ரஜினியைப் போன்ற உயர்ந்த குணமுள்ள உத்தம மனிதனை என் வாழ்நாளில் கண்டதில்லை. அவருக்கு கோயில் கட்டி கும்பிடணும் என்று நெகிழ்கிறார் வைகைப் புயல் வடிவேலு.
இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தின் தோல்விக்குப் பிறகு எந்தப் பத்திரிக்கையாளரிடமும் பேசுவதில்லை என முடிவெடுத்திருந்த வடிவேலு, ஒரு வழியாக தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, மீடியாக்களிடம் பேசத் தொடங்கியுள்ளார்.
குசேலன் படப்பிடிப்பு முடிந்த பிறகு, அந்தப் பட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
குசேலன் படத்துல நான் நடிக்கக் காரணமே அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிதான். அவரைப் பத்தி ஒரே வார்த்தையில சொல்லணும்னா... மனிதருள் மாணிக்கம். சந்திரமுகி படத்தைவிட இந்தப் படத்துலதான் அண்ணன் ரஜினியின் அருமைகளைத் தெரிந்து கொண்டேன்.
நான் ஒரு நடிகனானதுக்குக் காரணம் ராஜ்கிரண். ஆனா இன்னிக்கு இவ்வளவு பெரிய ஸ்டார் நடிகனாகி இருக்கேன்னா அதுக்கு அண்ணன் ரஜினிதான் காரணம். நான் சாதா வடிவேலுவா இருந்தப்பவே என்னையும் ஒரு ஆளா மதிச்சு முத்து படத்துல காமெடியனா வேஷம் கொடுத்தார். அந்த சூப்பர் ஸ்டாரோட ஒட்டிக் கிட்டதால எனக்கும் ஒரு அந்தஸ்து கிடைச்சதுண்ணே... அப்பலருந்துதான் இந்த பவிசெல்லாம் (கண் கலங்குகிறார்).
நானெல்லாம் அவரு முன்னாடி ஒரு தூசுண்ணே... ஆனா அந்தப் பெரிய மனுசன், குசேலன் பட ஷூட்டிங்கப்போ எல்லா பிரஸ்காரங்க முன்னாடியும் தன்னோட என்னைச் சரிசமமாக்கிக்கிட்டார். நான் 25 சதவிகிதம், வடிவேலு 25 சதவிகிதம்னு சொல்லி என்னை ஒரு நிமிஷம் ஆட வெச்சுட்டார்னே... எவ்ளோ பெரிய மனசு.
நானும் எத்தனையோ பெரிய ஸ்டார் கூட நடிச்சிருக்கேன். ஆனா, படம் நடிச்சாலும் சரி, நடிக்கலன்னாலும் சரி, இன்னிக்கு வரைக்கும் அவர் எங்கிட்ட காட்ற அன்பு பிரமிக்க வைக்குது.
என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல அவரை மாதிரி நல்ல மனிதரைப் பார்த்ததில்லை. கோயில் கட்டிக் கும்பிட வேண்டியவர் ரஜினி அண்ணன்...
பட்டாதாண்ணே தெரியுது என்னை மாதிரி ஆளுக்கெல்லாம். ஒரு படம் ஊத்திக்கிட்ட உடனே, ஒழிஞ்சான்யா வடிவேலு... இனி அவனை வளர விடக் கூடாதுன்னு ஒரு கூட்டமே கொக்கரிச்சது. ஆனா அந்த நேரத்துல அண்ணன் கூப்பிட்டார்.
இதெல்லாம் சகஜம்ப்பா... நம்ப அடுத்த படத்துல நீதான். கலக்கிடணும்னார். அதுவும் துண்டு துக்கடா வேஷம் இல்ல... அவருக்கு அடுத்தபடியா நான் வர்ற மாதிரி பாத்துக்கிட்டார். இதுக்கு மேல என்னண்ணே செய்யணும்...என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் வடிவேலு.
|