நமக்குப் பிடித்தமான நட்சத்திரங்கள் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது குரங்கு பல்டி அடிச்சாவது முதல் நாள் முதல் ஷோ பார்த்திடுவோம். ஆனால் 'இந்தப் படத்தை எல்லாம் தியேட்டர்ல பார்க்கலையே' என ஃபீல் பண்ணின படங்கள் லிஸ்டில் இந்தப் படம் தான் பாஸ் முதலில் இருக்கும். ஏன்னா இந்தப் படம் ரிலீஸ் ஆனபோது 90-களில் பிறந்த தலைமுறையினரில் பலரும் தொட்டிலில் படுத்துக்கிட்டு விரல் சூப்பிட்டு இருந்திருப்போம். இன்னுமா என்ன படம்னு தெரியலை? அட நம்ம சூப்பர் ஸ்டார் நடிப்பில் ரீ-ரிலீஸ் ஆகியிருக்கிற பாட்ஷா படம் தான். என்ன தான் ஹோம் தியேட்டரில் ஃபுல் சவுண்ட் வெச்சுப் பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி எஃபெக்டோட படத்தைப் பார்த்திருந்தாலும், ஒரு படத்தை தியேட்டரில் பார்க்கிற மாதிரி இருக்குமா மக்களே! அதுவும் சூப்பர் ஸ்டார் நடிச்ச பாட்ஷா படம்னா சும்மாவா?
பாட்ஷா டிஜிட்டல்
இந்தப் படத்தை டி.வி-யில் பார்த்தாலே விளம்பரத்தையும் சேர்த்து பார்க்கிற நம்ம பசங்க... தியேட்டரில் என்ன பண்றாங்கனு அப்படியே தியேட்டர் பக்கம் போய் பார்த்தேன். அங்கு ரசித்த சில நிகழ்வுகள் தான் இது! படம் தொடங்கியதிலிருந்து...
1.23
படம் ஆரம்பித்து தியேட்டரில் நிலநடுக்கம் வந்தது இந்த நேரத்தில் தான். அதைப் பார்த்தவுடன் நமக்கே தெரியாமல் புல்லரிக்கக்கூடும் தருணம் தான். டைட்டில் கார்டில் பின்னணியில் பி.ஜி.எம் ஒலிக்க 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்று வரும் நேரத்தில் எல்லோரும் ரஜினி ரசிகர்கள் தான். அதில் ஆரம்பித்தது ரசிகர்களின் குரல். டைட்டில் கார்ட் முடிந்தவுடன் இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருக்கும்பொழுது பின்னாடி ஒரு குரல் 'கே.டி.வி-யில் போட்டாலே விளம்பரத்தைக் கூட மாற்றாமல் பார்ப்பேன். இப்போ சும்மாவா இருப்பேன்' எனக் கேட்டது. படத்தின் மேல் உள்ள ஆர்வம் இன்னும் அதிகமாகியது. அப்போது ஒரு குரல், 'யோவ் தியேட்டர் ஆபரேட்டர் சவுண்டைக் கூட்டி வை' எனக் கேட்டது.
6.42
ஒவ்வொரு சீனும் போய்க்கொண்டிருந்த நேரத்தில் தலைவரின் என்ட்ரியை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்த சீட்டில் ஒரு இன்ச் தள்ளி உட்கார்ந்து ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள் ரசிகர்கள். சரியாக இந்த நேரத்தில் தலைவரின் காலைக் கண்ட ரசிகர்கள் தொண்டை கிழியும் அளவிற்குக் கத்தி எழுந்து ஆட ஆரம்பித்துவிட்டனர். ரஜினியின் தங்கைகள் இருவரும் பூசணிக்காயை ஆட்டோவைச் சுற்றி மேலே போட்டவுடன், அதை உடைப்பது தான் இன்ட்ரோ. நடக்க ஆரம்பித்த குழந்தை போல் ரசிகர்கள் திரையரங்கை அங்கும் இங்குமாக துள்ளிக் குதித்து வலம் வந்தனர். பாட்டுடன் சேர்த்து அங்கிருந்த அனைவரும் சேர்ந்து பாடத் தொடங்கினர்.
