 சோளிங்கர்… வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகரம். பெரிதாக சாலைகள் கூட கிடையாது. ஒதுக்குப்புறமாக இருந்த இந்த ஊர்தான் இன்று இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது, அங்கு நடத்தப்பட்ட ஒரு மெகா மாநாட்டால்.
மலரட்டும் மனிதநேயம் என்ற பெயரில் ரஜினி ரசிகர்… அல்ல பக்தர் சோளிங்கர் ரவி மற்றும் அவரது தம்பி ரஜினி முருகன் இருவர் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாநாட்டை அநாயாசமாக நடத்திக் காட்டி தலைவர் ரஜினியை வியக்க வைத்துள்ளார்.
தமிழகம், புதுவை, பெங்களூர், மகாராஷ்ட்ரா என பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ரசிகர்களால் அந்த சின்ன நகரம் திணறித்தான் போனது. எங்கு பார்த்தாலும் ரஜினி பேனர்கள், கட் அவுட்கள், அலங்கார தோரணங்கள், ஒளிரும் விளக்குகள், ரஜினி பாடல்கள்….
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலிருந்தே அலையலையாக இளைஞர் பட்டாளம் திரண்டு வர ஆரம்பித்துவிட்டது. பெரும்பாலும் 20களில் இருக்கும் அல்லது கடந்த இளைஞர்கள். தலைவர் நடிக்க பாட்ஷா ரிலீசுக்குப் பிறகு பிறந்த குழந்தைகள் வளர்ந்து இன்று சீனியர் ரசிகர்களையே மிஞ்சும் அளவுக்கு தீவிரமாக செயல்படுவதைப் பார்க்க முடிந்தது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வரை வந்திருக்கிறார்கள் என்று கூறினார் சோளிங்கர் ரவி. எங்கு பார்த்தாலும் தலைகள்தான்.
கோடிக்கணக்கில் செலவழித்து, காசு, பிரியாணி, மது என கொடுத்து அழைத்து வந்திருந்தால்கூட இந்தக் கூட்டம் திரண்டிருக்காது என உறுதியாகச் சொல்வேன். திமுக அல்லது அதிமுக போன்ற முதல் நிலைக் கட்சிகளே முயன்றிருந்தால்கூட இப்படி ஒரு மாநாட்டை நடத்தியிருக்க முடியாது.
அன்பால் சேர்ந்த இந்தக் கூட்டமோ, அழைப்பிதழ் மட்டும்தான் கேட்டது. அழைப்பிதழ் கிடைத்ததுமே விழாவுக்குக் கிளம்பத் திட்டமிட்டு, தங்கள் சொந்த வாகனங்களில், சொந்தப் பணத்தைச் செலவழித்து பயணித்து வந்திருந்தனர்.
இவ்வளவு பெரிய கூட்டம் சேர்ந்தது ரஜினியைப் பார்க்க அல்ல.. அவர் புகழ் பாட, பாடப்படுவதைக் கேட்டு மகிழ. அந்த மனிதரின் பெயருக்கே இத்தனை பலம் என்றால், அவர் மட்டும் இந்த மாநாட்டுக்கு வந்திருந்தால் கூடியிருக்கக் கூடிய கூட்டத்தைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்!
விழாவில் நடத்தப்பட்ட இசைக் கச்சேரியின்போது, தலைவர் ரஜினியின் பாடல்களைக் கேட்டு உற்சாகமாக நடனமிட்டனர். தலைவர் பெயர் உச்சரிக்கப்பட்ட போதெல்லாம் கைத்தட்டி மகிழ்ந்தனர். முக்கிய பிரமுகர்கள் பேசியபோது அவர்களுக்கு உரிய மரியாதை தந்து தங்களின் பக்குவத் தன்மையைக் காட்டினர். ஆனால் எந்த இடத்திலும் அவர்கள் வரம்பு மீறவில்லை. குடித்துவிட்டு கலாட்டா செய்தார்கள் என்றோ, பூசல்களில் இறங்கினர் என்றோ சாதாரண பொதுமனிதனோ அல்லது காவலுக்கு நின்ற போலீசாரோ யாரிடமும் புகார் கூற முடியாத அளவுக்கு கண்ணியமும் கட்டுப்பாடும் மிக்க மாநாடாக மலரட்டும் மனிதநேயம் அமைந்தது. அதுதான் இந்த மாநாட்டின் மிகப் பெரிய வெற்றி.
கூடிய கூட்டத்தைப் பார்த்தும், வந்திருந்த விருந்தினர்கள் பேச்சும், ரசிகர்கள் காத்த கண்ணியம் – கட்டுப்பாடும் தலைவர் ரஜினியை பெருமிதப்பட வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த விழாவுக்கான மொத்த செலவையும் தான் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தில் செய்திருக்கிறார் ரவி. அவரது இந்த முயற்சி பற்றி அறிந்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் இயங்கும் பலரும் உதவ முயற்சித்தனர். சிலர் லட்சக்கணக்கான ரூபாயைத் தரத் தயாராக இருந்தனர்.
ஆனால் ரவி அனைத்தையும் மறுத்துவிட்டார். இது தலைவருக்கு நான் செய்யும் மரியாதை. நம் தலைவரின் பலம் என்ன… அவரது ரசிகர்களின் பெருமை என்ன என்பதை உணர்த்தச் செய்யும் ஏற்பாடு இது. எல்லோரும் குடும்பத்துடன் வாங்க.. அதுபோதும் என்று கூறிவிட்டு விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்.
‘தலைவா நீங்க எப்போது ‘அழைத்தாலும்’ தயாராக இருக்கிறோம்…’ என்பதை ரஜினி ரசிகர்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்வதாகவே இந்த மாநாடு அமைந்துவிட்டது!
-வினோ
என்வழி



























|