
3 February 2012
தலைவர் எந்தளவு நிறைய விஷயங்களை படிச்சிருக்கிறார், கேட்டிருக்கிறார், தெரிஞ்சு வெச்சிருக்கிறார்… என்பது இதை படித்தவுடன் உங்களுக்கு உங்களுக்கு புரியும். அவரே கூறுவது போல, அவர் பள்ளிக் கூடத்தில் படித்ததைவிட வாழ்க்கையில் படித்தது அதிகம்.
விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது:
இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் பெரியவர்களே, நண்பர்களே, பத்திரிக்கையாளர்களே, என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே… (நீண்ட கைத்தட்டல்… சற்று பொறுத்து பார்க்கிறார். அப்போதும் ஓயவில்லை. இப்படியே இருந்தால் பேசமுடியாது என்று நினைத்து உடனே பேச்சை தொடர்கிறார்) இந்த விழாவின் நாயகர் என் நண்பர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களே, அவர்களை வாழ்த்தி பேசிவிட்டு மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்க்குரியவர்களே … அனைவருக்கும் என் வணக்கம்.
நேற்று என் ஃப்ரென்ட் ஒருத்தரு எனக்கு ஃபோன் பண்ணி “என்ன ரஜினி, காலம் ரொம்ப கேட்டுப் போச்சி. போய் பேசுறதுக்கு அளவேயில்லாம போச்சு. பொய் பேசுறது மட்டும் இல்லாம அதை போஸ்டர் வேற அடிச்சி ஓட்டுறாங்க” அப்படினார். நான் உடனே என்ன சமாச்சாரம்னு கேட்டேன். “அதில்லே… யாரோ எழுத்தாளருக்கு பாராட்டாம். அதுல நீங்க கலந்துக்குறீங்களாம். ஒரு போஸ்டர்ல பார்த்தேன்.” நான் “ஆமாம் கலந்துக்குறேன். அது உண்மைதான்.” அப்படின்னு சொன்னேன். அவருக்கு ஆச்சரியம். ஏன், எனக்கே ஆச்சரியம் தான். ஒரு எழுத்தாளனுக்கு, என் நண்பருக்கு, ஒரு மொழியை முற்றிலுமாக தெரிந்த ஒரு படைப்பாளிக்கு நடக்கும் பாராட்டு விழாவில் நான் வந்து கலந்து கொண்டு பாராட்டுவதை நினைக்கும்போது, சந்தோஷம், ஆச்சரியம் அதே நேரம் பயமும் கூட… ஏன்னா இதுவரைக்கும் நான் கலந்துகிட்ட நிகழ்ச்சிகள், பேசிய சபைகள் எல்லாம் வேற. ராமாகிருஷ்ணன் சார் சொன்னாங்க, பெரிய பெரிய தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மீடியாவுல இருந்து பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க அப்படின்னு சொன்னார். இப்படி அறிஞர்கள் பலர் வந்திருக்கும் இந்த சபையில் நான் என்ன பேசப்போகிறேன் என்று ஒரு கணம் யோசித்தேன். ஒன்றும் புரியவில்லை.
எனக்கு ஒரு பெரிய வீக்னஸ் இருக்கு. கர்ணனுக்கு பரசுராமர் கொடுத்த சாபம் மாதிரி. கர்ணன், தான் பிராம்மணன் என்று சொல்லி வித்தை கற்றுக்கொண்ட பிறகு, அவர் உண்மையில் சத்ரியன் பிராம்மணன் அல்ல என்று தெரிந்தவுடன் அவனுக்கு “நெருக்கடியான நிலை வரும்போது நீ கற்றுக் கொண்ட வித்தை எல்லாம் மறந்து போகும்” என்று சாபம் கொடுத்து விடுவார். அதுபோல ஒரு சாபில், ஒரு மீட்டிங்க்ல மைக் முன்னாள் நின்னா எனக்கு தெரிஞ்ச தமிழ் வார்த்தைகள் கூட மறந்துடுது. யாரோ முக்கியமான நேரத்துல உனக்கு பேச முடியாது போகணும் என்று சாபம் கொடுத்துட்டாங்களோன்னு தான் எனக்கு தோணுது. இப்போது வாழ்த்தி பேச வேண்டும் என்ற நேரத்தில் எந்த மொழியிலும் பேச முடியவில்லை. பல மொழிகள் தெரியும். ஆனா எதுவும் சரியா தெரியாது. ரொம்ப குழப்பமாயிடும். இது, தெலுங்கா, கன்னடமா, தமிழா ஒன்னும் புரியாது. சரி… இங்க்லீஷ்ல அடிச்சிவிட்டுடலாம்னு சொன்னா, அதுலயும் நாம வீக் தான். (சிரிக்கிறார்). So, இங்கே பேசுறவங்களுக்கெல்லாம் சரளமா பேச வரும். ஏதாவது பேச நினைக்கும்போது, மொழி என்பது பிளஸ்ஸாக இருக்கும். ஆனா, அதுவே நமக்கு மைனஸ் மாதிரி. பேச நினைக்கிறது பேச வராது.
