“ ‘கபாலி’ படத்துல ரஜினி சார்.. சூப்பர் ஸ்டாரா தெரியாமல், கபாலியாகத்தான் தெரியணும்னு மெனக்கிட்டிருக்கேன். படம் பார்க்கும்போது ரசிகர்கள் ரஜினி சாரை சூப்பர் ஸ்டாரா பார்க்கப்போறாங்களா இல்லை கபாலியா பார்க்கப்போறாங்களான்னு ரொம்ப டென்ஷனா இருக்கு. ரிசல்ட்டுக்காக ஐம் வெயிட்டிங்” என நகம் கடிக்கிறார் உலகத் தமிழர்கள் அனைவருமே எதிர்பார்க்கும் ‘கபாலி’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஜி.முரளி. மூன்றாவது படத்திலேயே ரஜினியை படம் பிடித்த இந்த 38 வயது இளைஞருடன், படத்தின் பரபர டி.ஐ வேலைகளுக்கிடையே பேசியபோது..
‘கபாலி’ எப்படி வந்திருக்கு..?
‘கபாலி’ , ‘மெட்ராஸ்’ படத்தோட இன்னொரு வடிவம்னு சொல்லலாம். கதையா இருக்கும்போது நாங்க என்ன அவுட்புட் கொண்டுவர நினைச்சமோ அதை சரியா கொண்டுவந்திருக்கோம். ரஜினி சாரோட மாஸ் பின்புலத்தையும் அதேசமயம் புதுசா சொல்லவேண்டியதையும் மனசுல வெச்சு வேலைபார்த்திருக்கோம். அதிரடி ஆக்ஷன், அழகான காதல், செண்டிமெண்ட், சமூகப்பார்வை என ரஜினி சார் படங்களின் அம்சங்கள் எதுவுமே மிஸ் ஆகாதபடி ரஞ்சித் அழகா திரைக்கதையை வடிவமைச்சிருக்காரு. எங்க டீம் மொத்தமும் செம ஹேப்பி.
உங்களைப் பத்தி சொல்லுங்க..?
எனக்கு சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தாங்கரை பக்கம். அங்க ஸ்கூல் முடிச்சுட்டு கும்பகோணம் ஓவியக் கல்லூரியில சேர்ந்து ஓவியம் படிச்சேன். பிறகு, 2005-இல் புனே ஃபிலிம் இன்ஸ்டியூட்ல சேர்ந்து ஒளிப்பதிவு படிச்சேன். அப்போ நான் ஒளிப்பதிவு செய்த ஒரு குறும்படத்துக்கு தேசிய விருது கிடைச்சது. அந்த கோர்ஸ் முடிச்சதுமே எனக்கு முதல் பட சான்ஸ் கிடைச்சுது. அதனால நான் யார்கிட்டயும் அஸிஸ்டெண்டா வொர்க் பண்ற வாய்ப்புகள் அமையலை. 2011-ல ‘அண்டால ராட்சஷி’ அப்படிங்கிற ஒரு தெலுங்கு படம்தான் என்னோட முதல் படம். இன்ஸ்டியூட்ல கத்துக்கிட்ட விஷயங்களையும் நான் இன்ஸ்பயர் ஆன விஷயங்களையும் வெச்சு அந்தப் படம் பண்ணேன். டைரக்டர் ரஞ்சித், சென்னை ஓவியக் கல்லூரியில என் தம்பியோட பேட்ச் மேட். அந்தவகையில ரஞ்சித்தோட முதல் படமான ‘அட்டகத்தி’க்கே நான் ஒளிப்பதிவு பண்ணவேண்டியது. அப்போ அந்த தெலுங்கு படத்தோட வேலைகள் முடிவடையாததால என்னால பண்ணமுடியலை. அதுக்கப்புறம்தான் ‘மெட்ராஸ்’ படத்துல ரெண்டு பேரும் இணைஞ்சு வேலைபார்த்தோம். இப்போ ‘கபாலி’.
ஒரு ரசிகனா நீங்க திரையில் ரஜினியை பார்த்ததுக்கும் இப்போ உங்க கேமராவில் அவரை படம் பிடித்ததற்கும் இடையேயான வேறுபாடு எப்படி இருக்கு..?
