2 January 2013
சென்னை: நான் அரசியலுக்கு வந்தால் என்வழி தனி வழியாகத்தான் இருக்கும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற “ப. சிதம்பரம் – ஒரு பார்வை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ரஜினி பேசுயதிலிருந்து…
“பல ஆண்டுகளுக்கு முன் இதே அரங்கத்தில் நான் சிதம்பரத்துடன் மேடையல் இருக்கும்போது, மேடையிலிருந்த பலரைப் பற்றி 10 வரிகள் பேசி, சிதம்பரம் அவர்களைப் பற்றி இரண்டே வரிகள் பேசினேன்.
ஏன்னா 10 வரிகளில் அவரைப் பற்றி இப்போது பேச முடியாது. வேற ஒரு நிகழ்ச்சியில், அவருக்கென்றே நடத்தப்படும் நிகழ்ச்சியில் 10 வரிகள் பேசுவேன் என்று சொன்னேன்.
அந்த நிகழ்ச்சி இப்போ வந்திருக்கிறது!
அனைவருக்கும் தெரியும் அவருடைய தமிழ் ஆற்றல்.. ஆங்கில ஆற்றல். அவர் தமிழ் பேசும் போது ஆங்கிலம் வராது. ஆங்கிலம் பேசும்போது தமிழ் வராது.
ஆனா இங்கே (நான்) தமிழ் பேசும்போது ஆங்கிலம் வரும்… ஆங்கிலம் பேசும்போது தமிழ் வரும் (சிரிப்பு). அந்த மாதிரி…
ப சிதம்பரம் அவர்களைப் பற்றி அந்த புத்தகத்திலே நான் படிச்சேன். வைரமுத்து சொன்னதைப் போல, அந்தப் புத்தகத்தில் அவரைப் பற்றிய வாழ்த்துகள்தான் உள்ளனவே ஒழிய… ஆனா அவரைப் பற்றிய எழுதினால் 1000 பக்கத்துக்கு புத்தகம் போடற அளவுக்கு விஷயங்கள் உள்ளன.
1995-லிருந்து ப சிதம்பரம் அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. ரொம்ப நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அதுவும் எனக்குத் தெரியாத அரசியல் வட்டாரத்தில்… அரசியல் ஞானிகள்னே சொல்லலாம்… ஒரு தனி அறையில் அமரர் மூப்பனார், கலைஞர் போன்ற பெரிய பெரிய தலைவர்களுடன் ஒரு சினேகம் ஏற்பட்டு உரையாடிய சம்பவங்களை இப்போ நினைச்சிப் பார்த்தாலும் அதெல்லாம் உண்மையா… அப்படியெல்லாம் நடந்ததான்ற உணர்வு எனக்கு ஏற்படும்.
அதோட அருமை அப்போ எனக்குத் தெரியல!
அந்த 1996ல் தமாகா உருவாகும்போது, ப சிதம்பரம் அவர்கள் மூப்பனாரின் வலது கையாக இருந்து, குறுகிய காலத்தில் ஒரு மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தை, பெற்றுக் கொடுத்தார். அது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு அப்போ தெரிஞ்சது.
அந்த பெரும் பொறுப்பை ப.சிதம்பரத்திடம், மூப்பனார் ஒப்படைத்து, என்ன செய்வீங்களோ, எது செய்வீங்களோ… இதை செஞ்சு முடிங்கன்னு சொல்ல, அதை முடித்துக் காட்டியவர் ப சிதம்பரம் அவர்கள்.
அது எவ்வளவு கஷ்டம்.. சிரமமான காரியம் என்பதை அதுக்கப்புறம் என்னுடைய நண்பர் சோ எனக்கு உணர வைத்தார்.
அதன் பின்பு டெல்லியில் எனக்கு என்டிடிவி சார்பில் என்டர்டெயினர் ஆப் தி இயர் விருது கொடுக்கும்போது அவர் ஹோம் மினிஸ்டராக இருந்தார். அப்போது குறிப்பாக, நான் அந்த விழாவுக்கு வருவேனா என்பதை கேட்டு தெரிந்து கொண்டு, ‘நான் வருவதாக இருந்தால் வருவேன்’ என்று கூறி, நான் வந்ததை அறிந்து எனக்காக டெல்லியிருந்து வந்து அந்த விருதை எனக்குக் கொடுத்தார்.
அதை என்னால் மறக்கவே முடியாது… அவர் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய பெருமை அது!
தமிழனின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அவரை விட பொருத்தமாக யாருக்கும் இருக்காது என்பது என்னுடைய கருத்து. அந்த வேட்டி சட்டையில் அவ்வளவு அழகா இருப்பார்.. இருக்கிறார்!
அவருக்கு எந்தப் பொறுப்பு கொடுத்தாலும் எப்படி சிறப்பாக செயல்படுவார்னு எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை குஜ்ரால் அவர்கள் பிரதமராக இருந்த போது, பாராளுமன்றத்திலேயே ஓபனாக ப சிதம்பரம் அவர்கள் என்னுடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அது எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அவரது திறமை.
ஏழைகளை பணக்காரர்களாக்கணும்னு அவருக்குத் தெரியும்.. பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்காமல் இருக்கவும் அவருக்குத் தெரியும்… பணக்காரர்களான ஏழைகளா ஆக்கக் கூடாதுன்னும் அவருக்குத் தெரியும். முக்கியமா நடுத்தர மக்களை காப்பாத்தவும் அவருக்குத் தெரியும்.