22.04
படம் அடுத்த லெவலுக்கு போனது இந்த சீனில் இருந்து தான். சிறு சந்தேகம் எழுந்த டி.ஜி.பி-க்கு மாணிக்கத்தைப் பார்க்க வேண்டுமென்று அவர் தம்பியிடம் கேட்க, அவரைப் பார்க்க மாணிக்கமாக சூப்பர் ஸ்டார் போகும் சீனில் ரசிர்களின் ஓய்ந்த குரல் மீண்டும் சீறத் தொடங்கியது. மாணிக்கமாக நடந்து வரும் பாட்ஷாவைப் பார்த்து தன்னை அறியாமல் சீட்டை விட்டு எழுந்துவிடுவார் டி.ஜி.பி-யாக நடித்திருந்த கிட்டி. அந்த சீனுக்கு எழுந்தது அவர் மட்டும் இல்லை தியேட்டரில் இருந்த மொத்த ரசிகர்களும் தான். கொடுத்த டிக்கெட்டைக் கிழித்துப் பறக்கவிட்டனர். முதல் சீக்வென்ஸில் கேட்ட அதே குரல் 'யோவ் ஆப்பரேட்டர் இன்னுமா சவுண்டை கூட்டவில்லை' என மீண்டும் சத்தம் கேட்டது.
பாட்ஷா காட்சிகள்
41.50
இந்த சீனுக்கு எல்லோருமே ரசிகனாக இருப்போம். அதுவும் இந்த சீனை தியேட்டரில் குறிப்பாக டிஜிட்டல் ரீமாஸ்டர் வடிவில் பார்க்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய உண்மையான முகத்தைக் காட்டாமல் இருந்த மாணிக்கம், தன் தங்கைக்கு ஒரு பிரச்னை என்றவுடன் அவர் சொல்லும் அந்த டயலாக்கானது சின்ன குழந்தை கூட சொல்லும். 'ஐயா என் பேரு மாணிக்கம்... எனக்கு இன்னோரு பேரு இருக்கு' பாட்ஷா படம் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது இந்த டயலாக்காக தான் இருக்கும்.
1.10.28
மாஸுக்கெல்லாம் பாஸ் இந்த சீன் தான். சாதுவாக இருந்த மாணிக்கம் பாட்ஷாவாக மாறும் சீன். பல பேரின் ஃபேவரைட் சீனும் இதுவாக தான் இருக்கும். மாறியது ரஜினி மட்டுமல்ல தியேட்டரில் இருந்த ரசிகர்களும் தான். அதுமட்டுமில்லாமல் ரஜினி ஒரு அடி வாங்கினால் போதும் அடி வாங்கிய ரஜினியை விட, படம் பார்க்கும் ரசிகர்களுக்குத் தான் அதிகமாக கோபம் வரும். இந்தக் கட்டம் தான் படத்தில் மிக முக்கியமான சீன். அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்து பார்க்கும்பொழுதே இந்த அளவிற்கு புல்லரிக்கிறதோ அதே சீனை முதன் முதலில் பார்க்கும்பொழுது எப்படி இருந்திருக்கும்? சொல்ல வார்த்தையில்லை. ஒரு சீனை தூக்கிக் கொடுப்பது மியூசிக் தான். அதே திரையரங்கே அதிரும் அளவு இருந்தால் எப்படி இருக்கும்?
1.18.17
தொடர்ந்து இத்தனை முறையா புல்லரிக்க வைப்பது? மாணிக்கத்தை டயலாக்கில் மட்டும் பாட்ஷாவாக பார்த்தோம்... தோற்றத்தில் பார்க்க வேண்டாமா? அப்படிப்பட்ட காட்சி தான் இது. ரஜினியின் தம்பி 'நீங்க யாரு? பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?னு கேட்டதும் ரஜினிக்கு கடந்த காலம் ஞாபகம் வந்தவுடன், பேக்ரவுண்டில் பூட்ஸ் சவுண்ட் தியேட்டரில் தலையை சுற்றிச் சுற்றி கேட்கத் தொடங்கியது. 'பாட்ஷா, பாட்ஷா' என்ற குரலுடன் அவரைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் துள்ளத் தொடங்கிவிட்டனர். அந்த நேரத்தில் மெரினாவின் அலைகளின் ஓசை ஓய்ந்தாலும் ரசிகர்களின் குரல் சத்தம் ஓயவில்லை. சவுண்டை கூட்டிவைக்கச் சொன்ன குரலும் இன்னும் ஓயவில்லை.
