இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
அப்படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என படக்குழு பெயர் வைத்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
படத்தின் படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கவுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்சன் சமூக ஊடகங்கள் வழி அறிவித்துள்ளது. இதற்கான சிறப்பு சுவரொட்டியையும் வெளியிட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்னர் நடிகர் ரஜினி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, “படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தற்போது செல்கிறேன். அடுத்த படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்டமான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். 170-வது படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்” என்றும் கூறினார்.
படம் முழுக்க முழுக்க அதிரடி கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
படத்தில் அமிதாப் பச்சன் இருப்பதால் இது இந்தி திரைப்பட ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து ‘தலைவர் 170’ திரைப்படத்திலும் திரைப்பிரபலங்கள் பலர் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
1991ஆம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ திரைப்படத்தில் ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் படம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராணா டகுபதியும் படத்தில் சேர்க்கப்பட்டார்.
படபிடிப்புக்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால் மற்றொரு தெலுங்கு முன்னணி நடிகர் நானி வாய்ப்பை நிராகரித்தார்.
படத் தயாரிப்பிலும் ஈடுபடும் ராணாவுக்கு படபிடிப்புக்கு போதிய நேரம் இல்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் ரஜினிகாந்த் படம் என்பதால் ராணா நேரம் ஒதுக்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழக மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள பகத் பாசிலும் படத்தில் இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.
வில்லன் கதாபாத்திரங்களில் அருமையான நடிப்பை வெளிபடுத்தும் பகத் இப்படத்திலும் வில்லனாக நடிப்பாரா என்பது பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
பகத் நடித்து வெளியான விக்ரம், மாமன்னன் படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக கொண்டாடப்பட்டன. பகத் ஜெயம் ரவியுடன் வில்லான நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது ரஜினியுடனும் பகத் நடிப்பதால் அதிக எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
ராணாவும் வில்லனாக நடிக்கும் திறமை கொண்டவர் என்பதால் கதைக்களம் தொடர்பாகவும் எதிர்பார்ப்புகள் அதிரித்துள்ளன.
ரஜினியின் 171ஆவது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
|