’அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்’; மகளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து
இயக்குநர் மற்றும் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ’லால் சலாம்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உடன் ரஜினியும் நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்தும் நடித்துள்ளதால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு திரையரங்குகளில் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் லால் சலாம் திரைப்படம் வெளியான நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது, என் அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். லால் சலாம் திரைப்படம் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு குறிப்பிட்டு தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.
வெளியானது ரஜினிகாந்தின் லால் சலாம்.. கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!
தமிழ் திரையுலகில் என்றும் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் மட்டுமே. தனக்கென்று தனி ஸ்டைல், அதிரடி பஞ்ச் டையலாக் என, கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி போட்டுள்ளார் ரஜினிகாந்த். அன்று முதல் இன்று வரை எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அவர் சொல்லும் ஒற்றை சொல் தமிழ் நெஞ்சங்களை சிலாகித்து விடும். “என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே” தமிழ் நடிகர்களில் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர் என்றால் அது நிச்சயமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே. அபூர்வ ராகங்கள் தொடங்கி லால் சலாம் வரை இவருடைய திரை பயணம் நீண்டு கொண்டிருக்க இவருக்கான ரசிகர்கள் தலைமுறை தலைமுறையாக முளைத்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகை ஆகாது.
அந்த வரிசையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இன்று லால் சலாம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்துள்ள லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரஜினி ரசிகர்களால் இத்திரைப்படம் கொண்டாடப்படுகிறது.
ரஜினி ரசிகர்கள் சென்னை ரோகினி திரையரங்க வாயிலில் பிரமிக்க வைக்கும் வகையில் வைத்துள்ள 50 அடி உயர கட் அவுட் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பெங்களுருவில் இருந்து சுமார் இரண்டே முக்கால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டரை டன் பூக்களால் ஆன மாலையை சென்னை கொண்டு வந்து கிரேன் உதவியோடு ரஜினி கட்டவுட்க்கு அணிவித்துள்ளனர். 40 ஆண்டு காலமாக பெங்களூருவில் கட்அவுட் வைத்து கொண்டாடிய நிலையில் தற்போது சென்னையில் கட்டவுட் வைத்து ரஜினியின் மீது உள்ள அன்பை வெளிப்படுத்தி உள்ளனர் அவரது கர்நாடக ரசிகர்கள்.
நரிக்குறவர் மக்களை 'லால் சலாம்' பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்... துரத்தப்பட்ட திரையரங்கில் நடந்த மாஸ் சம்பவம்!
படம் பார்க்க அனுமதி மறுக்கப்பட்ட அதே ரோகிணி திரையரங்கில் லால் சலாம் படத்தை மகிழ்ச்சியாக பார்த்துள்ளார்கள் நரிக்குறவர்கள்.
எல்லா தரப்பு மனிதர்களும் ஒன்றாக கருதப்படும் ஒரு இடம் திரையரங்கம். ஆனால் அப்படியான திரையரங்கத்திலும் ஒரு சில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு சிம்பு நடித்து வெளியான பத்து தல படத்திற்கு சென்ற நரிக்குறவ இன மக்கள் படம் பார்க்க, சென்னை ரோகிணி திரையரங்கம் அனுமதி மறுத்தது. இதனை அங்கு இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து வெளியிட்டதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது. விமர்சனங்கள் எழத் தொடங்கியது நரிக்குறவர்களை உள்ளே அனுமதித்தது திரையரங்க நிர்வாகம். இப்படி ஒவ்வொரு படத்திற்கும் ஒரு சில நிகழ்வுகள் வெளியாகியபடியே இருக்கின்றன.
தற்போது வெளியாகியிருக்கும் லால் சலாம் படத்தைப் பார்க்க நரிக்குறவர் இன மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பாக டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. திரையரங்கத்திற்கு வந்த நரிக்குறவர்களை மரியாதையாக நடத்திய ரோகிணி திரையரங்க நிர்வாகம் அவர்களை படம் பார்க்க அனுமதித்தது.
லால் சலாம் விமர்சனம் - மதவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமை பேசும் படம்
தன் அரசியல் லாபத்திற்காக ஜாதி, மத பேதம் இன்றி சகோதரர்களாக பழகி ஒன்றாக இருக்கும் கிராமத்தை மதக் கலவரம் மூலம் போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் இரண்டாகப் பிரித்து விடுகின்றனர். இதனால் அந்த ஊரில் மிகப் பெரிய கலவரம் வெடித்து ரத்த பூமியாக மாறுகிறது. இந்த பிரச்சனையை அந்த ஊரில் மத நல்லிணக்கத்தோடு சகோதரத்துவம் நிறைந்த பெரிய மனிதராக வாழ்ந்து வரும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மொய்தீன் பாய் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) எப்படி தன் புத்தி கூர்மையை உபயோகப்படுத்தி மக்களிடம் பாசம், நேசம் காட்டி அதேசமயம் எதிரிகளிடம் அதிரடியாக மோதி, சில தந்திரங்கள் செய்து சரி செய்கிறார்? என்பதே இப்படத்தின் மீதிக் கதை.