எல்லோரையும்போல என்னோட சின்ன வயசுலயும் ரஜினி சார்தான் எனக்கு ஒரு கம்ப்ளீட் எண்டர்டெய்னரா நெறைய சந்தோஷங்களை தந்தவர். அதையெல்லாம் தாண்டி அவரோட அனுபவம், பின்புலம் மிகப்பெருசு. அப்படிப்பட்ட ஒருவரோட கேரியர்ல இப்பதான் சினிமாவுக்கு வந்த நானும் ஒரு சின்ன பங்கா இருக்கேங்குறதுல ரொம்ப சந்தோஷம். என்னோட சின்ன லைஃப்ல ரஜினி சாரும் கடந்து போறாருங்கிறது ரொம்ப பெரிய விஷயம்.
முதல் நாள் முதல் ஷாட் எடுக்கும்போது எனக்கு பெருசா பயம்லாம் இல்லை. ரொம்ப கேஷூவலாகத்தான் இருந்தேன். ஆனால், ரஜினி சார் கபாலியா கேமரா முன்னாடி வந்து நின்னதும் எனக்கு குப்புன்னு வியர்க்க ஆரம்பிச்சுடுச்சு. ‘ரோல் கேமரா’னு சொன்னதும் கையெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. ஆனால், ரொம்ப சீக்கிரமே ரஜினி சார் தன்னோட இயல்பால் என்னை சகஜமாக்கிட்டார்.
செட்ல அவரோட எளிமையையும் அர்ப்பணிப்பையும் ஒரு முதல் பட ஹீரோ மாதிரி வேலை மேல காட்டுற ஆர்வத்தையும் படபடப்பையும் பார்க்கும்போது ரொம்ப இன்ஸ்பயரிங்காக இருக்கு. இன்னும் சொல்லப்போனா, நான் ரஜினி சார் ரசிகன் கிடையாது. ஆனால், இப்போ அவர்கூட பழகியபிறகு நான் அவரோட மிகப்பெரிய ஃபேன் ஆகிட்டேன். காரணம், தினமும் ஷூட்டிங்ல அவரை ஒரு நடிகராகவும் பார்த்தேன், அதேசமயம் ஒரு சாதாரண மனிதராகவும் பார்த்தேன். சாதாரணமா எங்ககூட சேர் போட்டு அமைதியா உட்கார்ந்து பேசிக்கிட்டுருந்தவரு, ‘ஷாட் ரெடி’னு சொன்னவுடன் கேமரா முன்னாடி மாஸ் காட்டுனதும் மிரண்டுட்டேன்.
திரையில வர்ற ரஜினி என்னும் ஒரு மிகப்பெரிய பிம்பத்தைக்கொண்டவர் எப்படி இவ்வளவு எளிமையா இருக்குறாருன்னு நெனைச்சு டீம்ல எல்லோருமே ஆச்சர்யப்பட்டுப்போனோம். ஷாட் கேப்ல கேரவன் போகாமல் மலேசியாவுல அடிச்ச வெயில்லயும் செட்ல கிடக்கிற ஏதோ ஒரு சேரை எடுத்துப்போட்டு தானே ஒரு குடையைப் பிடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருப்பதாகட்டும் என அங்கே தான் ஒரு பெரிய ஸ்டாரா நடந்துக்காமல் தன்னோட எளிமையால் அவர் எங்களை ரொம்ப கம்ஃபோர்ட்டா உணரவெச்சாரு. இப்படி ரஜினி சார்கூட வேலை பார்த்த ஒவ்வொரு நாளுமே ரொம்ப சந்தோஷமாகவே உணர்ந்தோம்.
‘கபாலி’ டீமுக்கே ரஜினி மாதிரியான ஒரு மாஸ் ஹீரோ புதுசு.. அதேபோல ரஜினிக்கும் டோட்டலா இவ்வளவு இளமையான டீம்கூட வொர்க் பண்றதும் புதுசு..? இதற்கான புரிதல் எவ்வாறு இருந்தது..?
