மாவீரன் நெப்போலியன் போனபார்ட்டின் படைவீர்கள் மனச் சோர்வடைந்து, இனி படையில் தொடர்வது முடியாத காரியம் என்ற ‘மூடு’க்கு வந்துவிட்ட நேரம். ஆனால் அப்போதுதான் இங்கிலாந்தை முடக்கும் நோக்கில் பெர்லின் போரில் நெப்போலியன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தான். தன் தளபதி மூலம் வீரர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட நெப்போலியன், போருக்கு ஒருநாள் முன்பாக தன் பாசறையில் வீரர்கள் முன் எழுச்சியுரையாற்றினான். ஒரு மணி நேரம்... உணர்ச்சிகரமான உரை...
அடுத்த நாள் போரில், பிரஷ்யா (அன்றைய ஜெர்மனி) அவன் காலடியில்! ஆங்கிலக் கால்வாயை மூடி பிரிட்டனின் வணிக சாம்ராஜ்யத்துக்கு ஆப்பு வைக்கப் போவதாக நெப்போலியன் அறிவிக்க அஸ்தியில் ஜூரம் கண்டு ஆடிப்போனது, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் எனப் புகழ்பெற்ற இங்கிலாந்து!
ரஜினியின் நவம்பர் 3-ம் தேதி சந்திப்பும் அவரது உணர்ச்சிகரமான தெளிவான ஆணித்தரமான பேச்சும் எனக்கு சட்டென்று நினைவுபடுத்தியது இந்த சரித்திர சம்பவத்தைத்தான்.
ரஜினி தன் ரசிகர்களைச் சந்தித்து இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் இந்தப் பதிவை எழுதக் காரணம், ரசிகர்களின் இன்றைய மன நிலையில் ஏதேனும் மாறுதல் இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளவே. முன்னைக் காட்டிலும் பல மடங்கு உத்வேகமும் ஆர்வமும் அவர்களை ஆட்கொண்டிருக்கின்றன... அதுதான் மாறுதல்!
சந்திப்பு நடந்த அன்று கிட்டத்தட்ட 99 சதவிகித ரசிகர்கள், பத்து எந்திரன் படம் பார்த்த மகா திருப்தியுடன் வெளியில் வந்தனர். மீதி ஒரு சதவிகிதத்தினருக்கு மட்டும் அந்த அரசியல் கேள்விக்கு இன்னும் முடிவான பதில் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. மற்றபடி அவர்களுக்கு தலைவரின் தரிசனம் கிடைத்த திருப்தியும், நிச்சயம் ஒரு நாள் பொதுவாழ்க்கைக்கு வருவார் என்ற நம்பிக்கையும் வலுப்பட்டிருந்தன.
நிச்சயம் எந்திரனுக்குப் பிறகு ரஜினியின் முடிவுகள் நாடே கவனிக்கும் வகையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கவே செய்கின்றன.
அன்றைய சந்திப்புக்கு வந்திருந்த ரசிகர்களில் சிலரை, இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு தொடர்பு கொண்டு இப்போதைய மனநிலையை விசாரித்தோம்.
ஒரே கேள்வியில் ரஜினியின் அபிமானத்தைப் பெற்ற கிருஷ்ணகிரி ரசிகர் கார்த்திக், ‘யார் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளட்டும். எனக்கு நினைவு தெரிந்து இதுதான் மிகச் சிறந்த தீபாவளி... கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், எங்களை கவனித்துக் கொள்ள உத்தரவிட்ட விதம், எவர் மனதையும் புண்படுத்த விரும்பாத அவர் மனப்பான்மை... நிச்சயம் தலைவர்தான் இந்த தமிழகத்தின் தலை எழுத்தை மாற்றி எழுதப் போகிறார்..., என்றார்.
சரி... இவராவது ரஜினியைப் பார்க்க நேரில் போனார்... தலைவரைத் தரிசித்தார். அதைவிட முக்கியம் அவர் கவனத்தை சில வினாடிகள் தன்பக்கம் திருப்பினார்.
ஆனால் இந்த நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த சில ரசிகர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் பார்வைதான் வியக்க வைக்கிறது. இரண்டு நாட்கள் ஆனாலும், இன்னமும் கூட ரஜினியின் பேட்டி ஏற்படுத்திய தாக்கம் அவர்களிடம் குறையவே இல்லை.
பாபா படத்தில் கவுண்டமணி சொல்வதுபோல, ஏபிசி என ‘ஆல் கிளாஸ்’களையும் தன் வசப்படுத்திவிட்டிருக்கிறார் ரஜினி, ஒரு ஒரேயொரு பேட்டி மூலம்.
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் குமாரவேலு ஒரு மிகத் தீவிர ரஜினி ரசிகர்.
அவரது கருத்து உண்மையில் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒரு தூண்டல் மாதிரி இருந்தது.