எனிவே, ராமகிருஷ்ணன் அவர்கள் எப்படி என்னுடைய நண்பர் ஆனார் என்று சொல்வதற்கு முன்னாடி, உடல் நிலை சரியில்லாமல் இருந்து, பின்னர் குணமடைந்து மெட்ராஸ் வந்த பிறகு நிறைய பேர் - இங்கே முத்துராமன் சாரெல்லாம் இருக்காங்க - இவங்க எல்லாம், என்னை பார்க்க வர்ரேன்னு சொன்னபோது, நான் வேண்டாம். நானே உங்களை பார்க்க வர்ரேன்னு சொன்னேன். ஏன்னா, வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து என்ன பண்றது? குணமடைந்த பிறகு, எஸ்.ராமகிருஷ்ணனை சந்திக்க நினைத்து அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்தில் ரஷ்யா, ராமேஸ்வரம் என்று சுற்றிக் கொண்டே இருந்தார். 7 நாட்களுக்கு முன்பு என்னை தொடர்பு கொண்டு, இப்போது சென்னையில்தான் இருக்கிறேன் என்றார். உடனே, நான் அவர் வீட்டுக்கு போய், அவரை பிக்கப் செய்துகொண்டு, சென்னை முழுக்க நாங்கள் இருவரும் காரில் பயணம் செய்தபடி பேசிச் சென்றோம். அரசியல், சினிமா, கலை, புக்ஸ் என அனைத்தை பற்றியும் பேசிக்கொண்டே செல்வோம். அதற்க்கு பிறகு ராகவேந்திரா மண்டபம் போய் சாப்பிட்டுவிட்டு தான் வீட்டுக்கு போவோம். இது தான் வழக்கம்.
அப்போ தான் சொன்னார், அவருக்கு இப்படி ஒரு விருது கிடைத்திருப்பதாக. “இவ்ளோ பெரிய விருது கிடைச்சிருக்கே… அது யாருக்குமே தெரியலியே…? அது எப்படி தெரியாம போச்சு…விழாலாம் எதுவும் பண்ணலியா?”ன்னு கேட்டேன். “அதெல்லாம் இல்லே… நீங்க வந்தா செய்யலாம்” அப்படின்னு சொன்னார். “நான் வர்ரேன்”ன்னு சொன்னே. அப்படித் தான் இந்த விழா முடிவு செய்யப்பட்டது. (பலத்த கைதட்டல்!)
இந்த விழாவுல கலந்துக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம். ராமகிருஷ்ணன் சாரை 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2002ம் ஆண்டு நடந்த ‘பாபா’ படம் தொடர்பாக அவரை சந்தித்து பேசினேன். ‘பாபா’ படத்துக்கு நான்தான் கதாசிரியர். அந்த படத்துக்காக சொர்க்கத்தை நான் விசுவலைஸ் பண்ண வேண்டியிருந்தது. நரகத்தை சுலபமா விசுவலைஸ் பண்ணலாம். சொர்கத்தை அப்படி பண்ண முடியாது. So, அவரிடம் நான் பேசியபோது நான் காணாத, கேக்காத, அறியாத பல விஷயங்களை கூறினார். அந்த படம் முதல் ‘சந்திரமுகி’ படம் வரை மறக்க முடியாத காலம். துன்பம் வரும்போதுதான் மனிதனுக்கு யோசிக்கும் சக்தியே வருகிறது.
அந்த படத்தில் இருந்த சில காட்சிகளை புத்தகமாக வெளியிட முடிவு செய்து ராமகிருஷ்ணனிடம் பேசினேன். எனக்கு தமிழ் எழுத தெரியாது, ஆங்கிலம் அவ்வளவாக வராது, தெலுங்கு மறந்துவிட்டது. எனவே, இவரிடம் எழுதி கேட்டேன். அவரும் ஒப்புக் கொண்டார். 10 முதல் 12 நாட்களுக்கு பிறகு என்னிடம் புத்தகத்தை கொண்டு வந்தார். அதை படித்து பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இருந்தாலும், அந்த புத்தகத்தில் உண்மைகள் இருந்ததால், அது பலரை நோகடிக்கும் என்று வெளியிடவில்லை.
இப்படி குடும்பத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் படிப்பு, எழுத்து என்று சென்று கொண்டே இருக்கிறார். ஒரு வயது குழந்தைபோல் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்கிறார். ஏராளமான புத்தங்களை படித்திருக்கிறார். அனுபவங்களுக்காக பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.
