20 August 2012
வர வர நம்ம ஆளை புரிஞ்சிக்கவே முடியலீங்க. வருவாருன்னு நினைக்கிறோம். வரமாட்டேங்குறாரு. வரமாட்டாருன்னு நினைக்கிறோம். எதிர்பாராம வந்து நிக்குறாரு. இவரைப் பத்தி என்ன சொல்ல?
சிவாஜி 3D ட்ரெயிலர் வெளியீட்டு விழாவுக்கு ஜஸ்ட் ஒரு கவரேஜ்க்காகத் தான் போயிருந்தேன் நான். தலைவர் வருவாருன்னு எதிர்பார்க்காலே. நான் மட்டுமில்லே யாருமே எதிர்பார்க்கலே. வந்தவர், நிகழ்ச்சி முழுக்க உட்கார்ந்து ரசிச்சு, சூப்பரா சில வார்த்தைகள் பேசிட்டும் போயிட்டார்.
நேற்றைக்கு மாலை திடீர்னு சென்னையை குளிர்விக்க எதிர்பாராம செம மழை பெஞ்சது. அதே போல, ரசிகர்களின் இதயங்களை குளிரிவிக்க ரஜினி என்னும் மாமழை பெய்தது அப்படின்னு வேணா சொல்லலாம்.
சிவாஜி 3D படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா & பத்திரிக்கையாளர் சந்திப்பு 13/08/2012 திங்கள் மாலை சரியாக ஆறு மணியளவில் பிரசாத் லேப்பில் உள்ள ப்ரீவ்யூ திரையரங்கில் நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் எதிர்பாராத விதமாக வந்திருந்து அனைவரையும் திக்குமுக்காடச் செய்தார். இரண்டு நாட்களாக துவண்டுபோயிருந்த எனக்கு தலைவரை நேரில் அதுவும் மிக மிக அருகே பார்த்தவுடன் இன்று க்ளுக்கோஸ் குடித்தது போல ஒரு புத்துணர்ச்சி.
பொதுவாக இது போன்ற பத்திரிக்கையாளர் சந்திப்புக்கள் குறித்த நேரத்தில் துவங்குவதில்லை. ஆனால் இன்று சொல்லிவைத்தாற்போல சரியாக 6 மணிக்கு துவங்கிவிட்டது. காரணத்தை சொல்லவும் வேண்டுமோ?
சரியாக இதே நேரத்தில் மழை பிடிபிடிஎன்று பிடிக்க, பலர் தாமதமாக தான் வரமுடிந்தது. ஆனால் அதற்குள் அரங்கம் நிரம்பிவிட்டது. அது ஏற்கனவே மிகச் சிறிய இடம். எள் கூட விழ இடமில்லாது, அரங்கம் நிரம்பி வழிந்தது.
முதலில் அனைவரையும் வரவேற்று பேசிய எஸ்.பி.முத்துராமன், “சூப்பர் ஸ்டார் ரஜினி இங்கே வந்திருக்கிறார். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் அவரை பற்றி தேவையின்றி வதந்திகள் பரப்பவேண்டாம். இன்று இங்கு வந்திருக்கிறார். நேற்றும் நேற்று முன்தினமும் கம்பன் கழகம் சார்பாக நடைபெற்ற விழாக்களில் தினசரி 4 மணிநேரம் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார் என்று சொல்ல விரும்புகிறேன். ஆகையால் அவருடைய உடல் நிலை பற்றிய தவறான செய்திகளை பத்திரிக்கை நண்பர்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
அடுத்து படத்தை எப்படி 3D கன்வர்ஷன் செய்தார்கள் என்பது பற்றி ஒரு டாக்குமெண்டரி ஒளிபரப்பப்பட்டது. அதில், பிரசாத் லேபின் கிராபிக்ஸ் டிப்பார்ட்மென்ட், மற்றும் எடிட்டிங் சூட்டுக்கள் இவை காண்பிக்கப்பட்டன. படத்தில் தொழில்நுட்பத்தில் பணியாற்றியவர்கள் படம் எப்படி த்ரீ-டி தொழில் நுட்பத்தில் கன்வர்ட் செய்யப்பட்டது என்று விளக்கினார்கள்.
அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் சுமார் ஐந்து நிமிட ட்ரெயிலர் திரையிடப்பட்டது.
பெரும்பாலும் பத்திரிக்கையாளர்களே நிரம்பியிருந்த அறையில், சில காட்சிகளுக்கு விசில் சப்தம் காதை பிளந்தது.
சண்டைக் காட்சிகள், குத்துவிடும் சீன்கள், பாடல் காட்சிகளில் முக்கியமான ஷாட்டுகள் (உதாரணத்துக்கு வாஜி வாஜி பாடலில் ஆப்பிளை காட்ச் பிடித்தல், ரோஜாப் பூவை எறிதல்) மற்றும் படத்தின் பல முக்கியமான காட்சிகள் த்ரீ-டி செய்யப்பட்டிருந்தன.
