|
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா? |
(Sunday, 5th October 2008) |
|
கட்சி அல்லது சமூகப் பொதுநல இயக்கம் என ரஜினி களத்துக்கு வரும் முன்பே லாவணிக் கச்சேரியை ஆரம்பித்துவிட்டார்கள் சிலர், அதுவும் உண்மையான ரசிகன் என்ற போர்வையில். சூப்பர் ஆரம்பம்... இதற்கு சுய பரிசோதனை என்ற சொத்தை விளக்கம் வேறு!
இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவே இந்தக் கட்டுரை. மற்றபடி சூப்பர் ஸ்டார் ரஜினியை சூப்பர் தலைவராக்க நெருக்கடி தருவதோ, சக ரசிகர்களைத் திட்டுவதோ நம் நோக்கம் அல்ல.
தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத, அழிக்க முடியாத புகழுடன் திகழ்ந்தவர் அமரர் எம்ஜிஆர். இன்றும் அவரது வாக்கு வங்கிதான் தேர்தலைத் தீர்மானிக்கிறது. கருப்பு, சிவப்பு, பச்சை எம்ஜிஆர்களை தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் அப்பேற்பட்ட மகத்தான எம்ஜிஆரையே மிஞ்சிய புகழ் பெற்ற நடிகராக விஸ்வரூபமெடுத்தவர் ரஜினி. வெறும் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்காக கிடைத்த புகழ் அல்ல இது.
நடிப்பைத் தாண்டி, ரஜினி காட்டிய சமூக, அரசியல் அக்கறைகள், மக்களுக்கு அவரை தங்கள் நம்பிக்கைக்குரிய வருங்காலத் தலைவராகப் பார்க்க வைத்தன.
அந்த நம்பிக்கைகளுக்கு உரமேற்றும் வகையில் சூப்பர் ஸ்டாரும் பல அரசியல் நடவடிக்கைகளில் பகிரங்கமாக இறங்கினார். அவருக்காகவே உருவானது தமிழ் மாநில காங்கிரஸ். அவரால் உருவானதுதான் தமாகா-திமுக கூட்டணி. அவரால்தான் திமுகவுக்கு திரும்பக் கிடைத்தது தமிழ்நாட்டு அரியணை.
அதன் பிறகு பல தருணங்களில் ரஜினி எடுத்த அரசியல் நிலைப்பாடுகள் கடும் விமரிசனங்களுக்கு உள்ளானாலும், இன்றும் அவர் அரசியலுக்கு வருவாரா என மக்கள் கேட்கக் காரணம் ரஜினியின் அரசியல் ஈடுபாடுதான்.
கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்...
பதினைந்து வருடங்களுக்கு முன்பும் சூப்பர் ஸ்டாராகவே ஜொலித்த ரஜினியை யாராவது அரசியலுக்கு அழைத்தார்களா?
இல்லையே... உழைப்பாளியில் அவர் லேசாகக் கோடு போட்டார்... நம்மவர்கள் அதன் மேல் ரோடு போட 15 வருடங்களாகக் காத்திருக்கிறார்கள்.
ரஜினிக்கு அரசியல் ஆசை கிடையாதா
கிடையாது, என்றால் அதை ஒரு முறையாவது உறுதியாக வெளிப்படையாகச் சொல்லியிருப்பார். இன்றுவரை அவர் அப்படிச் சொல்லவில்லை.
மாறாக இந்தியப் பிரதமரை அருகில் வைத்துக் கொண்டே, நான் அரசியலுக்கு வருவதை காலம் தீர்மானிக்கும் என்கிறார்.
குசேலனில் தான் பேசிய எதிர்மறை வசனங்களை, ரசிகர்களின் மனநிலை புரிந்து பின்னர் நீக்குகிறார்.
இப்போதும் அரசியல் விமர்சகர்கள், நடுநிலை அரசியல்வாதிகளுடன் அடுத்து என்ன செய்யலாம் என கலந்தாலோசனை செய்து கொண்டிருக்கிறார்.
காரணம், தன் ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழ் மக்களுக்கு அரசியல் மூலம் நல்லது செய்ய வேண்டும் எனும் நெருப்பு ரஜினிக்குள் அணையாமல் அப்படியே இருக்கிறது. இது நாம் கூறும் ஜோசியம் அல்ல. உண்மை.