1.30.06
படத்தின் ஒட்டுமொத்தக் கதையும் இதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது. ரஜினியின் நெருங்கிய நண்பன் அன்வரை கொன்றுவிடுவார்கள். அதனால் தான் மாணிக்கம், மாணிக் பாட்ஷாவாக மாறுவார். ஸ்க்ரீனில் ரஜினி வரும்பொழுது எந்த அளவு அரங்கம் அதிர்ந்ததோ அதே அளவிற்கு அன்வருக்கும் அதிர்ந்தது. மாணிக்கம் பாட்ஷாவாக மாறியதற்கு முக்கியக் காரணமே இந்த அன்வர் தான். எப்படி அவர் இறந்தார்? என்று ஃப்ளாஷ்பேக்கில் இன்னொரு ஃப்ளாஷ்பேக் வரும்.
பாட்ஷா - தியேட்டர்
2.11.03
படத்தில் எந்த அளவிற்கு ரஜினிக்கு மவுஸ் இருந்ததோ அதே அளவிற்கு ரகுவரனுக்கும் இருந்தது. 'கடத்தல் மன்னன் அந்தோணி தப்பி ஓட்டம், பம்பாய் ஜெயிலில் இருந்து தப்பினான்' என்ற செய்தியை கேசவன் வாசித்து நியூஸ் பேப்பரை கீழே இறக்குவார் எதிரில் ரகுவரன் உட்கார்ந்திருப்பார். டி.வி-யில் ஒளிபரப்பாகும்பொழுது அதைக் கவனிக்காத ரசிகர்கள் இப்போது கவனித்ததையடுத்து அமைதியாக இருந்த அரங்கம் அதிரத் தொடங்கியது. இவர் தான் தன் குடும்பத்தைக் கொன்றுவிட்டார் என்று தெரிந்த பின்னர் 'மன்னிச்சு விட நான் பாட்ஷா இல்லடா ஆண்டனி... மார்க் ஆண்டனி' என சொல்லியபடியே சுட்டுக்கொல்லும் காட்சியை மறக்க முடியுமா!?
2.21.03
கடைசிக் கட்டத்திலும் ஏமாற்றத்தை அடையாத ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த சீன். தன் குடும்பத்தை காப்பாற்றிவிட்டு முடிவில் ரகுவரனையும் கொல்வதற்காக நடந்து வருவார் ரஜினி. அப்போது ரகுவரன் கண்களுக்குப் பழைய பாட்ஷாவாக தெரிவார். பேக்ரவுண்டில் பி.ஜி.எம் வேற... சொல்லவா வேணும்? அப்படித் தெரிந்தது ரகுவரனின் கண்களுக்கு மட்டுமில்லை, ரசிகர்களின் கண்களுக்கும் தான். படம் ஆரம்பிக்கும்பொழுது இருந்த அதிர்வைவிட அதிகமாக இந்த சீனுக்கு இருந்தது. சிங்க நடை போட்டு வரும் ரஜினியை பார்த்த ரசிகர்கள் கொடுத்த கோஷத்தில் அவர்களின் முழு திருப்தியும் தெரிந்தது. ரசிகர்களின் குரலும் ஓய்ந்தது ஒரு குரலைத் தவிர. அதே சவுண்ட் பார்ட்டி தான் 'யோவ் ஆப்பரேட்டர் சவுண்டை நீ கூட்டி வெக்கிறியா நான் வந்து கூட்டவா?' என்று கேட்டுச் சிரித்த ஓசையோடு திருப்திகரமாக முடிந்தது பாட்ஷா திரைப்படம்.
இதே மாதிரி எவர்க்ரீன் படங்களையெல்லாம் ரீ-ரிலீஸ் செய்தால் சிறப்பு... மிகச் சிறப்பு!
|