நடிகர், நடிகைகளின் கண்ணீர் அஞ்சலியுடன் கமலா அம்மாளின் உடல் தகனம் நடந்தது. இறுதி ஊர்வலத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மனைவி கமலா அம்மாள் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் மரணம் அடைந்தார். அவருடைய மகள்கள் சாந்தி, தேன்மொழி ஆகிய இருவரும் வெளிநாடுகளில் இருந்ததால் கடந்த 2 நாட்களாக கமலா அம்மாளின் உடல் சிவாஜி கணேசனின் வீட்டிலேயே வைக்கப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை 2 மணிக்கு சாந்தி, தேன்மொழி ஆகிய இருவரும் விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.
நேற்று காலை 7 மணிக்கு கமலா அம்மாளின் இறுதி சடங்குகள் தொடங்கின. அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். ரஜினிகாந்தை பார்த்ததும் ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி உள்பட சிவாஜி குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதார்கள். அவர்களுக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது அவரும் கண்கலங்கினார்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன், பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன், சுலோச்சனா சம்பத், வி.என்.சுதாகரன் ஆகியோரும் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள்.
இறுதி சடங்கில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்கள் வருமாறு:-
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், துணைத்தலைவர் விஜயகுமார், நடிகர்கள் சத்யராஜ், கார்த்திக், நெப்போலியன், அர்ஜுன், கவுண்டமணி, நிழல்கள் ரவி, ராஜேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், மனோ, அழகு, சின்னி ஜெயந்த், நடிகைகள் சரோஜா தேவி, சுஜாதா, மும்தாஜ், டைரக்டர்கள் டி.பி.கஜேந்திரன், சீமான், சுசிகணேசன், பட அதிபர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஜானகிராமன், ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியார் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
காலை 8 மணிக்கு கமலா அம்மாளின் உடல் வீட்டுக்குள் இருந்து எடுத்து வரப்பட்டு ஒரு வேனில் ஏற்றப்பட்டது. அப்போது சிவாஜி குடும்பத்தினர் அனைவரும் கதறி அழுதார்கள்.
கமலா அம்மாளின் உடல் அங்கிருந்து பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். காலை 9.15 மணிக்கு கமலா அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. தகனம் முடியும் வரை ரஜினிகாந்த் அங்கேயே இருந்தார். அதன்பிறகு, ராம்குமார், பிரபு இருவருக்கும் ஆறுதல் சொல் லிவிட்டு காரில் புறப்பட்டார்.
கமலா அம்மாளின் இறுதி ஊர்வலத்தையட்டி சிவாஜி வீட்டிலும், பெசன்ட்நகர் மயானத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
|