அரசியல் வேண்டாம் என்கிறாரா ரஜினி?
ரஜினியை எந்த ரசிகரும் இங்கே எதற்காகவும் நிர்பந்திக்கவில்லை. அப்படியே நிர்பந்தித்தாலும் அதற்கெல்லாம் வளைந்து கொடுக்கிற ரகமில்லை அவர்.
ரசிகர்கள் விருப்பமெல்லாம் தங்கள் தலைவர் அரசியலுக்கு வருவாரா... குறைந்தபட்சம் வருவார் என்ற உறுதியான நிலை தெரிந்தால் கூடப் போதும். தங்களுக்கு ஒரு பாதுகாப்பான அரசு அமையும் என்ற நிம்மதியுடன் தங்கள் பணியைச் செய்வார்கள் அவர்கள்.
அவர்களது இந்த எதிர்பார்ப்பில் தவறு காண்பவர்கள், ‘தலைவர்’ ரஜினியையே குற்றம் சொல்வதற்குச் சமம்
காரணம், ரஜினி எங்கும் எப்போதும் தனக்கு அரசியலே வேண்டாம் எனச் சொல்லவில்லை. ‘நான் அரசியலுக்கு வருவதை இன்னமும் முடிவு செய்யவில்லை. கடவுளின் உத்தரவுக்குக் காத்திருக்கிறேன்’ என்றுதான் தனது லேட்டஸ்ட் பேட்டியிலும்கூட (என்டிடிவி) அவர் கூறியிருந்தார்.
இப்படி ஒரு மன நிலையில் ரஜினி இருக்கும்போது, அதற்கு இசைவாக அவரது ரசிகர்களும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டதில் என்ன தவறு?
நாளையே அவர் ஏதேனும் ஒரு மக்கள் இயக்கம் அல்லது புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினால், இங்கே கமெண்ட் எனும் பெயரில் ரசிகர் மனங்களை நோகடிப்பவர்களா ஓடி வந்து கொடி பிடிக்கப் போகிறார்கள்? போஸ்டர் ஒட்டப் போகிறார்கள்? அதற்கு தொண்டர் பலம் வேண்டாமா...?
அட.. இப்படிப்பட்ட பாமர தொண்டர்கள் வேண்டாம். நன்கு பக்குவப்பட்ட அறிவு ஜீவித் தொண்டர்களே போதும் என்று யாரும் வாதிட வந்து விடாதீர்கள். அப்புறம் மயிலாப்பூரில் நெடுஞ்செழியனுக்குக் கிடைத்த ஓட்டுகள் கூட நமக்குக் கிடைக்காது!!
இந்த அரசியல் அமைப்பு முறை, ஜனநாயக தேர்தல் முறையில் முழுமையான சீர்திருத்தங்கள் வந்தால்தான், அறிவுஜீவிகள் தொண்டர்களாகக் கிடைப்பார்கள். (ஒருவன் உண்மையில் அறிவு ஜீவியாகிவிட்ட பிறகு எப்படி தொண்டனாகத் தொடர்வான்? அவனுக்கும் ஆளத்தானே ஆசை வரும்
இன்னொன்று, இதெல்லாம் சாத்தியமா...?
இதனை சமூகவியலில் Utopianism என்பார்கள். அதாவது கற்பனாவாதம். ஆதாம் – ஏவாள் வாழந்ததாகச் சொல்லப்படும் பூலோக சொர்க்கம் மாதிரி ஒரு சமாச்சாரம் இது. நடைமுறையில் சாத்தியமாக பல யுகங்கள் தேவை இதற்கு. அல்லது சாத்தியமாகாமலேயே கூடப் போகலாம். ரஜினிக்கு இது தெரியாதா என்ன
பாபாஜி ஆசி எதற்கு?
ரஜினி வணங்கும் என்றும் வாழும் மஹாவதார் பாபாஜி என்ன சொல்லியிருக்கிறார்... ரஜினி போன்ற நல்லவர்களுக்கு அரசியல் வேண்டாம் என்றா? அரசியலைத் தவிர்த்தால்தான் ரஜினிக்கு அமைதி கிடைக்கும் என்றா?
