"கபாலி" படம் அறிவிப்பு வெளியானதில் இருந்தே வழக்கம் போலத் தலைவரை திட்டி பலர் எழுதி வருகிறார்கள். தற்போது அவர்களின் மனப் பிறழ்வு உச்சத்தை அடைந்து இருக்கிறது.
ரஜினி மக்களுக்கு என்ன செய்தார்?
ரஜினி எதுக்குடா செய்யணும்? அவர் என்ன அரசியல்வாதியா?! அரசாங்கமா? அவருக்கா வாக்களித்தீர்கள்? அவரையா வாக்களித்துத் தேர்ந்தெடுத்தீர்கள்?!
உங்கள் வார்டு கவுன்சலரையோ, MLA மற்றும் MP யை கேட்க தெம்பில்லாததால் எது கூறினாலும் அமைதியாக இருக்கும் ரஜினியை விமர்சிக்கிறீர்கள்.
தொடை நடுங்கிகளே! உங்கள் வீரம் எல்லாம் இணையத்தில் ரஜினியை திட்டுவதில் மட்டுமே உள்ளது. ஒரே ஒரு முறையாவது ரஜினியைப் பார்த்து கேட்ட கேள்விகளை நீங்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசியல்வாதியையோ, பொறுப்பில் உள்ள அதிகாரிகளையோ கேட்டு இருக்கிறீர்களா?!
அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்டால் செவுள்ளயே அடித்துத் துரத்தப்படுவீர்கள் என்று தெரியும். எனவே, உங்கள் வீரத்தை!! எல்லாம் இணையத்தில் உட்கார்ந்து ரஜினியை எதிர்த்து பொங்கிட்டு இருக்கீங்க.
அட! அதையெல்லாம் விடுங்கள்.. பேருந்தில் செல்லும் போது மீதி சில்லறையைத் தைரியமா நடத்துநரிடம் கேட்டு இருக்கிறீர்களா? இதையே செய்ய முடியாத தொடை நடுங்கிகள் இணையத்தில் உட்கார்ந்து கொண்டு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டு இருக்கானுங்க.
முதல்ல அவர் எதுக்குடா மக்களுக்கு உதவி செய்யணும்?! அவர் தொழில் நடிப்பது, அதைச் செய்து கொண்டு இருக்கிறார்.
செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பில் இருக்கும் அரசாங்கத்தைக் கேள்! தனிமனிதனை நெருக்காதே!
சென்னை வெள்ளத்தில் என்ன செய்தார்?
ரஜினி சென்னை வெள்ளம் சமயத்தில் செய்த உதவிகள் உங்களுக்குத் தெரியவில்லை அல்லது தெரியாதது போல நடிக்கிறீர்கள். தூங்குறவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிப்பவனை..!
போய் YouTube ல பாரு சென்னை வெள்ளம் சமயத்தில் ரஜினியும் அவரது ரசிகர்களும் என்ன செய்து இருக்கிறார்கள் என்று தெரியும்.
உன்னை மாதிரி 1000 ரூபாய் கொடுத்து விட்டு ஊரெல்லாம் டமாரம் அடிக்கிற நபர் ரஜினி கிடையாது.
ரஜினி சம்பாதிப்பதை மக்களுக்குக் கொடுக்கணும்
நீ வேலைக்குச் சென்று சம்பாதிப்பது போல அவர் நடித்துச் சம்பாதிக்கிறார். அவ்வளோ தான். இதுல உனக்கு என்ன பிரச்சனை? அவர் எதுக்குடா மக்களுக்குக் கொடுக்கணும்?
உனக்கு ரஜினி போன்ற நடிகர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்களே! என்ற வயித்தெரிச்சல், நம்மால் இது போலச் சம்பாதிக்க முடியவில்லையே என்ற இயலாமை.
ரஜினிக்கு பாபா, லிங்காவில் நட்டம் ஆன போது அவர் கோடிக்கணக்கில் தனது பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.. அப்போ நீயா வந்து பணத்தைக் கொடுத்தாய்?! எந்த உரிமையில் ரஜினி உனக்குச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்.
எத்தனையோ நடிகர்கள் ஒரு காலத்தில் புகழ் பெற்றவர்களாக இருந்து, தற்போது பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கிறார்கள். செய்திகளில் நீ படித்தது இல்லையா?!
