நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை ரஜினி நீக்கிவிட்டதாக வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை.
இது திட்டமிட்ட வதந்திதான் என்பதை மன்றப் பணிகளைக் கவனித்து வரும் சுதாகர் அறிவித்துள்ளார்.
நேற்றுமாலை பத்திரிகையாளர்களிடம் அவர் அளித்துள்ள விளக்க அறிக்கை:
சமீபத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை, ராகவேந்திரா மண்டபத்தில் நேரில் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ரஜினி.
அப்போது, ‘உடல்நிலை சரியில்லாததாலும், அம்மா இல்லாத நிலையில், வயதான தன் தந்தையைப் பராமரிக்க வேண்டும் என்பதாலும், அகில இந்திய ரசிகர் மன்ற பொறுப்பில் இருக்கும் சத்தியநாராயணாவை ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறேன்’ என்று ரஜினியே தெரிவித்தார்.
இனிமேல் ரசிகர் மன்ற விஷயங்களை தானே நேரடியாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினி.
தற்போது எந்திரன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் ரசிகர் மன்ற விஷயங்களை நான் கவனித்து ரஜினியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில் எனக்கு உதவியாக இரு பணியாளர்களையும் அமர்த்தியுள்ளார். தினசரி மன்றத்துக்கு வரும் செய்திகளை அவர்கள் குறித்து வைத்துக் கொள்வார்கள். பின்னர் அவற்றை நான் ரஜினியிடம் சேர்ப்பேன்.
எனவே, சில பத்திரிகைகளில் வெளியான செய்தியைப் போல், சத்தியநாராயணா நீக்கம் இல்லை. அவரை தற்காலிகமாக ஓய்வு எடுக்குமாறு ரஜினி கேட்டுக்கொண்டார். அவரது நலனில் அக்கறை கொண்டு ரஜினி எடுத்திருக்கும் முடிவு இது. தயவு செய்து கற்பனைகளைச் செய்தியாக்க வேண்டாம் என்று மீடியா நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மீண்டும் சொல்லிக் கொள்வதெல்லாம், இப்போது ரசிகர் மன்றம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ரஜினியே நேரடியாக கவனித்துக் கொள்கிறார். எனவே இதில் எந்த குழப்பத்துக்கும் ரசிகர்கள் இடமளிக்க வேண்டாம், என்று சுதாகர் கூறியுள்ளார்.
-சங்கநாதன்
|