இல்லையே... பாபாஜியின் வாழ்க்கையை விவரிக்கும் பரமஹம்ஸ யோகானந்தர் இப்படிச் சொல்கிறார்:
“இந்த உலகில் இயேசு, கிருஷ்ணர் போன்றவர்கள் மனிதர்களாக அவதாரமெடுத்தது குறிப்பிட்ட வினை முடிக்க. அந்த வேலை முடிந்ததும் அவர்கள் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விட்டார்கள்.
ஆனால் பாபாஜி அவதாரமெடுத்தது இந்த உலகை தன் பூதவுடலோடு சுற்றி வந்து பாதுகாக்க. எங்கெல்லாம் அவரது இருப்பை வெளிக்காட்ட வேண்டுமோ அங்கெல்லாம் பூத உடலோடு தோன்றுகிறார். எந்த ஒரு காரியத்திலும் கருவியாக இருக்கிறார். அல்லது அந்தக் கருவியாக தனது ஆசி பெற்றவர்களை அனுப்பி வைக்கிறார்....!”
இந்த ரசிகர்கள் ரஜினியை வெறும் நடிகராக, அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கவில்லை. கடவுளின் ஆசியைப் பெற்ற உண்மையான ஆத்மாவாக, பிரதிநிதியாகப் பார்க்கிறார்கள். உடனே அவசரப்பட்டு, அது அவர்கள் தவறு என்று கூறாதீர்கள். இந்தப் பார்வையை அவர்களுக்குள் ஏற்படுத்தியதும் ரஜினி என்ற மனிதரின் நல்ல குணங்கள்தான்.
வறியவர்கள் வள்ளலிடம்தான் போக முடியும், கசாப்புக் கடைக்காரனிடம் அல்ல!
எனவே ரஜினி அரசியலுக்கு அல்லது பொது வாழ்க்கைக்கு வரவேண்டும் என ஒருமித்த குரலில் அவரை வரவேற்க வேண்டிய இந்தத் தருணத்தில், அவர் அரசியலுக்கு வரலாமா அல்லது நடிகராக இருந்து, ஒவ்வொரு பட ரிலீசுக்கும் போராடிக் களைத்து ரிட்டையர் ஆகிவிட வேண்டுமா என விதண்டாவாதம் பண்ணிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அறியாமை பாருங்கள்!
சுரண்டும் நோக்கமா?
ரஜினியின் அடிமட்டத் தொண்டனுக்கு சுரண்டல் சிந்தனை கிடையாது. அவனுக்கு அதற்கான நேரமும் இல்லை. ஆனால் மனம் முழுக்க வக்கிரத்துடன் விதண்டாவாதம் பேசித் திரிகிறார்களே... இவர்கள்தான் நாளை ரஜினி பொது வாழ்க்கைக்கு வந்தவுடன் முதல் பந்தியில் அமர்ந்து தலைவாழை இலையோடு ‘சாப்பிடக்’ காத்திருப்பவர்கள்!
நண்பர்களே...
ரஜினியை அரசியலுக்கு வா என அழைக்கும் மக்கள் யார்...எந்தப் பிரிவினர்?
இதற்கான பதிலை ஏன் ஆவி, ஜூவிக்களில் தேடுகிறீர்கள்... நீங்களும் இந்த சமூகத்தில் நடமாடிக் கொண்டிருப்பவர்கள்தானே... உங்களுக்குத் தெரிந்த வட்டத்தில் ஒரு 10 பேரிடம் மினி கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்திப் பாருங்கள்.
ரஜினிக்கு என்ன செல்வாக்கு இருக்கிறதென்பது உங்களுக்கும் தெரிய வரும். ரஜினியைத் திட்டுபவர்கள் கூட, அவர் அரசியலுக்கு வந்து ஒரு நல்ல ஆட்சியைத் தராமல் போய்விட்டாரே என்ற ஆதங்கத்தில் கொஞ்சம் கடுமையாகப் பேசுவதைக் கேட்க நேரலாம்.
ரஜினியின் ரசிகர்களுக்கு இந்த சமூகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும் உங்களுக்குப் புரியும்!
எனவே உழக்குக்குள் கிழக்கு மேற்கு பார்த்து இம்சித்துக் கொண்டிருக்காமல், ரஜினி என்ற தேவ ஆசி பெற்ற தலைவன் வருகையைத் துரிதப்படுத்தும் வேலையில் இறங்குங்கள்!
-சங்கநாதன்
|
|
|
|