அவர்களுக்கு எல்லாம் நீ போய் உதவ வேண்டியது தானே! நடிகன் / நடிகை சம்பாதிக்கும் போது எரிச்சல் அடையும் நீ.. அவர்கள் சிரமப்படும்போது உதவி செய்து ஆறுதல் அளித்து இருக்கிறாயா?
ரஜினி ஒன்றும் நேற்று வந்து இன்னைக்கு அதிர்ஷ்டத்தில் சம்பாதித்தது இல்லை. 40+ வருட கடுமையான உழைப்பு.
நீ சம்பாதிக்கவில்லையா?! ரஜினி எதுக்குடா உனக்குச் செய்யணும்? இது போலக் கேட்க வெட்கமா இல்லை... உன் குடும்பத்தை உன் உழைப்பால் முன்னேற்று அடுத்தவனிடம் பிச்சை கேட்காதே!
உனக்கு ஒரு லட்சம் சம்பாதித்தாலும் பணப் பிரச்சனை இருப்பது போல.. அவர்கள் சம்பாதிப்பதற்கு ஏற்ப அவர்களுக்கும் பிரச்சனை இருக்கும். உனக்கு ஆயிரம், லட்சத்தில் பிரச்சனை என்றால், அவர்களுக்குக் கோடிகளில் பிரச்சனை இருக்கும்.
இவ்வளவு பேசுற நீ.. சிரமப்படும் மக்களுக்கு என்ன செய்தாய்? உன் அளவில் என்ன செய்தாய்? அடுத்தவனை விமர்சிப்பதற்கு முன் நாம என்ன செய்தோம் என்று யோசிக்கணும்.
சிரம்பப்படுகிறவனுக்கு நீ உதவு.. முடியலையா.. அடுத்தவனைக் குறை சொல்லாம நம்மால் பணம் தவிர வேறு என்ன வழியில் உதவ முடியும் என்று யோசி! அதைச் செய். அடுத்தவனைக் கை காட்டி உன் தவறுகளில் இருந்து தப்பிக்க நினைக்காதே!
பிடிக்கலையா பார்க்காதே!
ரஜினியை உனக்குப் பிடிக்கலையா படத்தைப் பார்க்காதே! உன்னை யாராவது வந்து "கபாலி" படம் பார்த்தே ஆகணும் என்று கட்டாயப்படுத்தினார்களா?
விருப்பம் இருப்பவன் படம் பார்க்கிறான். உனக்கு ஏன்டா எரியுது? உனக்குப் பிடிக்கலையா பார்க்காதே! அதுக்கு ஏன் இழவு வீடு மாதிரி FB, WhatsApp ல தினமும் ஒப்பாரி வைத்துட்டு இருக்கே!
டிக்கெட் விலை அதிகம்னு நினைக்கிறியா... படத்தைப் பார்க்காதே! உன்னை எவன்டா வந்து பாரு பாருன்னு இப்ப கெஞ்சிட்டு இருக்காங்க.
நீ எப்படி இருந்தாலும் திருட்டு DVD, இணையத்துல திருட்டுத்தனமா பார்க்கத்தான் போறே.. என்னமோ பணம் கொடுத்து பார்ப்பவன் மாதிரியே பில்டப் கொடுத்துட்டு இருக்கே!
அப்படியே பணம் கொடுத்து பார்க்கப் போறியா.. அதிகம் என்று நினைக்கிறியா.. படத்தைப் புறக்கணி. இங்கே எதுவுமே கட்டாயமில்லையே!
படம் நல்லா இருந்தால் மக்கள் வெற்றி பெற வைக்கப் போறாங்க.. இல்லையா.. பாபா, லிங்கா போலப் புறக்கணிக்கப் போறாங்க. இதுல நீ ஏன் சம்பந்தமே இல்லாம மூக்கை நுழைக்கிற.
மக்களுக்குத் தெரியும் எது சரி எது தவறு என்று!
