இந்தியாவின் மூன்று முக்கிய தொலைக்காட்சி சானல்கள்; கலர்புல் காம்பியர்கள், நேரடி ஒளிபரப்பு. இத்தனையும் ஒரு தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும் வரவேற்பை விழுங்க காத்துக்கொண்டிருந்தது தமிழ் மீடியாவுக்கு புதிய விஷயம்.
குரேம்பேட்டை வெற்றி தியேட்டர். அதிகாலை மூன்று மணிக்கே ஆஜராகிவிட்டார் என்டிடிவியின் பிரத்யேக செய்தியாளர். ரசிகர்களின் உற்சாகத்தை உள்வாங்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் என்டிடிவியின் இன்னொரு செய்தியாளர்க ஆல்பட் தியேட்டர் அருகே காமிராவை முடுக்கிக்கொண்டிருந்தார்.
பொழுது விடிவதற்குள்ளாகவே சிஎன்என், டைம்ஸ் நவ், ஆஜ் தக், ஹெட்லைன்ஸ் இந்தியா என தேசிய சானல்கள் ஆல்பட் தியேட்டருக்குள் வந்து இறங்கிவிட்டன. ஒவ்வொரு சானலும் நியூஸ் ஆரம்பித்து வைக்க களைகட்டியது நேரடி ஒளிபரப்பு. படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள் பட்லர் இங்கிலீஷில் விடாமல் வெளுத்து வாங்கினார்கள்.
சூரியன் மறையும் வரை கொளுத்தும் வெயிலிலும் விடாமல் செய்தியாளர்கள் செய்தி சேகரித்துகொண்டிருந்தார்கள். சிவாஜி, சிவாஜி, சிவாஜியைத் தவிர வேறில்லை. ரஜினியைப் பற்றியும் அவரது ரசிகர்களைப் பற்றியும் அரைமணிக்கொரு முறை கவரேஜ் நியூஸ் டில்லிக்கு பறந்தது.
இந்தி பேசும் மாநிலங்களிலும் சிவாஜி சக்கைப் போடு போடுவதற்கு செய்தி சானல்களே காரணம் என்கிறார்கள்.
எது எப்படியோ, ஒரே ஒரு பிட் நியூஸை வைத்து பத்தி பத்தியாக கவர்ஸ்டோரி எழுதி ரஜினி ரசிகர்களின் பர்ஸை காலி செய்து ஏமாற்றிக்கொண்டிருந்த தமிழ்நாட்டு பத்திரிக்கைகளும், நாளிதழ்களும் ஆங்கில செய்திச் சானல்களை கண்டு மிரண்டு போயிருப்பது என்னவோ உண்மை.
|