 ஆச்சி மனோரமா பற்றி சூப்பர் ஸ்டார்
``நான் திரைப்பட கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நடிகர் சகஜமாக, திறமையாக எப்படி நடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்க, சில பெரிய நடிகர்கள் நடித்த படங்களை எங்களுக்கு திரையிட்டு காண்பித்தார்கள். ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், மும்பையில் பால்ராஜ் சஹானி, திலீப்குமார், இங்கே தமிழ்நாட்டில் சிவாஜி, எஸ்.வி.ரங்காராவ், எம்.ஆர்.ராதா, பாலையா ஆகியோர் நடித்த படங்களை எங்களுக்கு திரையிட்டு காண்பித்து வகுப்பு எடுத்தார்கள்.
கதாநாயகிகளில் இரண்டே இரண்டு பேர் படங்கள் மட்டும் திரையிடப்பட்டன. அதில் ஒருவர், சாவித்ரி. இன்னொருவர், மனோரமா. இவர்கள் இரண்டு பேர் நடிப்பை மட்டும் கவனித்தால் போதும் என்றார்கள்.
`குப்பத்து ராஜா' படத்தில்தான் நான் ஆச்சியுடன் முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. நான் நடிப்பதை பார்த்துக்கொண்டே இருப்பார். நான் பேசும் தமிழை ரசிப்பார். என் வேகம் அவருக்கு பிடிக்கும்.
`பில்லா' படத்தில் இடம்பெற்ற ``நாட்டுக்குள்ள எனக்கொரு பேர் உண்டு'' என்ற பாடல் காட்சியை, கடற்கரையில் ஒரு குப்பத்தில் படமாக்கினார்கள். அந்த படப்பிடிப்பில் என்னுடன் ஆச்சியும் இருந்தார். நான் நடனம் ஆடியதைப் பார்த்து கூட்டத்தில் இருந்த ஒருவர், ``பரவாயில்லையே...பைத்தியம் கூட நல்லா டான்ஸ் ஆடுதே'' என்றார்.
உடனே மனோரமா அந்த ஆளின் சட்டையைப் பிடித்து, ``யாருடா பைத்தியம்?'' என்று கேட்டு, அவனை இங்கிருந்து அனுப்பினால்தான் சூட்டிங் நடக்கும் என்று கூறினார். அவன் கூட்டத்தில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டே இருந்தார். அதன்பிறகுதான் படப்பிடிப்பு தொடர்ந்தது.
ஒருமுறை என்னை அரவணைத்த கை நீங்க. ஆயிரம் முறை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன். கடைசிவரை, மன நிம்மதியுடன், ஆரோக்கியத்துடன் நீங்கள் நடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.''


|