|
|
Article |
|
|
இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் – ரஜினி ஆவேச பேச்சு |
(Saturday, 1st November 2008) |
|
இலங்கையில் நடக்கும் யுத்தத்தை உடனடியாக நிறுத்த ராஜபக்சே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் பிரச்சினையில் பெரிய நாடுகள் தலையிட வேண்டி வரும், என்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரித்தார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து நடிகர் நடிகைகள் சென்னை நடிகர் சங்க வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்க முற்பகல் 11.30-க்கு வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உண்ணாவிரதம் முடியும் வரை மேடையில் அமர்ந்து அனைவரது பேச்சுக்களையும் கேட்டார்.
உண்ணாவிரதத்தில் அவர் ஆற்றிய எழுச்சியுரை:
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே...
இது மிக அருமையாக, உணர்வுப்பூர்வமான, அறிவுப்பூர்வமான உண்ணாவிரதம் இது. இந்தப் போராட்டத்தை சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவியை நான் பராட்டுகிறேன். ராதாரவி சொன்ன மாதிரி இது 3-வது கட்டப் போராட்டம்தான். அதை சரியாக செய்திருக்கிறீர்கள்.
இங்கே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனால்தான் இது ரொம்ப சக்ஸஸ்புல்லா நடந்துகிட்டிருக்கு. கட்டுப்பாடில்லாத மனிதனால் எதையும் சாதிக்க முடியாது.
இலங்கைத் தமிழர் விஷயத்தில் நிறைய பேசலாம். பேச அவ்வளவு விஷயமிருக்கு.
இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை இங்கு விளக்கிய ராதாரவி மற்றும் நண்பர் திருமாவளவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் இங்கேயும் சரி, வெளிநாடுகளுக்குச் செல்லும்போதெல்லாம் பல இலங்கைத் தமிழர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் இலங்கைத் தமிழ்ல திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். அவர்கள் திட்டினால்கூட அது சங்கீதம் மாதிரி இனிமையாக இருக்கும். பாஷை மட்டுமல்ல, பழகுவதற்கும் அவ்வளவு இனிமையானவர்கள்.
அந்த நல்ல மக்கள் அவங்க நாட்ல வாழ முடியாமல் மற்ற நாடுகளில் எப்படியெல்லாம் அவதிப்பட்டு வாழ்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
தமிழர்கள் சம உரிமைக்காக போராடினார்கள். அதை அடக்க சிங்கள ராணுவம் ஆயுதமெடுத்தது. யுத்தத்தை நிறுத்த வேண்டுமென்று எல்லாருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம்ம இந்திய அரசும் மாநில அரசும் இதற்கு இன்னும் தீவிரமா முயற்சி எடுக்கணும்.
நாம் இங்கே பேசுவது, இங்கே நடப்பது அனைத்தும் இலங்கை அரசுக்கு, ராஜபக்சேவின் காதுகளுக்கு, அங்குள்ள எம்பிக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு கேட்டும் என்ற நம்பிக்கையில், தைரியத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
தமிழ் மக்கள் அங்கே சம உரிமைதான் கேட்டார்கள், அதற்காக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அதை நீங்கள் கொடுக்கவில்லை.
உங்கள் சிங்கள அரசிடம் ராணுவம், விமானப்படை, கப்பல் படை என முப்படைகளும் உள்ளன. சகல வசதிகளும் சவுகரியங்களும் உள்ளன. யுத்தத்தை நீங்கள்தான் அறிவித்தீர்கள். ரெண்டு வருஷமா அஞ்சு வருஷமா, பத்து வருஷமா... முப்பது வருஷமா உங்களால் அவர்களை ஒழிக்க முடியலன்னு சொன்னா நீங்க என்ன வீரர்கள்... ஆம்பிளைங்களா நீங்கள்?
தோல்விய ஒத்துக்க முடியலேன்னு சொல்லு. ஓகே, ஒத்துக்கறதுக்கு உங்க ஈகோ இடம் கொடுக்கலியா... சரி... நீ என்னதான் செஞ்சிருக்கே... முடியல உன்னால... ஒத்துக்கணும்.
இனொன்னு புரிஞ்சுக்கணும்... இலங்கை மட்டுமல்ல... எந்த நாடாக இருந்தாலும், ஏழை மக்கள், பாமர மக்கள், அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் அவர்களின் வேதனை... அந்த காற்று பட்டாலும் கூட அந்த நாடு உருப்படாது. எந்த நாடகாட்டும், சாமானிய ஜனங்க பாதிக்கப்படக் கூடாது. எந்த நாடாக இருந்தாலும் சரி... எந்த விதத்திலயும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக் கூடாது. அந்த நாடு உருப்படாது, அவங்க சுவாசக் காற்று பட்டால் கூட அந்த நாடு உருப்படாது.