வாக்களிக்கவே வராதவன் எல்லாம் ரஜினி உதவி செய்யலன்னு பேச வந்துட்டானுக! உன்னால் எளிமையாக செய்யக்கூடிய இந்த சின்ன விசயத்தையே செய்யல.. நீயெல்லாம் சமூக அக்கறை பற்றிப் பேசற! மக்களுக்கு அறிவுரை சொல்ற! காலக் கொடுமைடா!
உனக்குத் தான் ரஜினி பிடிக்கலையே.. நீ மானம் ரோசம் உள்ளவனா இருந்தால், உன் மனசாட்சிக்கு உண்மையா இருப்பவனாக இருந்தால், "கபாலி" படம் பார்க்காதே. இப்ப இல்ல எப்பவுமே! முடியுமா?! திருட்டுத்தனமாவாவது பார்க்க நினைப்பே.. அது தான்டா ரஜினி(காந்தம்)!
நாள் முழுவதும் ரஜினியை திட்டி விட்டு "கபாலி"யை பார்த்தாய் என்றால், நீ கேவலமான பிறவிடா!
நீ கபாலி படத்தைப் பார்த்தாய் என்றால் ரஜினியை உன்னால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை என்ற தோல்வியை ஒத்துக்கொள். திருட்டுத்தனமாகப் பார்க்கும் போதும் உன் நினைவுக்கு இது வரணும், வரும்.
ஒன்று தெரிந்துக்குங்க நீங்க எல்லாம் இது போலப் புலம்புவதும், திட்டுவதும் ஒரு வகையில் படத்துக்குத் தான் விளம்பரம். அந்த வகையில் உங்களுக்கு நன்றி. மற்றபடி உங்களால் எதுவும் செய்ய முடியாது.. புலம்புவதைத் தவிர.
ரஜினி படம் வரும் போது மட்டும் மக்கள் நினைவு வரும்
ரஜினி படம் வந்தால் போதும் நாட்டுல அவனவனுக்கு அப்போது தான் சமூக அக்கறை எல்லாம் அப்படியே பீறிட்டுப் பொங்கும். பண்பாடு கலாச்சாரம் எல்லாம் நினைவுக்கு வந்து அலற வைக்கும்.
இவ்வளவு நாளா இவனுக எல்லாம் எங்க தான் இருந்தாங்க என்றே தெரியாது.. ஆனால், சரியா படம் வெளியாகிற சமயத்தில் ரஜினி அதைச் செய்யல இதைச் செய்யல என்று போராட்டம் நடத்த கிளம்பிடுவார்கள்.
அவனவனுக்குத் தன்னோட பேர் செய்தித்தாள்ல வரணும் என்று ஆசை.. அதுக்கு வேற எவனைத் திட்டினாலும் ஒரு பய மதிக்கமாட்டான், கண்டுக்க மாட்டான்.
போடுறா ஒரு எதிர்ப்பை ரஜினியை எதிர்த்து.. அவ்வளோ தான் விசயம். Letter Pad அமைப்புகள் எல்லாம் தங்களை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்த இது ஒரு வாய்ப்பு.
இதுல 99.9 % இவர்களை எல்லாம் இது வரை யாருன்னே பலருக்குத் தெரியாது ஆனால், அந்த அமைப்பு இந்த அமைப்பு, மக்கள் முன்னேற்றம் அது இதுன்னு கிளம்பிடுவானுக.
இவங்க மக்களுக்காக என்ன செய்தார்கள்? என்று கேட்டால் ஒரு பய வாயத் திறக்கமாட்டான் ஆனால், இவனுக வீட்டு குழாய்ல தண்ணீர் வரவில்லை என்றாலும் அதுக்கு ரஜினி தான் காரணம்.
கோக் பெப்சி காரன் லிட்டர் லிட்டரா தண்ணீரை கொள்ளை அடிக்கிறான், லிட்டர் தண்ணீரை பைசால வாங்கி லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கிறான், ஆற்று மணலை திருடுகிறார்கள், கிரானைட் வளம் அழிக்கப்பட்டுக் கொள்ளை அடிக்கப்படுகிறது.
விளை நிலங்கள் அழிக்கப்படுகின்றன, நீர் நிலைகள் அரசியல்வாதிகளால் பிளாட் போட்டு விற்கப்படுகின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை, தினம் தினம் கொலைகள், மரங்கள் வெட்டப்பட்டு மாநிலமே பாய்லர் போல இருக்கிறது.
அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது. எதற்கும் லஞ்சம்!
இதையெல்லாம் இந்த அமைப்புகள் என்றாவது கேள்வி கேட்டதுண்டா? இணையப் புலிகள் இதற்காகப் போராடியதுண்டா? நாம் சரி செய்ய முயற்சி எடுப்போம் என்று முயன்று இருக்கிறீர்களா?!
ஏன்டா டேய்! இதையெல்லாம் செய்ய, கேள்வி கேட்க துப்பில்லை ஆனால், ரஜினி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறி சொம்பை தூக்கிட்டு வந்துடுறீங்க! உங்களுக்கு எல்லாம் கொஞ்சமாவது சூடு சொரணை வெட்கம் மானம் இருக்கிறதா?!
இதெல்லாம் இருந்தால் தான் மேற் கூறிய விஷயங்களுக்காகப் போராடி குரல் கொடுத்து இருப்பீர்களே!
ரஜினியைப் பற்றிப் பேசும் போது மட்டும் வாய் காது வரைக்கும் வருது.
இணையத்தைத் திறந்தால் சமூக அக்கறை, புரட்சி, தமிழ் எல்லாம் பீறிட்டுப் பொங்கும். இணையத்தை மூடினால் அனைத்தும் மறந்து விடும். இவ்வளவு தான் இணையப் போராளிகளின் போராட்டம்.
முதல்ல எல்லோரும் நிஜ உலகத்துக்கு வாங்கடா!
தலைவர் ரசிகர்களே!
இந்தக் கோமாளிகளால் தலைவரை ஒன்றுமே செய்ய முடியாது. எவ்வளவு சிரமம் வந்தாலும் தலைவர் உயர உயர போய்க்கொண்டே இருக்கிறார். இது என்னுடைய கற்பனையல்ல நீங்கள் அனைவரும் கண் முன் காண்பது.
தலைவர் ரசிகர்களையும் சொல்லணும்.. தேடிப்போய்த் தலைவலியை வாங்கிட்டு வருவாங்க..! போகாதீங்கய்யா குப்பைகளைப் பார்க்காதீங்கன்னா கேட்க மாட்டாங்க.. இவன் அப்படிச் சொல்றான் அவன் இப்படிச் சொல்றான்னு புலம்பல்.
இவர்கள் அனைவரும் அட்டை கத்திகள்! வாய்ச் சொல் வீரர்கள்.
எதுக்குத் தேவையில்லாமல் இவர்களை நினைத்து கவலைப்படுகிறீர்கள்? இவர்களால் தலைவரை ஒன்றுமே செய்ய முடியாது. இவர்கள் இது போலப் பேச பேச அவர் வளர்ந்து கொண்டே தான் போகிறார்.
இதை நான் எழுத காரணமே அங்கே இவன் அப்படிச் சொன்னான் அவன் இப்படிப் பேசினான் என்று எதையாவது பகிர்ந்து வருகிறீர்கள். இவர்களால் திட்டுவதைத் தவிர ஒன்றுமே செய்ய முடியாது என்பது தான் நிதர்சனம்.
மகிழ்ச்சி உங்களோடு இருக்க ஏன் துன்பத்தைத் தேடி அலைகிறீர்கள்!
எப்போது அடுத்தவரை பற்றி ஒருவன் தொடர்ந்து தவறான கருத்துகளுடன் விமர்சித்துப் பேசுகிறானோ அப்போதே தோல்வி அடைந்து விட்டான். அவனை நினைத்து பயந்து இருக்கிறான் / வளர்ச்சியைப் பார்த்துப் பொறாமை படுகிறான் என்பது தான் அர்த்தம்.
அடுத்தவனின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாதவர்களே இதே வேலையாக தொடர்ச்சியாகப் இப்படிப் புலம்பிக் கொண்டும் திட்டிக் கொண்டும் கிண்டலடித்துக்கொண்டும் இருப்பார்கள்.
லிங்கா சமயத்தில் தலைவரை என்னென்னவோ செய்ய முயற்சித்தார்கள்.. தற்போது என்ன நடக்கிறது?! லிங்கா சமயத்தை விடக் கபாலியில் 1000 மடங்கு உயர்ந்து நிற்கிறார்.