“எனக்குத் தெரிந்து, இந்த மாதிரி விஷன் (தொலைநோக்குப் பார்வை) கொண்ட ஒரு நடிகர், தலைவர் தமிழகத்தில் ஒருவர் உண்டென்றால் அது ரஜினிதான். அவர் மீதுள்ள பற்றால் இப்படிச் சொல்வதாக எண்ண வேண்டாம். எப்படிப்பட்ட பாராட்டுக்கும் தகுதியானவர் ரஜினி.
அவரது பேட்டி முடிந்து பல மணிநேரம், அவரது பதில்களில் தொனித்த நேர்மையையும், யதார்த்தத்தையும் நினைத்து வியந்துபோனேன்... நடிப்பு, அரசியல் அனைத்தையும் தாண்டிய ஒரு அற்புத மனிதர் ரஜினி. பணத்தைப் பற்றி இவ்வளவு ஓப்பனாக, கட் – அண்ட் ரைட்டாக பேசிய ஒரே தலைவர் எனக்குத் தெரிந்து ரஜினிதான்... இவருக்கு ரசிகனாக இருப்பதற்காக ஒவ்வொருவரும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...” என்கிறார் டாக்டர் குமாரவேலு.
நெல்லையைச் சேர்ந்த கண்ணன், ஒரு பகுதி நேர பத்திரிகை நிருபர். அழைப்பில்லாவிட்டாலும், சக ரசிகர் மன்ற நண்பர்களுடன் சென்னை வந்தார். சரி, நம்மை உள்ளே விடமாட்டார்கள் என்றெண்ணி தயங்கி நின்றவர், பின் பத்திரிகையாளர் என்ற அடையாளத்தப் பயன்படுத்தி உள்ளே போய்விட்டார்.
‘பத்திரிகையாளர் என்பது எனது தொழிலல்ல. ஆனால் பல நேரங்களில் எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. ஆனால் இந்த அடையாளம் நிஜமாகவே பயன்பட்டது நேற்றுதான். ரஜினியின் அந்த புரட்சிகரமான பேட்டியையும், அவர் ரசிகர்கள் மீது வைத்துள்ள அக்கறையையும் நேரில் பார்த்த பிறகு அவர் மீது எனக்கிருந்த சின்னச் சின்ன மனவருத்தஙகள் மறைந்தே விட்டன. இந்த நேர்மைதான் ரஜினி சாரிடம் பிடித்த விஷயம். சத்தியமாகச் சொல்கிறேன்... என் வாழ்நாளில் ரஜினியைத் தவிர வேறு யாரையும் தலைவராக நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன்...” என்கிறார்.
ஸ்டெல்லா ஒரு ஆசிரியை. ரஜினியை தனக்குப் பிடித்த நடிகராகச் சொல்லிக் கொண்டிருந்தவர், கடந்த 2 வருடங்களாக அவரை கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார். தன் வகுப்பு மாணவர்கள் யாராவது ரஜினி பற்றிப் பேசினாலோ, அவர் படங்களை வைத்துக் கொண்டிருந்தாலோ கூட எரிந்து விழுவாராம். நவம்பர் 3-ம் தேதிக்குப் பின் ஸ்டெல்லாவின் போக்கு அடியோடு மாறியிருக்கிறது.
“எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் ரஜினிதான் எனக்குப் பிடித்த ஹீரோ. ஆனால் அவரைப் பற்றிய என் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் வந்துவிட்டது. குசேலன் மன்னிப்பு விவகாரத்தில் எனக்கு அவரைப் பிடிக்காமலே போய்விட்டது.
ஆனால் நேற்றைய பேட்டியில் பல விஷயங்களை அவர் தெளிவாக்கிவிட்டார். குசேலனில் ஆர்.சுந்தர்ராஜன் எப்படி கடைசி நேரத்தில் ரஜினி சாரைப் பற்றி உயர்வாகச் சொல்வாரோ அப்படியொரு மனநிலைக்கு நானும் வந்துவிட்டேன் அந்தப் பேட்டியைப் பார்த்து. சத்யசந்தன் என்பார்களே... அந்த வார்த்தை ரஜினிக்குதான் மிகவும் பொருந்தும். அவரைப் போன்ற ஒரு பொறுப்பான குடும்பத் தலைவனால்தான் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும்... இடைப்பட்ட காலத்தில் அவரைப் பற்றி தவறாகப் பேசிக் கொண்டிருந்த என் போன்றவர்கள் ரஜனியைப் புரிந்துகொள்ள அவர் தந்த நல்ல வாய்ப்பு இது” என்றார் ஸ்டெல்லா.
உண்மைதான்... இதுநாள் வரை ரஜினியை விமர்சித்தவர்களில் பலர் இப்போது குசேலனில் வரும் சுந்தர்ராஜன் கேரக்டர் மாதிரிதான் மாறியிருக்கிறார்கள்!
-சங்கநாதன்
|