ரஜினியுடன் அதிகப் படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் புலியூர் சரோஜா.
ரஜினிக்கு நடனம் ஆடத் தெரியாது என பலரும் விமர்சித்த கால கட்டத்தில், அவரை மிகச் சிறந்த நடனப் புயலாக மாற்றிய புலி இந்த சரோஜாதான்!
எஸ்பி முத்துராமன் போன்ற ஜாம்பவான்களே ரஜினியை ‘சார்’ என்று மரியாதையுடன் அழைக்க, ‘தம்பி’ என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை பெற்றவர் இவர்.
ஒன்றா இரண்டா... எத்தனை படங்கள்... ரஜினியை நடனத்தில் தனித்த ஸ்டைலுடன் அழகாக ஆட வைத்த பெருமைக்குரியவர் புலியூர் சரோஜா.
ரஜினியின் பெருமைகளை, புதிய விஷயங்களை அவர் கிரகித்துக் கொள்ளும் வேகத்தை தன்னுடைய அனைத்து பேட்டிகளிலும் சொல்லி மகிழ்ந்தவர் சரோஜா.
இவரது கணவர் ஜி.சீனுவாசன் மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர். எத்தனையோ ரஜினி படங்களில் அசத்தல் வேடங்களை அனாயாசமாக செய்திருப்பார். உதாரணம்: ராஜாதிராஜா.
இந்த தம்பதியரின் ஒரே புதல்வன் விபத்தில் இறந்தபோது, அவர்களுக்கு பெரும் ஆறுதலாய் நின்றவர் நமது சூப்பர் ஸ்டார்.
ரஜினியுடனான தனது திரை அனுபவங்களை ரஜினி ரசிகர்களுக்காக இங்கே மனம் திறக்கிறார் சரோஜா...
ரஜினியைப் பத்தி நிறைய சொல்லலாம். இன்னிக்கி முழுசும் கூட
சொல்லலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழிலிலும் சரி, ரஜினி ஒரு பர்பெக்ஷனிஸ்ட்.
தமிழ் சினிமாவில் இந்த குணத்தை புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரஜினியிடம்தான் பார்த்தேன்.
எம்ஜிஆர் அவர்களுக்கு எல்லாம் தெரியும். நடிப்பு, நடனம், பாட்டு, இசை, சண்டை, இயக்கம், எடிட்டிங், கேமரா.... அவருக்கு தெரியாத சினிமாக் கலை என்னவாக இருக்கும் என்று நாங்கள் பலமுறை வியந்து விவாதிப்போம்.
ரஜினி அவர்களுக்கும் இத்தனை விஷயங்களிலும் ஆர்வமுண்டு. நிறைய பேருக்கு தெரியாத உண்மை... ரஜினி அருமையாகப் பாடுவார் என்பது. ஒரு படத்தில் ராஜா அவரைப் பாடவைத்திருப்பார். ஆனால் இன்னும் கூட சிறப்பாகப் பாடக்கூடியவர் அவர். கிட்டத்தட்ட மலேஷியா வாசுதேவனைப் போலவே அவருக்குப் பாடவரும்.
தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ஒரு முழுப் பாட்டையும் மலேஷியா வாசு தேவன் போலவே அவரைப் பாட வைத்துக் காட்டினார் இயக்குநர் ராஜசேகர். அந்தப் பாட்டை ஏற்கெனவே மலேஷியா வாசுதேவன் பாடிவிட்டிருந்தார். அதனால் நாங்கள் எவ்வளவோ கூறியும், தான் பாடியதைப் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
தன் நண்பரான மலேஷியா வாசுதேவன் மனம் புண்படக் கூடாது என்ற நல்ல எண்ணம்தான் இதற்குக் காரணம்.
ரஜினிக்கு முறைப்படி நடனம் தெரியாது எனப் பலர் குறை கூறுவார்கள். இந்த சினிமா உலகில் அப்படிச் சொல்வதே அபத்தம். கற்றுக் கொள்ளத் தயாராக இருந்தால் போதும், எந்த நடனமும் உடலில் வந்து உட்கார்ந்து கொள்ளும். ரஜினி அப்படிக் கற்றுக் கொண்டவர்தான்.
இல்லாவிட்டால் லைவ் ஷோவில் அவரால் அத்தனை லாவகமாக ஆடி அசத்தியிருக்க முடியுமா (உலகம் சுற்றும் ரஜினி!)
நான் நடனம் அமைக்காத எத்தனையோ படங்களில்கூட ரஜினி அருமையாக நடனம் அமைத்திருப்பார். தளபதியில் வரும் ராக்கம்மா கையைத் தட்டு..., முத்துவில் தில்லானா..., இப்ப சிவாஜி படத்தில் அதிரடிக்காரன்....