உங்க நாட்ல பாமர மக்கள், பெண்கள், குழந்தைகள் பல ஆண்டுகளாக உதிரம் சிந்தி மடிகிறார்கள் அந்த பூமியில.
அங்க இருக்கிற பாமர மக்கள் சாகிறாங்க... அவர்களது பிணங்கள் புதைக்கப்படறதா நினைக்கிறீங்களா... கிடையாது... விதைக்கப்படறாங்க.
நீங்க யுத்தத்திதில் அந்த மக்களை எல்லாம் அழிச்சா கூட அந்த விதை உங்களை நிம்மதியா வாழ விடாது. நாளை இந்த விதைகள் மீண்டும் முளைச்சி வந்து உங்களை அழிக்கும் என்பதை புரிஞ்சுக்குங்க.
நான், என்னுடையது என்ற அகங்காரத்தை விட்டுவிட்டு, இறங்கி வந்து எல்லாருக்கும் இணக்கமான ஒரு முடிவை எடுத்து, யுத்தத்தை நிறுத்துங்க. அது உங்களுக்கு நல்லது.
முப்பது ஆண்டுகள் ஆன பிறகு வேணாம்னு சொன்னா அது எப்படி... செத்தவங்க வந்து வாழறவங்களை சும்மா விட்டுடுவாங்களா... முடியாது. அது எப்படி விடுவாங்க.
அந்த இடத்தை தமிழர்ள் அடைஞ்சே தீரணும். இதை இலங்கை அரசு புரிஞ்சிக்கணும். புரிஞ்சி நடந்துக்கணும். அப்படி புரிஞ்சிக்கலேன்னா... பெரிய நாடுகள் இலங்கை அரசுக்கு இதைப் புரிய வைக்கணும் என்றார் ரஜினிகாந்த்.
பின்னர் இலங்கைத் தமிழர் துயர் துடைப்பு நிதியாக தன் பங்குக்கு ரூ.10 லட்சத்தை வழங்குவதாக அறிவித்தவர், உடனடியாக அதற்கான காசோலையை சரத்குமாரிடம் வழங்கினார்.
மாவீரனாய் நுழைந்தார்; மகுடத்தோடு திரும்பினார்!
மேலே நீங்கள் படித்தது ஏதோ நம் சொந்த கற்பனை என்று எண்ணிவிட வேண்டாம், ஈழத் தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நமது சூப்பர்ஸ்டார் ரஜினி நிகழ்த்திய எழுச்சியும் உணர்ச்சியும் மிக்க உரையைக் கேட்டவர்கள் ஒருமித்த குரலில் சொன்ன கருத்துக்களுக்கு நாம் கொடுத்திருக்கும் தலைப்பு இது.
காலையில் உண்ணாவிரதம் துவங்கியபோது, ரஜினியின் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை. ரஜினி – கமல் மாலையில்தான் வருவார்கள் என்றே ராதாரவி போன்றவர்கள் தெரிவித்தனர்.
இன்னொரு பக்கம் சில பத்திரிகைகள் வழக்கம்போல் தலைவர் பற்றிய விஷமப் பிரச்சாரங்களில் முதல் நாளிலிருந்தே இறங்கி விட்டிருந்தன.
‘ரஜினி வருவார்; ஆனால் பேசமாட்டார்', ‘இலங்கைத் தமிழர்கள் பற்றிய அக்கறையே இல்லாத ரஜினி உண்ணாவிரதத்துக்கு வருவதே பெரிய விஷயம், அவர் எங்கே பேசப் போகிறார்?’ என்றெல்லாம் தினமலர்களும், நக்கீரன்களும், ஜூவி சகுனிக்களும் உளறிக் கொண்டிருந்தன.
ஆனால் யாரும் எதிர்பாராமல் கறுப்பு – வெள்ளை காஸ்ட்யூமில் காலை 11.30 மணிக்கெல்லாம் மின்னலாய் நுழைந்தார் ரஜினி.
அடேங்கப்பா... அதுவரை சொங்கிப்போய்க் கிடந்த கூட்டத்தினர், தலைவர் தலையைக் கண்டதும் எழுப்பிய ஆரவாரம் அடங்க வெகு நேரமானது (அடுத்த நாள் அதுவே ஒரு செய்தியாகும் அளவுக்கு ஆரவாரம்!).