தமிழனுக்காக இந்த அட்டை கத்திகள் சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப் போட்டதில்லை ஆனால், தமிழர் புகழை உலகெங்கும் கொண்டு சென்று இருக்கிறார் தலைவர். ஜப்பானில் தலைவரால் தமிழ் கற்றுக் கொண்டதாக ஒருவர் பேட்டி கொடுக்கிறார் (நன்றி NDTV).
உலக விருது விழாவில் கபாலி டீசருக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து இத்தாலி நாட்டில் முதன் முதலாகத் தமிழ் படத்தை வெளியிட தாமாக ஒரு தயாரிப்பாளர் / இயக்குநர் முயற்சிக்கிறார் (நன்றி விகடன்). தற்போது இத்தாலியில் முதல் தமிழ் படமாகக் கபாலி வெளியாகிறது.
பிரான்ஸ் பழம் பெருமை வாய்ந்த "REX" திரையரங்கு முதன்மை திரையரங்கில் முதல் இந்திய படம் வெளியாகிறது அதுவும் கபாலி என்ற தமிழ்ப் படமாக. இதற்கு முன்பு பல இந்தியப் படங்கள் வெளியாகி உள்ளது ஆனால், இப்பெரிய திரையரங்கில் அல்ல.
இதுவரை தமிழ் படமே வெளியாகாத நாடுகளில் கூடக் கபாலி வெளியாகிறது. உலகின் பல நாடுகளுக்குத் தமிழ் திரைப்படங்களை அறிமுகம் செய்து வைத்து இருக்கிறது தலைவர் படங்கள். தமிழ்ப் படங்களின் வியாபார எல்லையை விரிவாக்கியிருக்கிறது.
இவை எதுவுமே என்னுடைய கற்பனை செய்தியோ போலியாகத் தலைவரை உயர்த்தக் கூறிய வார்த்தைகளோ அல்ல. அனைத்துமே ஒன்று விடாமல் செய்திகளில் வந்தவையே!
"தமிழன் தமிழ்" என்று போலியாக முழங்கி மக்களை ஏமாற்றும் இக்கோமாளிகளை விட நம் தலைவர் தமிழுக்காக, தமிழின் பெருமைக்காக, வளர்ச்சிக்காகத் தன் துறையில் எவ்வளவோ செய்து விட்டார், செய்து கொண்டு இருக்கிறார், செய்வார்.
இவர்கள் இன்னும் காலாகாலத்துக்கும் "தமிழ்டா தமிழன்டா" என்று வாயிலே வடை சுட்டுட்டு, அரசியல்வாதிகளைத் தைரியமாகக் கேள்வி கேட்க பயப்படும் ஒன்றுக்கும் உதவாத உதவாக்கரை தண்டமாகத் தான் இருக்கப் போகிறார்கள்.
தலைவரின் கால் தூசுக்கு கூட இவர்கள் பெறமாட்டார்கள் நண்பர்களே! இவர்களுக்காக நீங்கள் மன வருத்தம் அடைவது 100% அர்த்தமற்றது, முட்டாள்த்தனமானது.
போகிற போக்கைப் பார்த்தால் தலைவர் எதிர்ப்பு முத்திப் போய் இவனுக "காதல்" பட க்ளைமாக்ஸ் பரத் மாதிரி தமிழன்டா, சமூக அக்கறைடா, பண்பாடுடா, ஏழைடா, காசே இல்லடா, பிச்சை போடுங்கடா, ரஜினி பணம் கொடுக்கனும்டான்னு தலையில தட்டிட்டு திரிஞ்சுட்டு இருப்பானுக என்று நினைக்கிறேன்.
இனி யாராவது எதையாவது வந்து உளறினால், இந்தக் கட்டுரையின் சுட்டியை (Link) கொடுத்து விட்டு வேறு எதுவும் பேசாமல் நகர்ந்து விடுங்கள். வாதத்துக்குப் பதில் உண்டு, விதண்டாவாதத்துக்கல்ல.
உளறிக்கொண்டு இருக்கக் கோமாளிகள் உள்ளனர். நாம் கொண்டாட "கபாலி" உள்ளது.
-கிரி
|