சமீபத்தில் நான் படித்த புத்தகத்தில் இருந்த கதை. ஒரு தனி விமானத்தில் விஞ்ஞானிகள் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது ஒருவர் மட்டும் பைபிளை படித்துக் கொண்டு இருந்தார். அவரைப் பார்த்து மற்றொரு விஞ்ஞானி, இப்போது உள்ள அறிவியல் உலகத்தில் கடவுள், பைபிள் என்று படித்துக் கொண்டு இருக்கிறீரே? என்று கேட்டு விட்டு, தனது முகவரியை கொடுத்து, இனியாவது கடவுளை தூக்கிப் போட்டு விட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
விமானம் தரை இறங்கியவுடன் மீண்டும் அவரை சந்தித்த விஞ்ஞானி உங்கள் முகவரியை கொடுங்கள் நான் முடிந்தால் வந்து பார்க்கிறேன் என்றார். அவர் தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார் அதில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று இருந்தது. உடனே அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அவரை தனியாக வீட்டில் சந்திக்க நாளையும் பெற்றுக் கொண்டு சென்றார்.
குறிப்பிட்ட நாளில் அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் வீட்டுக்கு சென்றார். அங்கு ஏராளமான கண்டுபிடிப்புகள் இருந்தன. அவற்றை பார்த்து நீங்கள்தானே இதை செய்தது என்று கேட்டார். அதற்கு அவர் இல்லை நான் ஒரு நாள் வெளியில் சென்றுவிட்டு, மீண்டும் வந்து வீட்டு கததை திறந்தபோது இதெல்லாம் இருந்தது என்றார்.
என்ன சார் ஜோக் பண்றீங்க? நான் சீரியஸா கேட்க்கிறேன். எப்படி வந்துச்சு இதெல்லாம் என்று அவர் திரும்ப கேட்க்க, “பிரபஞ்சம், பால்வெளி உள்ளிட்ட ஆண்ட சாராசரங்கே தானாக உருவாகும்போது இந்த சாதாரண அறிவியில் கண்டுபிடிப்புக்கள் உருவாகாதா? என்று எடிசன் திரும்ப கேட்க்கிறார்…. படைப்பு இருந்தால் கண்டிப்பாக படைப்பாளியும் இருப்பார் என்று எடிசன் இதன் மூலம் புரியவைத்தார். So, ஆண்டவன் இருக்கிறான். If there is creation, there should be a creator. இது கதையாக நினைக்க வேண்டாம் விஞ்ஞானி கூறியதை சிந்தித்து பார்க்க வேண்டும். படைப்பு என்று ஒன்று இருந்தால் அதை படைத்த படைப்பாளியும் கண்டிப்பாக இருப்பார். எனவே கடவுள் இருப்பது உண்மை. கடவுள் இருக்கிறார் என்பதை கூற இந்த கதை ஓட்டம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இதுபோல் தான் சொல்ல வரும் கருத்தை சரியான கதை ஓடுகளத்தில் கூறுபவர் ராமகிருஷ்ணன். கவிஞர் கண்ணதாசன் நாத்திகராக இருந்தபோது, கம்பராமாயணத்தை எரிக்க முயன்றார். அப்போது எரிக்க போகும் முன்பு இதை படித்து விட்டு எரிக்கலாம் என்று முடிவு செய்து கம்பராமாயணத்தை படித்தார். பின்னர் அவர் அந்த புத்தகத்தை வைக்கவே இல்லை. முழுவதுமாக படித்து முடித்துவிட்டு அதன் முன்பு விழுந்து வணங்கினார். நாத்திகராக இருந்த கண்ணதாசன் ஆத்திகராக மாறினார்.
எழுத்துக்கு, வார்த்தைக்கு அவ்வளவு சக்தி உள்ளது. படைப்புகளுக்கே இவ்வளவு சக்தி என்றால், படைப்பாளிகளுக்கு எவ்வளவு சக்தி இருக்கும். நாம் படைப்பாளிகளை நன்றாக வைத்திருந்தால், அவர்கள் பல நல்ல படைப்புகளை தந்து கொண்டே இருப்பார்கள். ராமகிருஷ்ணன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.






படம் ரிலீசாகாத நிலையிலும் இந்தியா டுடேவின் “சக்திமிக்க 50 பேர்” பட்டியலில் இடம் பிடித்து சூப்பர் ஸ்டார் ரஜினி சாதனை!
10 April 2012

அகில இந்திய டாப் வசூல் பட்டியலில் தொடர்ந்து ‘எந்திரன்’ ராஜ்ஜியம்! ஏழு மிகப் பெரிய நடிகர்கள் பட்டியலிலும் ரஜினி இடம்பிடித்தார்!!
24 June 2012

|