அஜீத்-
அறிமுகம் தேவையில்லாத முன்னணி நடிகர். தலைவருக்குப் பிறகு மெகா ஓப்பனிங் உள்ள நடிகர் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெயரெடுத்துள்ளவர்.
எப்போதும் சர்ச்சை நாயகனாகத் தெரிந்தவர்... இப்போது சாந்த நாயகனாக மாறியிருப்பவர்.
Rajinifans.com என்றதும் கையை ஒருகணம் இறுகப் பற்றியவர், ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க பாஸ் என்று கூறிவிட்டு, வந்திருந்தவர்களுடன் அவசர அவசரமாகப் போட்டோ செஷன் முடித்துவிட்டு வந்தார். நமக்காக அஜீத் ஒதுக்கியது 10 நிமிடங்கள். அதில் ஒன்பதரை நிமிடங்கள் அவர் பேசியது தலைவர் ரஜினியைப் பற்றி!
ரஜினியைப் பற்றி பேசும்போது அவர் குறிப்பிடுவது இரண்டு வார்த்தைகளைத்தான்... தலைவர் அல்லது சார்...
அவரது வாழ்க்கையின் திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது...? ரஜினி என்ற மந்திரம் அவருக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியது?
இனி அஜீத் பேசுகிறார்...
அடிப்படையில் நான் தலைவரின் ரசிகன். அவரைப் பார்த்து, அவரைப் போலவே வரவேண்டும் என்ற ஆசையோடு வந்தவன். நான் நடித்த படங்களில் என்னால் முடிந்த வரை, ஒரு ரஜினி ரசிகனாக அவர் புகழ் பாடியிருக்கிறேன். அடிப்படையில் உங்களைப் போன்றே மிகத் தீவிரமாக அவரை ரசித்து மகிழும் ரசிகன் நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இடையில் நான் பேசியவை, அவை எந்த மாதிரி வடிவம் பெற்று மீடியாவில் வந்தன என்பதெல்லாம் எல்லோரையும்விட சாருக்கு நன்கு தெரியும்.
ஆனால், முன்பெல்லாம் நானாக அவரிடம் இதுபற்றிப் பேசினாலும் கூட அவர் தவிர்த்துவிடுவார். ‘விடுங்க... நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. கொஞ்சமா பேசுங்க... நிறைய செய்ங்க. அப்புறம், நீங்க பேசாவிட்டாலும் இவர்கள் அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்’ என்றார்.
எத்தனை சத்தியமான, அனுபவப்பூர்வமான வார்த்தைகள் பாருங்கள்!
அவர் எனக்கு தி ஹிமாலயன் மாஸ்டர் புத்தகம் கொடுத்தார். ஒரு குருவைப் போல அது எனக்கு வழிகாட்டும் என்றார். எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன், எப்போதும் சொல்வேன். ரஜினி சாரின் ரசிகர்களுக்கு இதைச் சொல்லுங்கள், ப்ளீஸ்...
பில்லாவில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்த பிறகு எத்தனை விதமாக அதைக் கெடுக்க நினைத்தார்கள் தெரியுமா... ஆனால் அப்போதெல்லாம், சாருடைய ஆதரவுதான் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. அந்தப் படம் துவங்கியதிலிருந்து, ரிலீஸ் வரை அனைத்திலும் ரஜினி சாரின் நேரடிப் பார்வை இருந்தது. யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது என்றுதான் சொல்வேன்.
இதோ.. ஏகன் ரிலீஸ். மிகுந்த சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். நிறைவாக இருக்கிறது. இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டார் தலைவர்.
தலைவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம், எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்பது. அவரைப் பாருங்கள்... யாரிடமாவது தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் பழகியிருப்பாரா... பேசியிருப்பாரா...! அவரே அப்படியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு பாஸ்!!
அவரது ரசிகன் என்று சொல்லிக் கொள்வது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.
நான் அமைதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்... உண்மைதான். எதற்கு அவசரப்பட வேண்டும். கிடைப்பது நிச்சயம் எனக்குக் கிடைத்தே தீரும் என்ற தலைவரின் வார்த்தைகளை நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நான் பெறும் வரையில்தான் அமைதியற்ற மனநிலையில் இருந்தேன்..., என்ற அஜீத், ஒரு புன்முறுவலுடன் விடை கொடுத்தார்.
-Sanganathan.
|