அடேங்கப்பா... பரத நாட்டியம், கதகளி மாதிரி இது ரஜினி நடனம்! அவ்வளவுதான்!!
நிறைய்ய பேருக்கு பாடிக்கொண்டே லாவகமாக ஆட வராது. ஆனால் ரஜினி இதை மிகச் சிறப்பாகச் செய்வார்.
மாவீரனில் ஏ...மைனா பாடலைப் பார்த்து பலரும் அசந்து விட்டார்கள், ரஜினியா இதுவென்று. அத்தனை அட்டகாசமாக நடன அசைவுகளை வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி. ஆங்கிலேயப் பாணி நடனங்களை மிகச் சிறப்பாக ஆடுபவர் ரஜினி. ஒரு முறை அவருக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுத்துவிட்டால் போதும். அப்படியே பிடித்துக் கொள்வார்.
ரொம்ப சிக்கலான நடனம் என்றால், நம்மை ஒருமுறை ஆடிக்காட்டச் சொல்வார்.
பாயும் புலி படத்தில் ரஜினிக்கு கொஞ்சம் ப்ரீக் மூவ்மெண்ட்ஸ் உள்ள நடனம்... ஆடி மாசம் காத்தடிக்க... பாடலுக்கு. சில்க்குக்கு இணையாக ஆட வேண்டும்.
பாட்டு அட்டகாசமாக வந்திருந்தது. என்னென்னமோ வித்தியாசமான நடனங்களை முயற்சித்துப் பார்த்து கடைசியில் ரஜினியை ஜாலியாக ஆட வைத்துவிடுவது என்று முடிவுக்கு வந்துவிட்டோம். நான் சில காட்சிகளுக்கு ஆடிக் காட்டினேன். ஆனால் அதையே ரஜினி திருப்பி ஆடிக் காட்டியபோது வித்தியாசமாக இருந்தது.
உடனே அந்த ஸ்டைலையே பயன்படுத்திக் கொண்டோம். பாயும் புலி பக்கா ஆக்ஷன் படம் என்றாலும், காமெடி, கவர்ச்சி கலந்த இந்தப் பாட்டு மட்டும் தனி கிக்காக இருக்கும்.
நல்லவனுக்கு நல்லவன் படம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒன்று.
அந்தப் படத்தில் முதல் பாட்டே அமர்க்களமாக இருக்கும். பாடலின் தரத்துக்கேற்ப வித்தியாசமாக நடனம் அமைக்க வேண்டுமே என்பதற்காக, மின் விளக்குகள் பொருத்தப்பட்ட சிறப்பு உடை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். ரஜினியும் அந்தப் பாடலுக்கு ஆடிய மும்பை நடிகையும் அதை அணிந்துதான் ஆட வேண்டும். ரஜினி தம்பி கொஞ்சமும் தயங்கவில்லை. சில காட்சிகளில் தண்ணீரில் நனைவது போலவும் எடுத்தோம். அப்போதெல்லாம் உடலில் பல மை ஷாக் அடித்தும் கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் அசத்தலாக ஆடி முடித்தார்.
அந்தப் பாடல் இப்போதும் தமிழ் திரைஇசை நடனத்தில் ஒரு மைல்கல்தான்!
சுப்புடுவின் பாராட்டு!
தர்மதுரை என்று ஒரு படம். பெரிய வெற்றிப் படம். இதன் இயக்குநர் ராஜசேகர் ரஜினியின் நெருங்கிய நண்பர். அவர்தான் ரஜினியிடம் உள்ள மிக ஸ்டைலான நடன அசைவுகளை வெளிக் கொணர வைத்தவர். எதிர்பாராமல் அகால மரணடைந்துவிட்டார்.
அவர் நடனமாடிய படங்களில் நான் மிகவும் ரசித்தது தர்மதுரை படத்தில் வரும் சந்தைக்கு வந்த கிளி... இந்தப் பாடலை மிக விரும்பிக் கேட்டு, பார்த்துப் பாராட்டிய ஒரு கலைஞர், பிரபல இசை விமர்சகர் சுப்புடு.
‘தாளத்துக்கு தப்பாத அடிகள், நூல் பிடிச்ச மாதிரி ஒரு ஆட்டம், பெண்களின் நளினத்தைச் தூக்கிச் சாப்பிடற மாதிரி ஒரு ஸ்டைல் ஆட்டம்... நான் ரொம்ப ரசிச்சுப் பார்த்த சினிமா டான்ஸ் ரஜினியோட இந்தப் பாட்டுதான். அதிலும் கவுதமியை விட ரஜினியின் மூவ்மென்ட்ஸ் அருமையா இருந்தது’, என்று பாராட்டியிருந்தார் சுப்புடு.
இதுக்கு மேல அவரது நடனத் திறமை பற்றிச் சொல்லணுமா?
-சங்கநாதன்
|