எந்திரன் போஸ்டர்களில் பார்த்த அதே பொலிவுடன் மிடுக்காக வந்திருந்த தலைவர் தன்னை எதிர்கொண்டழைத்த விஜய்காந்துக்கு கை கொடுத்துவிட்டு, தன்னை ‘வாழவைத்த தெய்வங்களை’ப் பார்த்து ஒரு வணக்கம் செலுத்திவிட்டு உண்ணாவிரத மேடையின் நடுநாயகமாக அமர்ந்தார்.
அவருக்கு இடது பக்கத்தில் அஜீத்தும், வலப் பக்கத்தில் சரத்குமாரும் அமர (சூரியனைச் சுற்றித்தானே மற்ற நட்சத்திரங்கள் இருக்க முடியும்!!), குருவிகளின் முகம் செத்துப் போனது!
அதுவரை யார் யாரே மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரஜினி வந்த பிறகு பேசுபவர்களை தர வரிசைப்படுத்தி அழைத்தார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவி.
அனைவரது பேச்சையும் கூர்ந்து கவனித்தார் தலைவர். பேசுபவர்கள் யாரென்று பார்க்காமல், அவர்கள் வாயிலிருந்து வந்து விழுந்த வார்த்தைகளை மட்டும் கவனித்த வண்ணமிருந்தார்.
குறிப்பாக மன்சூர் அலிகான் பேசியபோது, ஆர்வமாகக் கேட்டார்.
பேசுவதற்கு நடிகர் சங்கம் விதித்திருந்த கட்டுப்பாடுகளைக் கிண்டலடிக்கும் வகையில், வாய் பேச இயலாதவரைப் போல முதலில் பேசிக் காட்டிய மன்சூரின் நையாண்டியை வெகுவாக ரசித்து சிரித்தார் ரஜினி. சிறிது நேரத்தில் மன்சூர் தன் வழக்கமான பேச்சுக்கு மாறி சிங்கள ராணுவத்தின் அட்டூழியங்களைப் பட்டியல் போட, ஆழமான யோசனையுடன் அந்தப் பேச்சைக் கவனித்தார் ரஜினி.
ஒரு யோகியைப் போல...
பொதுவாகவே ஒரே இடத்தில் ரொம்ப நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது பலருக்கும் முடியாத காரியம். அதுவும் கலைத்துறையைச் சார்ந்தவர்களுக்கு அது ரொம்ப கஷ்டம். உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்தவர்களில் பலரும் நேரம் ஆக ஆக களைத்துப் போய் பரிதாபமாகக் காட்சியளிக்க (நாம் யாரையும் குறை சொல்லவில்லை!) நம் தலைவர் மட்டும் வந்தபோது எப்படி இருந்தாரோ அதே பொலிவுடன், உற்சாகத்துடன் கடைசி நிமிடம் வரை அமர்ந்திருந்தார்.
நேரத்தைக் கொல்ல கமல் செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார். மற்றவர்களோ சூயிங்கம் மென்றபடி, பேப்பர் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால் நமது சூப்பர்ஸ்டார் ஒரு யோகியைப் போல இருந்த இடத்தைவிட்டு அசையாமல், அமர்ந்த நிலை மாறாமல், சும்மா வில் மாதிரி கம்பீரமாக உட்கார்ந்திருந்தது, இவர் மனிதனா, மகானா என்றே கேட்க வைத்தது.
பாவம் அஜீத்... அவரால் ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல் உட்காரக்கூட முடியவில்லை உண்ணாவிரதப் பந்தலில் (அவரை குறைசொல்லத் தேவையில்லை. அவர் உடல் நிலை அப்படி. உண்ணாவிரத ஏற்பாட்டாளர்கள் அதைப் புரிந்து கொண்டு அனுப்பி வைத்திருக்கலாம் அவரை).
திருமாவைப் பாராட்டிய தலைவர்!
மன்சூரலிகானுக்குப் பின் தொல் திருமாவளவன் மேடைக்கு வந்தார். உண்ணாவிரத நிகழ்வுக்கு தலைவர் என்ற முறையில் சரத்துக்கு கை கொடுத்தவர், சூப்பர் ஸ்டாரிடம் போய் தன் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பின்னர் அவரது முறை வந்தபோது, ஈழப் பிரச்சினையின் சில புரிபடாத பகுதிகளை கலைஞர்களுக்கு விளக்கமாகச் சொன்னார். அதையும் மனதுக்குள் குறித்துக் கொண்டார் ரஜினி.