படம் வெளியான சமயம் – நாம் அனைவரும் படத்தை சலிக்க சலிக்க பார்த்துவிட்டபோதும், தற்போது த்ரீ-டி ட்ரெயிலர் பார்க்கும்போது, இப்பொழுதே முழு படத்தையும் திரையிட்டால் எவ்வளவு நன்றாக என்று நிச்சயம் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்த அனைவருக்கும் தோன்றியிருக்கும். காரணம் படம் ஐந்து ஆண்டுகள் கழித்தும் கூட FEEL-GOOD-FRESH ஆக இருந்தது.
படத்தின் சவுண்ட் கூட மெருகூட்டப்பட்டிருப்பதாக நமக்கு தோன்றியது. அந்தளவு ஸ்டீரியோ சர்ரவுண்ட் சவுண்ட் பிரமாதம்.
மூன்று மொழிகளிலும் ட்ரெயிலர் வெளியீடு முடிந்ததும் படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. ஸ்க்ரீனுக்கு முன்பாகவே சேர்கள் போட்டு, அதில் படம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் மற்றும் தயாரிப்பாளர்கள் டீம் அமர்ந்தனர். சூப்பர் ஸ்டாரும் கூடவே அமர்ந்தார்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகமாக கேள்விகளை வீசினர்.
கேள்வி 1 : நீங்கள் நடித்த படங்களில் வேறு எந்த படம் இது போன்று 3D கன்வர்ஷன் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்? அதாவது 3D வடிவத்தில் நீங்கள் பார்க்க விரும்பும் படம் எது?
ரஜினி : 3D வடிவில் பார்க்கவேண்டும் என்றால் அது பிரம்மாண்டமான சப்ஜெக்க்டுகள் மட்டுமே முடியும். அப்படி பார்க்கும்போது, எந்திரன், படையப்பா…. ஆகிய படங்கள் 3D செய்ய ஏற்ற படம். இனிமே செய்ற படங்கள் எல்லாமே 3D ல தான் செய்யப்படும். ஏன்னா இனி எதிர்காலமே 3D படங்கள் தான்.
கேள்வி 2 : எப்படி இதை உணர்கிறீர்கள் ?
ரஜினி : ஆண்டவன் என் பக்கம் தான் இருக்கான் என்பது எனக்கு இப்போ நல்லா புரிஞ்சிடிச்சு. காரணம், ரசிகர்களுக்கு என்னால எதுவும் திருப்பித் தரமுடியலேயேன்னு நினைச்சிட்டுருந்தேன். இந்தப் படம் இப்படி ஒரு மெத்தட்ல எனக்கு தெரியாமலே ரெடியாகியிருக்கு. ஜஸ்ட் ஒரு ரெண்டு வாரம் முந்தி தான் சரவணன் சார் திடீர்னு என்னை கூப்பிட்டாங்க. “இப்படி ஒரு படம் ரெடியாகியிருக்கு. நீங்க அவசியம் பார்க்கணும் சார். அப்படின்னு கேட்டுக்கிட்டாங்க. அப்போ நான் ஜஸ்ட் ஒரு ஸாங் மட்டும் தான் பார்த்தேன். அப்புறம் சில சீன்ஸ். அப்போ ஃபுல்லா ரெடியாகலே. பார்க்கும்போதே அது என் படம்னு தெரியாமலே நான் கைதட்டி ரசிச்சேன். அந்தளவு பிரமாதமா பண்ணியிருந்தாங்க ஏ.வி.எம்ல. அவங்களுக்கு என் நன்றி.
இதை எப்படி இவ்ளோ ஷார்ட் டைம்ல பண்ணினாங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருந்திச்சு. அப்போ சொன்னாங்க 400 பேர் இதுக்காக இரவு பகல் பாராம ஒர்க் பண்ணியிருக்காங்கன்னு. ரியல்லி கிரேட்.
இதுல ஒரு விஷயம் என்னன்னா ‘கோச்சடையான்’ படம் வந்துட்டு பர்ஸ்ட் த்ரீ-டி படம்னு சொல்லி அவங்க சொல்ல்கிட்டிருக்காங்க. ஆனா இவங்க இப்போ முந்திக்கிட்டாங்க. (சொல்லிவிட்டு சிரிக்கிறார்!)
இது உங்களுக்கே இவ்ளோ பிடிச்சிருக்குன்னா என் ஃபேன்ஸ்க்கு எவ்ளோ பிடிச்சிருக்கும்?
கேள்வி 3 : இனிமேல் நீங்க பண்ற படங்கள் எல்லாம் 3D & 2D இரண்டிலும் வருமா?
ரஜினி : It depends on subject. ஆக்சுவலா எடுக்கும்போதே 3D யில் எடுப்பது ஈஸி. இப்படி கன்வர்ஷன் செய்வது தான் கஷ்டம். நாம 3D படத்தை பிளான் பண்ணி, அதுக்கேத்த மாதிரி சப்ஜெக்டை செலக்ட் பண்ணி, அதுக்கேற்ற மாதிரி செட் இதெல்லாம் பிளான் பண்ணி பண்ணனும்.
