ராஜாதாண்டா” பாடல், இந்த பாடலை எடுத்த விதம் அப்போது ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. பெரிய கட்டிடங்களில், கடல் மீது எல்லாம் ரஜினியின் கார் போவது போல எடுக்கப்பட்டு இருக்கும். தற்போது இதை பார்த்தால் சிரிப்பாக இருந்தாலும் அப்போது தொழில்நுட்பம் குறைந்த நாட்களில் இது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது.
“சோடி கிளி எங்கே” என்ற டூயட் பாடலின் வெற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை, இன்றும் பண்பலை வானொலிகளில் அதிகம் கேட்கலாம். நடிகர் திலகம் அவர்கள் காட்சியில் வரும் “ஒரு கூட்டு கிளியாக” பாடல் பாசத்தை அடிப்படையாக வைத்து வரும் பாடல், மனதை இளக வைக்கும் பாடல். “சொல்லி அடிப்பேனடி” என்ற பாடல் ரசிகர்களுக்கான பாடல்.
சென்டிமெண்ட் ராஜா = ரஜினி
பெண்களை தன் நடிப்பால் ரஜினி எளிதாக கவர்ந்து விடுவார், ரஜினி தன் தம்பியின் தவறை தட்டி கேட்கும் போது அவர் ஆங்கிலத்தில் பேசி தான் படித்தவன் என்பதை காட்டி பேசியதால் “yes”….. “yes ” என்று அதற்க்கு கண்ணீர் மல்க பதில் கூறும் போதும், கோபத்தில் வீட்டிற்கு வந்து தன் ஆசையாக பராமரிக்கும் லக்ஷ்மி என்ற காரை கோபத்தில் அடித்து நொறுக்கும் போதும், பின் தன் தவறை உணர்ந்து அழும் போதும் பலரின் கண்களை குளமாக்கி விடுவார். இதை எழுதும் போது கூட எனக்கு அந்த காட்சி மனதை அழுத்துகிறது. அந்த அளவு என்னை இளக வைத்த காட்சி அது. ரஜினி தன் காரை நொறுக்கும் போது அவரது ஆத்திரத்திற்கு மற்றும் அவரது ஏமாற்றத்திற்கு மதிப்பு கொடுத்து அவர் காரை நொறுக்குவதை தடுக்காமல் கண்ணீர் மல்க பார்க்கும் நாகேஷ் அவர்களின் நடிப்பையும் இங்கு குறிப்பிட்டு ஆக வேண்டும்.
நகைச்சுவை ராஜா = ரஜினி
ரஜினியின் நகைச்சுவை பலம் என்ன என்பதை நான் கூறினால் என்னை அடிக்க வந்து விடுவீர்கள், காமெடி நடிகர்களுக்கே சவால்விடும் வகையில் பின்னி பெடலெடுப்பார். ரஜினி தன் தம்பியை பார்க்க கல்லூரிக்கு போவதாக கூறியவுடன், நல்ல உடையுடன் செல்ல அவரது தங்கை அறிவுறுத்தியதும் அதெல்லாம் நாங்க பார்த்துப்போம் என்று வெள்ளை பேன்ட் சிகப்பு கோட்டில், ஷூ போட்டு நடக்க (தெரியாமல்) முடியாமல் நடந்து சென்று தன் தம்பி பற்றி விசாரித்து, பின் பதில் கூறிய பெண்ணின் தோள் மீதே கை போட்டு கொண்டே சென்று தன்னை கூட்டி செல்லுமாறு கூறுவது குறும்பாக இருக்கும்.
நாடகம் நடக்கும் இடத்தில் சேரில் உட்காரும் போது அவர் செய்யும் ரகளைக்கு சிரிகாதவர்களே இருக்க முடியாது. அதுவும் ஆங்கிலோ இந்திய பெண் அருகில் உட்கார்ந்து கொண்டு, அவர் செய்யும் ரவுசுக்கு அளவே இல்லாமல் இருக்கும். அந்த பெண் “when the program will start (எப்பொழுது நிகழ்ச்சி துவங்கும்)” என்று கேட்டதும் அதற்க்கு ரஜினி அந்த பெண் என்ன கேட்கிறார் என்று புரியாமல் “yes yes yes” என்று கூறுவதும், தன் தம்பியை மேடையில் பார்த்து விசிலடித்து என் தம்பி ராமு என்று கத்த அதற்க்கு அந்த பெண் கடுப்பாகி “stupid” என்று திட்ட ரஜினி அதுவும் புரியாமல் “yes yes yes” என்று கூற தியேட்டர் வெடி சிரிப்பால் அதிரும். திரும்பவும் எதோ ரஜினியிடம் ஆங்கிலத்தில் அந்த பெண் பேச எத்தனிக்க..பொறுமை இழந்த ரஜினி No englsih only tamil சும்மா “கச்சா முச்சான்னுட்டு” (ரஜினி ஸ்டைல் ல் படிக்கவும் :-D) என்று டென்ஷன் ஆவது அதகளம்.. இதை ஆங்கிலம் சரியாக தெரியாதவர்கள் தங்களுக்கு ஆதரவான காட்சியாக நினைத்து ரொம்ப ரசித்து சிரிப்பார்கள், தற்போதும் (அப்போது ஹி ஹி நான் கூட). தற்போது கூட நண்பர்களுக்குள் பேசும் போதும் ஏதாவது தெரியவில்லை என்றால் “yes yes yes” என்று கூறுவது சகஜம். யாராவது ஆங்கிலம் பேச தெரியவில்லை என்றால் தலைவர் பாணியை தான் பின்பற்றியதாக கூறுவார்கள், எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது
பணிவு = ரஜினி
ரஜினியின் பணிவு படத்தில் இயல்பாக வெளிப்படும் அது சம்பந்தப்பட்ட காட்சிகளில் [அது அவருடனே இருப்பதால் :;-) ] நடிகர் திலகம் அவர்கள் ரஜினியை வழியில் பார்த்து தன் காரில் செல்ல அழைக்க அதை அன்புடன் மறுத்து, அவரை செல்ல கூறி “காரின் கதவை திறந்து விடுவதிலாகட்டும்”, தன் தம்பியின் திருமணத்திற்கு வரும் அவரை வரவேற்கும் முறையாகட்டும், அவர் அருகில் நிற்க கூச்சப்பட்டு கை கட்டி மரியாதை கருதி தள்ளி நிற்பதில் ஆகட்டும், தலைவா! இந்த விசயத்தில் உங்களை அடித்து கொள்ள இன்னொருவர் கிடையாது. அதில் அவரின் முகத்தை கவனித்தவர்களுக்கு தெரியும் அவரின் முகம் எப்படி பணிவை காட்டுகிறது என்று.
இது நடிகர் திலகத்தின் கதாபாத்திரத்திற்கு கொடுத்த மரியாதையா அல்லது நடிப்பின் ஜாம்பாவானாக இருக்கும் அந்த அற்புத கலைஞனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையா என்று எனக்கு இன்று வரை குழப்பம் (இதே பணிவை படையப்பாவிலும் காணலாம்)
11-11-1985 தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம், 210 நாட்கள் ஓடியது.
லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்டாக வருவது தான் தலைவர் ஸ்டைல்..அதற்க்கு அவருடைய படத்தின் விமர்சனமும் விதி விலக்கல்ல
பின்குறிப்பு: ரஜினி ரசிகனாக எழுதி இருந்தாலும் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை என்று நம்புகிறேன்.
அன்புடன்
கிரி
girirajnet.com
|