இங்கே பலருக்கும் இலங்கைத் தமிழர் – இலங்கையில் உள்ள இந்தியத் தமிழர் குறித்த தெளிவான பார்வை இல்லை. இரு பிரிவினரும் ஒன்றே என்பதைப் போல பேசி வருகின்றனர். நேற்றைய மேடையிலும் அத்தகைய பேச்சுக்கள் ஒலித்தன. அதைத் திருத்திக் கொள்ளச் சொன்ன திருமா, ஈழப் பிரச்சினையின் இன்றைய தீவிரத் தன்மையை தெளிவாகப் புரிய வைத்தார்.
கமல் தன் பரந்துபட்ட அறிவைக் காட்டும் விதத்தில் பேசினார். ஈழத்த தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் உணர்வால் ஒன்றுபட்டவர்கள் என்றாலும், வரலாற்று ரீதியாக இருதரப்புக்கும் உள்ள வேறுபாடு என்னவென்பதை, இங்கிலாந்து – அமெரிக்க பூர்வ குடிகளின் பிரச்சினையோடு ஒப்பிட்டுப் பேசியது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. அதை நம் தலைவரும் கவனிக்கத் தவறவில்லை.
இலங்கைத் தமிழர்கள் ஆயுதமேந்தியதன் பின்னணி குறித்துப் பேசிய கமல், உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் தலைதூக்குகிறது. நாளை அந்த மக்கள் விடுதலை பெற்றால் இந்த தீவிரவாதிகளே தியாகிகளாவார்கள். ஆங்கிலேயரைக் கொல்ல துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் என்ன வாதி? ஒருவன் தீவிரவாதியா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கட்டும், என்றார்.
...ண்ணா... ஒரே காமெடிங்ணா...!
சீரியஸாகவே போய்க் கொண்டிருந்த உண்ணாவிரதத்தில் செம காமெடி பண்ணியவர் விஜய்தான். என்ன பேசுவதென்று தெரியவில்லையோ என்னமோ... திடீரென்று யோசித்தவராய், 24 மணி நேரத்துக்குள் பிரதமருக்கு ஒரு கோடி தந்தி கொடுங்க என்றார் ஒரே போடாக. அவர் பேசியது சனிக்கிழமை மாலை. அடுத்த நாள் ஞாயிறு அரசு விடுமுறை. எப்படிங்ணா முடியும்..!
முறை தெரியாத நிர்வாகிகள்!
வழக்கமாக நம்ம தலைவர்தான் கடைசியில் பேசுவார். அதுதான் மற்ற பேச்சாளர்களுக்கு நல்லதும் கூட! காரணம் அவர் பேசி முடித்த பிறகு, காசு கொடுத்து நிற்கச் சொன்னாலும் நிற்காது கூட்டம். ‘ரஜினியே பேசி முடிச்சிட்டார். அப்புறம் யார் பேசினா என்னய்யா...’ என கலையத் தொடங்கிவிடும்.
ஆனால் இந்தமுறை அந்த வழக்கத்தை மாற்ற எண்ணி மூக்குடைபட்டவர் சரத்குமார்.
நடிகர் சங்கத் தலைவர், உண்ணாவிரத நிகழ்வின் தலைவர் என்ற முறையில் அவர் ஏற்புரையாற்றுவதாகக் குறிப்பிட்டிருந்தனர். ஏற்புரை என்பதற்கு அர்த்தம் தெரியாது போலும். ஒருவரது தனிப்பட்ட சாதனைக்கு நடத்தப்படும் பாராட்டுக் கூட்டத்துக்குதான் ஏற்புரை தேவை. அதில் கூட இப்போது வழக்கம் மாறிவிட்டது. தலைமை விருந்தினர் பேசுவதற்கு முன்பே ஏற்புரையை முடித்துக் கொள்வார்கள் நிகழ்ச்சியின் நாயகர்கள்.
ஆனால் உண்ணாவிரதம் போன்ற பொது நிகழ்வுக்கு சரத் என்ன ஏற்புரையாற்றுவது... ரஜினி போன்ற மாமனிதர்களின் எழுச்சியுரையல்லவா தேவை!
இந்த உண்ணாவிரதத்தில் ரஜினி பேசி முடித்ததுமே கூட்டம் வேகவேகமாகக் கலைய, கலவரமாகிவிட்டார் சரத். ராதாரவி மைக்கைப் பிடித்து, 8 மணி நேரம் உட்கார்ந்திருந்தீங்க. இன்னொரு பத்து நிமிஷம் உட்காரக் கூடாதா என புலம்ப வேண்டி வந்தது (இந்த அறிவு முன்பே இருந்திருக்க வேண்டாமா... யார் கிட்ட... வரம் வாங்கி வந்த தலைவரப்பா நம்மாளு!).