வைரமுத்து சொன்ன மாதிரி, சென்ட்ரல்ல வந்து பொறுப்பு வகிக்கிறது ரொம்ப கஷ்டம். ஆனா எவ்வளவு கஷ்டமான பொறுப்பாக இருந்தாலும் அதை ஈஸியா எடுத்துக்கிட்டு செய்வாரு சிதம்பரம் என்ற நம்பிக்கை இருக்கு.
ராஜாவின் 3 வட்டங்கள்…
ஒரு ராஜ்யத்தை ஆளும் ராஜா முக்கியமா 3 வட்டத்துக்குள் வாழறான்.. மூணு வட்டம்… தனக்குன்னு முதல் வட்டம்… தான் மட்டுமே அந்த வட்டத்துக்குள்ள இருப்பான். அந்த வட்டத்துக்குள்ள யாரையுமே சேர்க்கிறதில்ல… மனைவியைக் கூட!
ரெண்டாவது வட்டம் அவனுடைய உறவினர்கள். பொண்டாட்டி… புதல்வர்கள்… ரொம்ப நெருங்கிய ரத்த சம்பந்தப்பட்ட உறவினர்கள் மட்டும் இந்த வட்டத்துக்குள் இருப்பார்கள்.
மூணாவது வட்டம்… அந்த வட்டத்தில் நெருங்கிய நண்பர்கள்.. அந்த நெருங்கிய நண்பர்களிடத்தில்தான், அந்த 2வது வட்டத்துக்குள் உள்ள சொல்ல முடியாத, மனசுக்குள்ள இருக்கிற விஷயங்களையெல்லாம் இந்த மூணாவது வட்டத்துக்குள்ள இருக்கிற நண்பர்கள்கிட்டதான் சொல்லுவாங்க. அந்த 3 வது வட்டத்துக்குள்ளதான் அந்த ராஜா ரிலாக்ஸா இருப்பாங்க.
சிதம்பர ரகசியம்…
டெல்லியில யாரு பிரதமரா வந்தாலும் சரி, பெரிய அதிகாரத்திலிருப்பவராக இருந்தாலும் சரி, அந்த மூணாவது வட்டத்துக்குள்ள இருக்கும் முதல் நபர், தமிழர் நம்ம ப சிதம்பரம் அவர்கள்.
அவருக்குத் தெரியாமல், ஒப்புதல் பெறாமல் டெல்லியில் எந்த ஒரு சட்டமோ, பெரிய பெரிய தீர்மானங்களோ உருவாக முடியாது, நடக்காது.. இது உண்மை.. அரசியல் ரகசியம்… சிதம்பர ரகசியம்!
இளைஞர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள்…
அவருக்கு எல்லாமே தெரியும். இளைஞர் சமுதாயம்.. மாணவர் சமுதாயம் அரசியல்வாதிகளுக்கு எதிரா, சட்டங்களுக்கு எதிரா குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தெரியும். அவர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள் என்பதும் சிதம்பரம் போன்ற அரசியல் அறிஞர்களுக்கு நன்கு தெரியும்.
‘அவர்கள் விழித்துக் கொள்ளும் முன் நாங்களும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் நாட்டுக்கே பெரிய ஆபத்து’ என்பதும் அவருக்குத் தெரியும். சில சட்டங்களை மாற்றி, இரும்புக் கரம் கொண்டு அமல்படுத்தவில்லை என்றால், ஒரு மிகப் பெரிய புரட்சியே இந்திய நாட்டில் நடக்கும் என்பதும் அவருக்குத் தெரியும்.
என்வழி தனீவழி…
ஹவ்வீஸிட் கண்ணா…. ?
அவர் ப்ரெண்ட்ஸோட.. ஒரு ரசிகர் போல அடிக்கடி எங்கிட்ட கேக்கிறாங்க…’நீ ஏன் அரசியலுக்கு வரக்கூடாது’.. அப்டீன்னு சொல்லி. அவருக்குத் தெரியும்.. நான் அரசியலுக்கு வந்தால் என்வழி தனீ வழியாதான் இருக்கும்னு (ரொம்ப தீர்க்கமாக!).
இந்த நன்னாளில் ப சிதம்பரம் அவர்களுக்கு நம்முடைய வாழ்த்துகளைச் சொல்லி, நிறைய பேசனும்னு நினைச்சா கூட, நேரமில்லாத காரணத்தால் என் பேச்சை இத்தோட முடிச்சிக்கிறேன். நன்றி, வணக்கம்!
நம்முடைய வேலை எதுவுமில்லை… இது புகைப்படக்காரரின் காமிராவண்ணம்
வாங்க ரஜினி… எவ்ளோ நாளாயிடுச்சுல்ல?!
ரஜினி… நானும் எவ்வளவோ நல்ல தமிழில் எதுகை மோனையுடன் பேசறேன்.. ஆனா அன்னிக்கு ரசிகர்கள் கூட்டத்துல உங்க பேச்சுக்கு கிடைச்ச பாப்புலாரிட்டி இருக்கே.. ஆஹா!
அது.. மனசிலருந்து பேசறது… அப்படித்தான் இருக்கும் அய்யா!
‘நாம ஒண்ணு சொன்னா அதுக்கு ஒம்பது அர்த்தம் கற்பிச்சிடறாங்களே…!
சரி.. இன்னிக்கு ட்ரெயிலர் காட்டிடுவோம்…
|