ஒரு நடிகர், டைரக்டர் என்பதையெல்லாம் தாண்டி, இந்தப் படத்தோட கதைதான் எல்லாத்துக்குமே ஆதாரமா இருக்கு. அந்த ஆதாரத்தை வெச்சுதான் ரஜினி சார், ரஞ்சித் உட்பட எல்லோருமே வேலை பார்க்குறோம். அப்படி அந்த கதை, கதைசார்ந்த விஷயங்கள்ல ஒவ்வொருத்தரும் கவனம் செலுத்தினபோது எங்களுக்குள்ளே ஒரு தானாகவே ஒரு புரிதல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் ‘மெட்ராஸ்’ படத்துல வேலைபார்த்த அதே டீம் இந்த படத்துலேயும் இருக்கணும்னு ரஞ்சித் ஆரம்பத்துலேயே முடிவு பண்ணியிருந்தாரு. அதன்படி கிட்டத்தட்ட அந்த படத்துல வேலை பார்த்த அதே டெக்னீஷியன்ஸ்தான் ‘கபாலி’ படத்துலேயும் வேலைபார்க்குறாங்க. அது எங்களோட கம்னியூகேஷனுக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கு
ரஜினி, தினேஷ், தன்ஷிகா.. இப்படி எல்லோருமே தோற்றத்துல ரொம்ப புதுசா தெரியுறாங்களே.. அதுக்காக என்னவெல்லாம் மெனக்கிட்டீங்க..?
‘கபாலி’ கதை எழுதி முடிச்சதுமே ரஞ்சித் மலேசியா போய் கொஞ்சநாள் தங்கியிருந்தார். அங்கு அவர் எழுதுன கதையை அந்த சூழல்ல நேரடியா பொருத்தி பார்த்துக்கிட்டார். அப்போ, அவருக்கு அங்கே கிடைச்ச தகவல்களையும் தேவைகளையும் அடிப்படையாக வெச்சு ரஜினி சார் உட்பட ஒவ்வொருத்தர் தோற்றத்தையும் வடிவமைச்சோம். கிட்டத்தட்ட தற்போதைய மலேசிய தமிழர்களின் வாழ்வியல் சூழலை அப்படியே பிரதிபலிக்கிறதுக்குதான் முயற்சி செஞ்சிருக்கோம்.
‘கபாலி’ ரஜினி படமா இருக்குமா..? ரஞ்சித் படமா இருக்குமா..?
கண்டிப்பா இது ரெண்டு பேர் படமாகவும் இருக்கும். ‘மெட்ராஸ்’ மாதிரியான எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் அதேசமயம் வர்த்தகரீதியான அம்சங்களையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு படமா ‘கபாலி’ இருக்கும். ஆடியன்ஸை ரஜினி சார் தியேட்டரை நோக்கி வரவைக்கிறார்னா.. அவரை ஸ்கிரீன்ல ரஞ்சித் தன்னோட பாணியில் எப்படியெல்லாம் உருவகப்படுத்தியிருப்பாருங்கிறதுதான் ‘கபாலி’
ரஜினியிடம் பாராட்டு வாங்கிய தருணங்கள்..?
தாய்லாந்து, மலேசியாவில் எடுக்கவேண்டிய சில காட்சிகளை இங்கே சென்னையில ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் தலைமையில செட் போட்டு ஷூட் பண்ணினோம். அதை ரஜினி சார் பார்த்துட்டு, ‘வெரிகுட்.. வெரிகுட்.. அப்படியே இருக்கு’னு சொன்னார். அதேபோல ஒரு ஸ்டார் நடிக்கிற படத்துக்குன்னு சில லைட்டிங் பாட்டர்ன் இருக்கு அதையெல்லாம் நான் இந்தப் படத்துல பண்ணலை. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் வகையிலதான் லைட்டிங் போன்ற விஷயங்கள்ல கவனம் செலுத்தினேன். அதையெல்லாம் ரஜினி சார் அப்பப்போ குறிப்பிட்டு பாராட்டினார்.
ரிலீஸ் எப்போ..?
ஷூட்டிங் முழுவதும் முடிஞ்சு இப்போ எடிட்டிங், டி.ஐ உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ரொம்ப ஸ்பீடா போய்க்கிட்டிருக்கு. இன்னும் ஒரு மாசத்துல எல்லா வேலைகளுமே முடிஞ்சிடும். வர்த்தகரீதியான பணிகளும் பரபரப்பா போய்க்கிட்டிருக்கு. அதெல்லாம் முடிஞ்சதும் வெகு விரைவில் படம் ரிலீஸ்.
நன்றி : விகடன்
|