எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. தலைவரின் 171 ஆவது பட டைட்டில் கூலி..
(Wednesday, 8th May 2024)
லோகேஷ் கனகராஜ் எப்போதும் தன் ரசிகர்களை ஏமாற்றமடைய செய்வதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூலி டீசர் மூலம் நிரூபித்துள்ளார் என்றே கூறலாம்.
முதல்முறையாக பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். நேற்று இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. "கூலி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது.
அதிலும் குறிப்பாக ஒரு கிளாசிக் ரஜினிகாந்தை மீண்டும் அவரது ரசிகர்கள் கண்ணெதிரில் லோகேஷ் கனகராஜ் நிறுத்தப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் அவருக்கே உரித்தான உடல் மொழியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை மெய் சிலிர்க்கவைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல.
இந்த கூலி படத்தில் தங்கம் கடத்தல் நடக்கும் குடோனில் புகுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினிகாந்தின் கைகளில் எடுக்கும் வாட்ச்களால் ஆன சங்கிலி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு என்று எதிரிகளை பறக்கவிடுகிறார். இதைதொடர்ந்து பிண்ணியில் D-I-S-C-O டிஸ்கோ ஒலிக்க தன்னுடைய கூலி பேட்ஜ் மீதுள்ள ரத்தத்தை துடைக்கிறார் ரஜினிகாந்த்.
படத்தின் பெயரை பார்த்த ரசிகர்கள் பெயரே மாஸாக இருக்கிறது படத்தில் லோகியின் ட்ரீட்மெண்ட்டும், ரஜினியின் பிரசென்ஸும் வேற மாதிரி இருக்கும் என்று இப்போதே கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
ரஜினிக்கு லோகேஷ் கொடுத்த ஓல்டு பஞ்ச்
இதில் ரஜினிகாந்த் கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை வசனமாக பேசுவது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது
"அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.
தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்கள்
தப்பாக நினைக்காதே
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே"
என்ற வசனம் ஒரு பாடலின் வரியாகும் . 1979ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும், ரஜினிகாந்த், கமல்ஹசன் காம்போவில் எவர் கிரீன் கிளாசிக் காம்போவாக என்றும் நினைவு கூறப்படுகிறது. இந்த படத்தில் வரும் சிவசம்போ எனத் துவங்கும் பாடல், கவியரசு கண்ணதாசனால் எழுதப்பட்டு, எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டது.. என்றென்றும் நினைவு கொள்ளத் தக்க இந்த பாடல் இன்று கூலி (Coolie) திரைப்படத்தால் மீண்டும் டிரெண்ட் ஆகியுள்ளது.
தீ திரைப்படத்தின் இரண்டாம் பாகமா கூலி?
கடந்த 1981ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் தான் "தீ". ஆர். கிருஷ்ணசாமி இயக்கத்தில், எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த திரைப்படத்தில், ஆரம்பத்தில் ஹார்பரில் கூலி வேலை செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பின்னாளில் மிகப்பெரிய கடத்தல் மன்னனாக மாறுவார்.
ஆனால் அவருடைய தம்பி ஒரு மிகப்பெரிய போலீஸ் அதிகாரியாக மாறி, தன் சொந்த அண்ணனையே கைது செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு, இறுதியில் தன் தம்பியின் கையால் சுடப்பட்டு, தன் தாயின் மடியில் உயிரை விடுவார் கடத்தல் மன்னன் ராஜசேகரன் என்கின்ற ராஜா. ஆகையால் இந்த திரைப்படத்தில் கையில் "கூலி" பேட்ச் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடத்தல் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டிருப்பதால், தீ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் இருக்கலாம் என்று இணையத்தில் பெரிய அளவில் பேசப்படுகிறது.
கமலுக்கு ஆரம்பிக்கலாங்களா? அப்போ தலைவருக்கு?
விக்ரம் திரைப்படம் லோகேஷ் கனகராஜன் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒரு திரைப்படம் என்பது அனைவரும் அறிந்தது. அதுவும் அவர் உலக நாயகனின் தீவிர ரசிகர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் ஆரம்பிக்கலாங்களா? என்கின்ற வசனத்தை பேசியிருப்பார்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இந்த டீசரில் ஒரு வார்த்தையை லோகேஷ் வைத்திருக்கிறார். இதிலும் தனது திறமையை அவர் காண்பித்துள்ளார் என்றே கூறவேண்டும். டீசரின் முடிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிச்சுடலாமா? என்று பேசுவது போல ஒரு வசனத்தை வைத்திருக்கிறார். நிச்சயம் இந்த திரைப்படம் LCUவிற்குள் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.