சூப்பர் ஸ்டார் எந்த வழியோ... அந்த வழியிலேயே அமைதியாக நல்ல பணிகள் செய்பவர்கள் அவரது ரசிகர்களும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர்.
சேலம் மாவட்ட ரசிகர் மன்றத்தினர் மற்றவர்களுக்கு முன்னோடிகளாக ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் காரியத்தைச் செய்துள்ளனர்.
நினைவில் கொள்ளவும்... இது அரசியல் கட்சியோ... அரசு உதவியுடன் நடந்த விழாவோ அல்ல. நல்ல மனதுடன் ரசிகர்கள் மட்டுமே செய்த நிகழ்ச்சி.
‘சூப்பர் தமிழன் ரஜினிகாந்த்’ அவர்களின் 59-வது பிறந்த தின விழாவையொட்டி, சேலம் மாநகர் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டிசம்பர் 12-ம் தேதி காலை 8 மணிக்கு கொண்டாட்டங்களைத் துவங்கினர் சேலம் மாவட்ட மாநகர் ரசிகர்கள்.
பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நல உதவிகள் வழங்குதல் என காலையிலிருந்தே அமர்க்களப்படுத்த ஆரம்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் சேலம் மாவட்ட மாநகர் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆர்.மோகன் முன்னிலை வகித்தார்.
சூரமங்கலம் மண்டலம் தளபதி ஏ.வி.ஆர்.ராமு, எம்.சித்தேஸ்வரன், அஸ்தம்பட்டி மண்டலம் எம்.கனகராஜ், எஸ்.கோபால். அம்மாபேட்டை மண்டலம் துளசி, எம். அருள் மணி, கொண்டாலம்பட்டி மண்டலம் எம்.வெங்கடேசு நங்கவல்லி, ஒன்றியச் செயலாளர் ஜி.வெங்கடேஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் நிகழ்ச்சி, சேலம் செவ்வாய்ப்பேட்டை விழி இழந்தோர் பள்ளியில் நடந்தது. பாபா ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் இனிப்பு, சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அடுத்து தலைவர் ரஜினி பிறந்த நட்சத்திரமான திருவோணம் பொருமாளுக்கு உகந்த்து என்பதால், பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடத்தப்பட்டன.
ரஜினியின் பெயருக்கும், அவரது நட்சத்திரத்துக்கும் அர்ச்சனை செய்யப்பட்டது.
சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் அழகிரி நாதர், சுந்தரவல்லித் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரஜினியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டது. சுதர்ஸன் பட்டாச்சாரியார், சீனிவாச பட்டாச்சாரியார் இருவரும் இந்த சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். பூஜை முபடிந்த பிறகு, வந்திருந்த திரளான பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கடுத்து நடந்த நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தியாவில் தலைவிரித்தாடும் தீவிரவாதம் முழுமையாக ஒழிந்து அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்காக, ரஜினி ரசிகர்கள் விரதமிருந்து கோயில் வளாகத்திலேயே மண்சோறு சாப்பிட்டனர். பின்னர் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர். பொதுமக்கள் இதைப் பார்த்து நெகிழ்ந்துபோய் ரசிகர்களைப் பாராட்டினர்.
பிற்பகலில் தர்மதுரை ரஜினி ரசிகர் மன்றத்தினர் தளவாய்ப்பட்டி காதுகேளாத வாய் பேச இயலாத மாணவர்கள் படிக்கும் பள்ளியில் அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தனர்.
மாலை 4 மணிக்கு தாரமங்கம் ஒன்றியம் தளபதி ரசிகர் மன்றத்தினர் சார்பில் விநாயகர் மற்றும் முருகன் கோயில்களில் பூஜை செய்தனர். பின்னர் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள், ஏழைகளுக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பூசாரிப்பட்டி, மல்லூர், கருமாபுரம், வாழப்பாடி, சுக்கம்பட்டி, கொண்டாலம்பட்டி, ஜங்ஷன், ஜாகீர் அம்மாபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பான முறையில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
எஸ்.சங்கர்
படம்: அருள் கண்ணன்
|