இது ரஜினி படமா... இரஞ்சித் படமா?
ரஜினிக்கு இது வேறு வகைக் களம். இரஞ்சித்துக்கு இது வேற லெவல் தளம்.
மலேசிய கேங்ஸ்டர் கபாலியாக ரஜினி. 25 ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு அதே பவருடன் வெளியே வருகிறார். சிறைக்குச் செல்வதற்கும் தனது குடும்பம் துண்டாடப்பட்டதற்கும் காரணமானவர்களைத் தேட ஆரம்பிக்கிறார். சீன தாதா வின்ஸ்டன் சாவோவும் கிஷோரும் நடத்தும் `43' என்கிற கேங், ரஜினி இல்லாத நேரத்தில் ஒட்டுமொத்த மலேசியாவையும் ஆட்டிப்படைக்கிறது. அதை முறியடிக்கக் கிளம்புகிற ரஜினிக்கு, இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது மனைவி உயிருடன் இருப்பது தெரியவருகிறது. எதிரி கேங்கின் தாக்குதலைச் சமாளித்து, மனைவியை மகளுடன் சேர்ந்து தேடிக் கண்டுபிடித்து, அதிரடித்து முடிக்கிற நெகிழ்ச்சிகளின் தொகுப்புதான் கபாலி சொல்லும் மகிழ்ச்சியின் கதை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவந்தது `கபாலி' மட்டுமா... ரஜினி என்கிற நடிகனும்தான். மனைவியைப் பிரிந்த ஏக்கமும் மகளைக் கண்டடைந்த ஆனந்தமும் துரோகிகள் மீதான பழியுணர்ச்சியும் நண்பனைக் கொன்று விட்டு அவன் மகனிடம் மன்னிப்புக் கேட்கிற பாங்கும்... என சால்ட் அண்ட் பெப்பர் முகத்தில் வெடி வெடிக்கிறது அபார ஆற்றல். புருவங்கள் துடிக்க, கண்கள் கசிய, உதடுகள் உலர நொடிக்கு நூறு உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறார். தன் மகள் இவர்தான் எனத் தெரியும்போது காட்டும் பாசப் பரவசம், தன் சட்டையை உலுக்கிக் கேள்வி கேட்கும் ரித்விகா முன்பு உறைந்து நிற்கும் கணம், ‘எனக்கு ஒரே யோசனையா இருக்கு அமீர்’ என நெற்றி சுருக்கும் நிமிடம், ராதிகா ஆப்தேவைச் சந்திப்பதற்கு முன்னர் எதிர்பார்ப்பு நிறைந்த நெகிழ்ச்சியுடனான காத்திருப்பு, மனைவியைப் பார்த்ததும் அழக் கூடாது என்பதற்காகக் காற்றை உள்ளிழுத்துக்கொள்ளும் காட்சி என ரஜினி ராஜ்ஜியம்.
மாஸுக்கும் க்ளாஸுக்கும் நடுவில் மாயநதியை ஓடவிட்டிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். ரஜினியை அவர் வயது ஆளாகவே படம் முழுக்கக் காட்டியதில் தொடங்குகிறது வித்தியாசம். பல கோடி மக்கள் கொண்டாட்ட மனநிலையில்தான் தியேட்டருக்கு வருவார்கள் எனத் தெரிந்தும், `இது என் படம்' என எடுத்திருக்கும் தைரியம்... ஆச்சர்யம். கேங்ஸ்டர் படங்களின் வழக்கமான கன் ஃபைட் ரூட் பிடிக்காமல், ஆழமான அன்பையும் பாசப் பரிதவிப்பையும் ஆனந்த நெகிழ்ச்சியையும் நுணுக்கமாகப் பதிவுசெய்திருக்கிறது இரஞ்சித்தின் திரைக்கதை.