ஒரு அரசியல்வாதி தன்னுடைய அரசியல் லாபத்திற்காக மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களிடையே எப்படி பிரிவினையை உண்டாக்கி அதில் லாபம் பார்க்கிறார் என்பதை கதையின் மையக் கருவாக வைத்து அதன் மூலம் குடும்பம், பாசம், விளையாட்டு, ஆக்ஷன் என அத்தனை ஜனரஞ்சகமான விஷயங்களையும் வைத்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக லால் சலாமை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ஒரு ஸ்ட்ராங்கான கதையை எடுத்துக்கொண்டு அதற்குத் தன் பாணியில் திரைக்கதை அமைத்து அதன் மூலம் அழுத்தமான காட்சிகளை மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏனோ மாஸ் காட்சிகளில் சற்றே தடுமாறி இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் வரும் ரஜினிகாந்தை தவிர்த்துவிட்டு அந்த இடத்தில் வேறு ஒரு மூத்த நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூட இப்படம் சிறப்பாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறது.
அந்த அளவிற்கு பாய் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது படத்தின் தன்மையை ஓவர் ஷேடோ செய்திருக்கிறது. மற்றபடி சொல்ல வந்த விஷயத்தையும் அதை காட்சிப்படுத்திய விதமும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது. அதேபோல் படத்தின் வசனமும் கதையின் நோக்கமும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. மேக்கிங்கிலும் தனிக் கவனம் செலுத்தி சிறப்பாக காட்சிப்படுத்தி இருப்பதும் நன்றாக இருக்கிறது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இன்னமும் லால் சலாம் சிறப்பாக அமைந்திருக்கும்.
படத்தில் இரண்டு நாயகர்கள், ஒருவர் விஷ்ணு விஷால் இன்னொருவர் விக்ராந்த். இதில் விக்ராந்தை காட்டிலும் விஷ்ணு விஷாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார். இவருக்கும் அவர் அம்மா ஜீவிதாவுக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. அழுத்தமான காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். நாயகிக்கு வழக்கம்போல் அதிக வேலை இல்லை. புதுமுக நடிகை என்பதால் அவ்வப்போது முகத்தை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார். இன்னொரு நாயகன் விக்ராந்த் அவருக்கான ஸ்பேசில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா படம் முழுவதிலும் தன் அனுபவ நடிப்பு மூலமாக பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், இந்தப் படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக தன் அனுபவ நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து கதைக்கும் வலு சேர்த்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் லிவிங்ஸ்டன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவியாக வரும் நிரோஷா தனக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். விஷ்ணு விஷாலின் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் அவருடன் வரும் டைகர் கார்டன் தங்கதுரை அவருக்கான வேலையை செய்திருக்கிறார்கள். போஸ்டர் நந்தகுமாரும், விவேக் பிரசன்னாவும் பல இடங்களில் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கின்றனர். குறிப்பாக விவேக் பிரசன்னா எரிச்சல் ஏற்படும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைதட்டல் பெற்றிருக்கிறார். இன்னொரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் கே.எஸ். ரவிக்குமாரும், கபில்தேவும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.
முக்கியமாக கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த படத்திற்கு மிகப்பெரிய தூணாக இருந்து படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். வழக்கம்போல் இவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் மிக சிறப்பாக அமைந்து அவர் வரும் காட்சிகள் எல்லாம் மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறது. இருந்தும் இவ்வளவு பெரிய நடிகரை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்திருப்பது இந்த படத்திற்கு அவசியமா? என்ற கேள்வியை மனதில் எழச் செய்திருக்கிறது. ஏனென்றால் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு பிரதான கதாபாத்திரமாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும்படியான பிம்பத்தை ஏற்படுத்தி இருப்பது இந்த படத்தின் முக்கியமான நோக்கத்தை அது ஓவர் ஷேடோ செய்வது போல் இருக்கிறது. மற்றபடி இவருக்கான மாஸ் காட்சிகள், பஞ்ச் வசன காட்சிகள், நெகிழ வைக்கும் காட்சிகள் என இந்த கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை ரஜினி தன் தோள்மேல் சுமந்து சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தேர் திருவிழா, ஜலாலி பாடல்கள் ஹிட் ரகம். பின்னணி இசையில் எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு இசை வேண்டுமோ அதை நிறைவாக கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான் அதை இன்னும் கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம். இப்படியான ஒரு இசையை ரஹ்மானிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு சற்று ஒரு புள்ளி குறைவாகவே இருக்கிறது. விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவு நன்றாக என்ஹான்ஸ் செய்திருக்கிறது. வெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்காக இந்த படத்திற்கு வருபவர்களுக்கும், பொது ரசிகராக வருபவர்களுக்கும் பெரிதும் ஏமாற்றம் அளிக்காமல் நல்ல மத நல்லிணக்கங்களை மக்களுக்கு தெரிவித்து குடும்பத்துடன் சென்று ஒருமுறை ரசிக்கும்படியான படமாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது இந்த லால் சலாம் திரைப்படம்.
லால் சலாம் - மத நல்லிணக்கம்!
|