நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூசன் விருது தலைவருக்கு (கலைத்துறை பிரிவில்) இந்த வருடம் ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டு இருக்கிறது.
தலைவர் என்றாலே அனைவருக்கும் மூக்கு வேர்த்திடும் உடனே விமர்சிக்க வந்து விடுவார்கள். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எவருமே கிடையாது என்றாலும் தலைவர் எது செய்தாலும் செய்யவில்லை என்றாலும் விமர்சிக்கப்படுவது நியாயமே இல்லாத ஒன்று.
தலைவருக்கு ஏன் பத்ம விபூசன் விருது?
தலைவர் தென் இந்தியா / இந்தியா மட்டுமல்ல உலகளவில் இந்தியக் கலைத்துறையின் அடையாளமாக இருக்கிறார்.
ஒரு நடிகரை மற்ற நாட்டு மக்கள் ரசித்துப் பாராட்டுவது என்பது வேறு ஆனால், மற்ற நாட்டு அரசியல் தலைவர்கள் கூடக் குறிப்பிடுவது தான் மற்ற நடிகர்களுக்கும் தலைவருக்கும் உள்ள வேறுபாடு.
உங்களில் சிலருக்கு நினைவு இருக்கலாம் மன்மோகன் சிங் அவர்கள் பிரதமராக இருந்த சமயத்தில் சுற்றுப் பயணமாக ஜப்பான் சென்று இருந்த போது ஜப்பான் பாராளுமன்றத்தில் தலைவரை குறிப்பிட்டுப் பேசினார்கள்.
ஆட்சிக்கு வந்த சமயத்தில் மோடி அவர்கள் ஜப்பான் சுற்றுப் பயணமாகச் சென்ற போது உடன் இந்திய ஊடகங்களும் சென்றிருந்தனர் அப்போது ஒரு ஜப்பான் ரஜினி ரசிகர் தலைவர் படங்களைப் பார்த்து அதற்காகவே தமிழ் கற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
அதோடு தமிழில் பேசி பேட்டி எடுத்த நபரை (IBN) ஆச்சர்யப்படுத்தினார்.
உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை இன்னொரு நாட்டினரை ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வைத்து பேச வைத்து இருப்பது என்பது சாதாரண விசயமில்லை.
இந்தியா ஜப்பான் மக்களிடையே அன்பு இணைப்பு இருப்பதற்குத் தலைவரும் சிறு பங்கை ஆற்றியிருக்கிறார் என்றால் மிகையில்லை.
தலைவர் திரைப்படங்கள் வெளிவரும் போது ஜப்பானில் இருந்து சென்னை வந்து கொண்டாட்டத்தில் பங்கு பெற்று மகிழ்ந்து செல்வது என்பது எவருக்கும் அமையாத ஒரு நிகழ்வு.
சமீபத்தில் கபாலி படப்பிடிப்புக்காக மலேசியா சென்ற போது அங்கு மலேசிய மக்கள் கொடுத்த ஆதரவையும் அரசியல் தலைவர்கள் தொடர்பு கொண்டு தங்கள் அன்பை தெரிவித்ததையும் இந்த இணைய உலகம் அறிந்தது.
உள்ளூர் நடிகர்களுக்குக் கிடைக்காத வரவேற்பு தலைவருக்குக் கிடைத்தது.
கபாலி படப்பிடிப்புச் சமயத்தில் மலேசிய வாடகைக் கார் நிறுவனம் ஒன்று "பாட்ஷா" படத்தில் வரும் "ஆட்டோக்காரன்" பாடலை சுட்டிக்காட்டி பிரசவத்துக்கு இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. எந்த நடிகருக்கு இது போல இன்னொரு நாட்டில் நடக்கும்?!
இந்தியா என்றாலே பாலிவுட் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் உலகில் நம் தென் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர். தமிழ் என்ற அற்புத மொழியைப் பலருக்கும் கொண்டு சென்றவர்.
தமிழ் மொழித் திரைப்படங்களின் வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்திய பெருமைக்குச் சொந்தக்காரர்.
மேற்கூறியது எதுவுமே கற்பனை செய்தியோ போலியாகப் புகழப் பயன்படுத்திய வார்த்தைகளோ அல்ல. அனைத்துமே உண்மையாக நடந்த சம்பவங்களே! எனவே தான் காணொளிகளும் இணைக்கப்பட்டு இருக்கின்றன.
தென் இந்தியா வட இந்தியா என்ற போட்டியில் / சண்டைகளில் இரு பகுதிக்கும் பொதுவானவராக பெரும்பாலானவர்களுக்குப் பிடித்தமானவராகப் பல உயரங்களைத் தொட்டும் இன்னும் அமைதியாகத் தன்னிலை மறக்காமல் இருக்கும் தலைவருக்கு இந்த விருது மிக மிகப் பொருத்தமானதே!
"நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்" என்ற கவியரசர் கண்ணாதாசன் அவர்கள் வார்த்தைகளுக்குப் பொருத்தமானவர் திரு ரஜினிகாந்த் அவர்கள்.