கேங்ஸ்டர் படங்களில் வரும் நம்பிக்கையான நண்பனாக ஜான் விஜய், உரிமை மறுக்கப்பட்ட தமிழர்களுக்காக உரத்தக் குரல் எழுப்பும் நாசர், 25 வருடங்களுக்குப் பிறகு ரஜினியைப் பார்த்ததும் வெடித்து அழும் ராதிகா ஆப்தே, எமோஷன் ஆக்ஷன் என அதிரடிப் பெண்ணாக தன்ஷிகா, ‘தமிழ்நேசன் பையன் நான்தான் தலைவன் ஆகணும்’ எனப் பொருமும் வினோத், வைப்ரேட் மோட் செல்போனாக எப்போதும் விறைப்பும் துடிப்பும் காட்டும் தினேஷ், போதைக்கு அடிமையாகி அவ்வப்போது சின்னக் குழந்தையாகச் சிணுங்கும் ரித்விகா என, எல்லோருமே பக்கா சொக்கா. ஆனால், `மெட்ராஸ்' படத்தில் நடித்த எல்லோரையும் இதில் நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது. வில்லன்களாக வரும் வின்ஸ்டன் சாவோவும் கிஷோரும் ரஜினிக்குப் பக்கத்தில், பிரமாண்ட சிலைக்கு முன்னால் சின்னப் பொம்மைகளைப்போல்தான் காட்சி தருகிறார்கள். இன்னும் பெட்டராக வில்லன்களை வார்த்திருக்கலாமோ?
சந்தோஷ் நாராயணனின் இசையில், `நெருப்புடா!’ தீம் மியூஸிக் கேட்டாலே தியேட்டரில் தீப்பற்றிக்கொள்கிறது.
‘உன்னோட கருணை, சாவைவிடக் கொடூரமானது’, ‘கனவுல வர்ற பிரச்னை எல்லாம் கண்ணைத் திறந்தா முடிஞ்சிடுற மாதிரி வாழ்க்கை இருந்தா எப்படி இருக்கும்?’, `காந்தி சட்டையைக் கழட்டினதுக்கும் அம்பேத்கர் கோட் மாட்டினதுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு’, `நான் கோட் போடுறதும் கால் மேல கால் போடுறதும் உனக்கு எரியுதுன்னா, போடுவேண்டா...’ என அனல்கக்கும் வசனங்கள் அழுத்தமாகப் பதிகின்றன.
மலேசியாவில் புறக்கணிக்கப்படும் தமிழர்களுக்காகப் போராடும் நாசர், ஏன் ஒரு மக்கள் இயக்கத் தலைவராக இல்லாமல் கேங் லீடராக இருக்கிறார்? நாசரும் ரஜினியும் போதைப்பொருளையும் பாலியல் தொழிலையும் எதிர்க்கிறார்கள். அப்படியானால், இருவர் தலைமையிலும் இயங்கும் கேங் என்னதான் செய்கிறது? எப்படி ரஜினிக்கு இவ்வளவு பணம்? பல காலகட்டங்களுக்கு ராதிகா ஆப்தே கர்ப்பிணியாகவே வருகிறாரே, ரஜினி கேங் லீடராக ஆவதற்கு எவ்வளவு காலம் ஆனது? தமிழகத் தொழிலாளர்களுக்காகப் போராடும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் அழுத்தம் இல்லை. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், மலேசியத் தமிழர்களில் இருக்கும் சாதிய மனோபாவத்தைக் காட்டும் காட்சிகள் எதுவுமே இல்லையே? அதனாலேயே ரஜினி மட்டுமே அதைப் பற்றி வசனங்களாகப் பேசுவது போதுமான அளவுக்குப் பலம் சேர்க்கவில்லை. அழுத்தமான காட்சிகளாக்கி இருந்தால், அத்தனையும் மனதில் பதிந்திருக்கும். அது ஏனோ... டோட்டலி மிஸ்ஸிங்!
அதிரடி ஆக்ஷன், அட்டகாச ஸ்டைல், பொளேர் பன்ச், ரகளை காமெடி என ரஜினி படத்தைக் கொண்டாட வந்த ரசிகர்களுக்கு, இது கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், நேற்றைய `பாட்ஷா' இன்று `கபாலி’யாக மாறுவது ரஜினியிடம் வரவேற்கத்தக்க மாற்றமே.
மகிழ்ச்சி!
- விகடன் விமர்சனக் குழு
|