கேள்வி 4 : ஒரு ரசிகரா நாங்க அதை விரும்புறோம். ஏன்னா சின்ன வயசுல இருந்து நாங்க ADMIRE பண்ணி பார்த்துகிட்டே வந்த ஒரு இகான் நீங்க. உங்க படத்தை 3D ல பார்க்கும்போது ஏதோ எங்க கூட, எங்க பக்கத்துல உங்களை பார்க்குற மாதிரி இருக்கும்.
ரஜினி : ‘கோச்சடையான்’ படத்தை பத்தி நான் இங்கே பேசக்கூடாது. இருந்தாலும் நீங்க கேட்டதுக்காக சொல்றேன். கொச்சடையானே 3D படம்தானே. முழுக்க முழுக்க த்ரீ-டியில் ஒரு லைவ் ஆக்ஷன் படம் பண்ண முடியாது. காரணம் அதுக்கு இன்டர்நேஷனல் மார்கெட் வேண்டும். அந்த பட்ஜெட்டுக்கு அது தான் சரிப்பட்டு வரும். ஆனால் ரீஜனல் மார்கெட்ல என்ன செய்யமுடியுமோ அதை நாங்க செய்திருக்கோம். கம்ப்யூட்டர்ல அந்த செட்டிங்குகளை போட்டு எங்களால என்ன பெஸ்ட்டா பண்ண முடியுமோ அதை பண்ணியிருக்கோம்.
கேள்வி 5 : ரஜினி சார், படம் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறோம். உங்களுக்கு இந்த படத்துல 3D கன்வர்ட் பண்ண சீன்ல எந்த சீன ரொம்ப பிடிச்சிருந்தது?
ரஜினி : எனக்கு இன்னும் முழு படத்தையும் அவங்க போட்டு காமிக்கலே. எனக்கு FEW MINUTES தான் போட்டு காண்பிச்சாங்க. எனக்கு அந்த வாஜி வாஜி சாங் தான் போட்டு காண்பிச்சாங்க. அதை பார்த்து நானே பிரமிச்சு போயிட்டேன். மூணு முறை அதை திரும்ப திரும்ப போடச் சொல்லி பார்த்தேன். இதுவே இப்படி இருக்குன்னா அந்த கண்ணாடி மாளிகை சாங், அதிரடி தான் மச்சான் மச்சான் மச்சானே, அப்புறம் அந்த க்ளைமேக்ஸ் பைட் இதெல்லாம் எப்படி இருக்கும்…. நீங்க ஏற்கனவே பார்த்திருபீங்க. நீங்க இப்போ அந்த காட்சிகள் எல்லாம் த்ரீ-டியில் எப்படி இருக்கும்னு VISUALIZE பண்ண முடியும்.
கேள்வி 6 : பிளாக் & ஒயிட் காலத்துல இருந்தீங்க, அப்புறம் கலர் காலத்துலயும் இருக்கீங்க, இப்போ த்ரீ-டி காலத்துலயும் இருக்கீங்க. எந்த நடிகருக்கு இந்த மாதிரி ஒரு பாக்கியம் கிடைக்கும்னு தெரியலே… (கைதட்டல்களால் அரங்கம் அதிர்கிறது)
ரஜினி : நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி. வேறென்ன சொல்ல? இந்தியாவுலேயே இது தான் முதல் தடவைன்னு நினைக்கிறேன். நான் எதையும் பிளான் பண்ணி செய்வதில்லை. இது உண்மையில் ஆண்டவனின் ஆசீர்வாதம் தான். ஏ.வி.எம்.சரவணன் சார், பிரசாத் லேப், மற்றும் ஷங்கர் சார், படத்துல ஒர்க் பண்ண எல்லா டெக்னீஷியன்ஸ்க்கும் என் நன்றி.
நிகழ்ச்சி முடிந்ததும், அதற்குத் தான் காத்திருந்தது போல அனைவரும் பலாப்பழத்தை மொய்க்கும் ‘ஈ’ போல சூப்பர் ஸ்டாரை மொயத்துவிட்டார்கள். நாம் அமைதியாக அனைத்தையும் ரசித்துக்கொண்டிருந்தோம்.
நிகழ்ச்சி இத்துனை சிறப்பாக நடந்து முடிந்ததில், ஏ.வி.எம். குழுமத்தினரின் முகங்களில் சந்தோஷ ரேகை படர்ந்ததில் ஆச்சரியமில்லையே!
நிகழ்ச்சி முடிந்தவுடன் வந்திருந்தவர்களுக்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். அனைவரும் அதை பிடிபிடி என்று பிடிக்க, நமக்கு தலைவரை பார்த்த சந்தோஷத்தில் பசிக்கவில்லை. ஆவலுடன் காத்திருக்கும் உங்களை மேலும் காக்க வைக்க விரும்பவில்லை. எனவே, நண்பர்களுடன் கூட வெகு நேரம் பேசாமல், உடு ஜூட். வீட்டுக்கு வந்து சிஸ்டமில் உட்கார்ந்து அப்டேட் அளித்த பிறகே நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
|