Nagesh
31 January 2009
தமிழ்த்
திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவரும், நகைச்சுவைத் திலகம், இந்தியாவின்
சார்லி சாப்ளின் என்று அழைக்கப்பட்டவருமான நடிகர் நாகேஷ் இன்று
மரணமடைந்தார். அவருக்கு வயது 76.
நாகேஷின் மறைவு தன்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக தலைவர்
ரஜினி தெரிவித்துள்ளார்.
நடிகர் நாகேஷுக்கும் நமது தலைவருக்கும் இருந்த நெருக்கமும் நட்பும்
திரையுலகம் நன்கு அறிந்த ஒன்று.
தலைவரின் முதல் படமே நாகேஷுடன்தான் ஆரம்பமானது. ஆம்... அபூர்வ
ராகங்களில் மருத்துவராக வருவார் நாகேஷ். அன்று அவர் தமிழின் முன்னணி
நடிகர். ரஜினிக்கு அதுதான் முதல்படம். ஆனால் அந்தப் படத்தில் ரஜினியை
அழைத்து எப்படி நடிக்க வேண்டும் என ஆலோசனைகள் சொன்னாராம். பின்னர்
ரஜினி நடித்த விதத்தைப் பார்த்து, 'அட, பிரில்லியண்டா பண்றே சிவாஜிராவ்...
இப்படித்தான் டிஃபரண்டா பண்ணனும். மத்தவங்க பாதிப்போட பண்ணா, காணாமப்
போயிடுவோம்...' என்று பாராட்டினாராம்.
தொடர்ந்து தில்லுமுல்லு, படிக்காதவன் என பல படங்களில் இருவரும் இணைந்து
நடித்துள்ளனர்.
நாகேஷ் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு
அதிர்ந்த ரஜினி, உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று, நாகேஷ் உடலுக்கு
மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், “நாகேஷ் ஒரு
நிஜமான மேதை. எ ட்ரூ லெஜன்ட். அவர்கள் தமிழ் மற்றும் தென்னிந்திய
திரையுலகின் சார்லி சாப்ளின். மிகச்சிறந்த உழைப்பாளி. அவரை வெறும்
நகைச்சுவை நடிகர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி
மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் அவர். நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…
தமிழ் சினிமாவில் அவரைபோன்று உழைத்தவர்கள் யாரும் கிடையாது. அவரது
மறைவு நமக்கெல்லாம் பெரிய இழப்பு. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்,” என்றார்.
நாகேஷ் பற்றி சில மாதங்களுக்கு முன் விஜய் டிவி ஒரு சிறப்பு
நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில் தலைவர் ரஜினியின் பேட்டியும்
இடம்பெற்றிருந்தது. அதனை யு ட்யூபில் இப்போது விட்டிருக்கிறார்கள் சில
நண்பர்கள்.
'நாகேஷ் வாழும் காலத்திலேயே இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்திருப்பது,
அவரை உண்மையிலேயே மகிழ்சிக்குள்ளாக்கும் செயல்', என்று அந்த
நிகழ்ச்சியைப் பாராட்டிய ரஜினி, மிக அற்புதமான ஒரு உரையை
வழங்கியிருந்தார். உலகில் எந்த நடிகரும் சொல்லத் துணியாத சில
உண்மைகளையும் அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பார்.
நாகேஷ் அவர்களுக்கு ரஜினிபேன்ஸ்.காம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.
|