போகட்டும்... தலைவர் பேச வந்தார். அதற்கே தனி ஆரவாரம் பட்டையக் கிளப்பியது. ஒவ்வொரு வார்த்தையையும் அவர் கையாண்ட லாவகம், அவை அவரது அடிமனதின் உணர்வுகள் என்பதை தெளிவாக வெளிக்காட்டின.
ஈழப் பிரச்சினையில் இவருக்கு என்ன பெரிய அக்கறை இருந்து விடப் போகிறது என அசுவாரஸ்யத்தோடு அவரைப் பார்த்தவர்கள் அடுத்த சில நொடிகளில் பச்சை மிளகாயைக் கடித்தது போல் விலுக்கென்று நிமிர்ந்தார்கள். கமல் முகத்தில் ஓடிய கலவர ரேகையைப் பார்த்திருக்க வேண்டுமே... ஆனால் தலைவர் மிகச் சரியாக, நூல் பிடித்த மாதிரி பேசினார்.
ஈழப் போராட்டத்தின் ஆழங்களை நன்கு அலசி, யார் பக்கம் நியாயம் என்பதை நெத்தியடியாகச் சொன்னார். இதற்குமேல் ஒரு சரியான தீர்ப்பை ஐநா சபையால் கூடச் சொல்லிவிட முடியாது.
குறிப்பாக, ‘30 ஆண்டுகளாக ஒரு இனத்தின் போராட்டத்தை, சகல படை பலம் வசதிகளும் கொண்ட உன்னால ஒழிக்க முடியலேன்னா... என்ன வீரர்கள் நீங்கள்? ஆம்பளைங்களா நீங்க...?’ என அவர் கேட்டது ராஜபக்ஷேவையே வெட்கித் தலை குனிய வைத்திருக்கும்.
நடிகர்களிலேயே அதிக நிதி வழங்கியதும் ரஜினிதான்.
‘சரண்டர்’ராஜ்!
ரஜினி பேச்சின் வீர்யம் என்ன என்பதை மேடையிலேயே பார்க்க முடிந்தது. எந்த சூப்பர்ஸ்டாரின் பெயரை உச்சரிப்பதை அவமானம் என நான்கு மாதங்களுக்கு முன் முழங்கினாரோ, அதே சத்தியராஜ், அதே சூப்பர்ஸ்டாரின் எழுச்சியுரையைக் கேட்ட பின், உண்ணாவிரத முடிவில் வேகமாய் வந்து ரஜினிக்குக் கைகொடுத்தார். தோளில் தட்டி ‘பிரமாதம்... பின்னிட்டீங்க தலைவரே...’ என்று பாராட்டினார் (அருகிலிருந்த புகைப்படக் கலைஞர்கள் சொன்னது இது!). தன் நண்பர்களிடமும் அந்த பாராட்டைப் பகிர்ந்து கொண்டாராம் சத்யராஜ்.
எந்த நாட்டில் பெண்களும், குழந்தைகளும், ஏழைகளும், அப்பாவி மக்களும் உதிரம் சிந்துகிறார்களோ அந்த நாடு உருப்படாது என அவர் சொன்ன வார்த்தைகளை ஒரு தெய்வ வாக்காகவே ஈழமக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆருக்குப் பிறகு ரஜினியால் மட்டுமே அதுபோன்ற துணிவும் கனிவும் நிரம்பிய ஈழ ஆதரவைத் தரமுடியும் என இலங்கைத் தமிழர்களின் ஏறத்தாழ அனைத்து இணைய தளங்கள் மற்றும் பத்திரிகைகளிலும் இன்று தலையங்கங்கள் தீட்டப்பட்டிருந்ததே அதற்குச் சான்று. விடுதலைப் புலிகளின் இணைய தளங்களிலும்கூட பிரதான இடம் நம் தலைவரது பேச்சுக்குதான்.
ரஜினி பேசி முடித்த அடுத்த சில மணி நேரங்களில் உலகமெங்கும் உள்ள அனைத்து தமிழர்கள் மத்தியிலுமே ஒரு புத்துணர்ச்சி பாய்ந்தது போன்ற நிலையைப் பார்க்க முடிந்தது. ஒரு நீண்ட பெரும் போரில் வென்ற திருப்தியோடு ஒருவருக்கொருவர் செய்திகளைப் பகிர்ந்து கொண்டனர்.
நல்ல மனிதர்களின் வார்த்தைகளுக்கு மட்டும்தான் இத்தகைய சாதனைகளைச் செய்ய வைக்கும் சக்தி உண்டு!
இப்போது மீண்டும் ஒருமுறை தலைப்பைப் படியுங்கள்!
-சங்கநாதன்
|
|
|
|
|
|
|
|