லிங்கா படத்தில் பல கோடிகளை முதல் மூன்று நாட்களிலேயே குவித்துவிட்ட தியேட்டர்காரர்கள், குறைவான வசூல் கணக்குக் காட்டியதை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர் வணிக வரித் துறையினர்.
ரஜினி பட விஷயத்தில் ஒருவித பகல் கொள்ளையே நடத்துகிறார்கள் தியேட்டர்காரர்களும் விநியோகஸ்தர்களும் என்றால் மிகையல்ல.
படத்துக்கு எவ்வளவு வசூல் குவிந்தாலும், அதை வெளியில் காட்டாமல், போலியான கணக்குகளைத் தயாரித்துக் காட்டி நஷ்டம் என்று கூறி வரி ஏய்ப்பு செய்கிறார்கள். இதே கணக்கை பின்னர் மீடியாவிலும் காட்டி தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது, என ரஜினியும் தயாரிப்பாளர்களும் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதும் தொடர்கிறது.
ரஜினி படங்களுக்கு முதல் நாள் முதல் காட்சி என்பது எழுதப்பட்ட சட்டமாகும். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இந்த வழக்கம் இருந்து வருகிறது.
படம் வெளியாகும் நேரமான 11.30-க்கு முன்பே மூன்று சிறப்புக் காட்சிகள் போடுவார்கள் பெரும்பாலான அரங்குகளில். சென்னை போன்ற பெரு நகரங்களும் இதற்கு விலக்கல்ல.
இந்த முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டின் விலை, ஒரிஜினல் டிக்கெட் விலையைப் போல பத்து மடங்கு இருக்கும். முதல் வரிசை இருக்கையிலிருந்து பால்கனி இருக்கை வரை அனைத்துக்கும் ஒரே கட்டணம். சிவாஜி படத்தின்போது ஒரு டிக்கெட் மூவாயிரம் வரை விலை போனது.
இந்த மூன்று காட்சிகள் தவிர்த்த அன்றைய நாளின் பிற காட்சிகளுக்கு சற்று குறைந்த விலையில், ஆனால் ப்ளாட்டாக ஒரே ரேட்டில் விற்பது தியேட்டர்காரர்கள் வழக்கம். அதாவது தியேட்டரே டிக்கெட்டை ப்ளாக்கில் விற்கும்.
சிறப்பு டிக்கெட் என அச்சடித்துக் கொடுப்பவர்கள், அந்த டிக்கெட்டை கணக்கில் காட்டுவதே இல்லை. முதல் நாளில் மட்டுமே பல லட்சங்களை இந்த காட்சிகள் மூலம் பார்த்துவிடுகின்றன தியேட்டர்கள். முதல் நாள் மட்டும் எட்டு காட்சிகள் ஓட்டும் இவர்கள், அடுத்த இரு தினங்களுக்கும் தலா ஆறு காட்சிகள் ஓட்டுகிறார்கள்.
இவற்றில் தினசரி நான்கு காட்சிகளுக்கு மட்டுமே கணக்கு காட்டுகிறார்கள். அந்த நான்கு காட்சிகளுக்கும் இவர்கள் கொடுக்கும் டிக்கெட் கணக்கு ரூ 10, ரூ 40, ரூ 50 மட்டுமே.
ரசிகர்களிடம் ஆயிரங்களில் வசூலித்துவிட்டு வெறும் அஞ்சு பத்து கணக்கு காட்டிவிடுகிறார்கள். ஒவ்வொரு தியேட்டரும் ரஜினி படத்தை வெளியிடும்போது, முதல் வாரத்திலேயே மொத்தப் பணத்தையும் எடுத்துவிடுகின்றனர். மீதி நாட்களில் வருவதெல்லாம் போனஸ். ஆனால் இப்படி தாங்கள் சம்பாதித்ததை மட்டும் எந்த தியேட்டர்காரரும், அவர்களுடன் டீலிங் வைத்திருக்கும் விநியோகஸ்தரும் வெளியில் சொல்வதே இல்லை.உதாரணமாக 900 இருக்கைகள் கொண்ட ஒற்றைத் திரையரங்கில், லிங்காவுக்கு முதல் நாள் நடத்தும் 8 ஷோக்களுக்கும் சராசரியாக டிக்கெட் விலை ரூ 500 என்று வைத்துக் கொண்டால் கூட, அன்று மட்டுமே ரூ 36 லட்சம் வசூலாகியிருக்கிறது. இது கற்பனைக் கணக்கல்ல... சென்னையின் பிரதான பகுதியில் உள்ள ஒரு அரங்கில் இந்த விலைக்குத்தான் டிக்கெட் விற்றார்கள். ரசிகர்களும் அடித்துப் பிடித்து வாங்கினார்கள்.
திருச்சி, தஞ்சை, திருப்பூர், கோவை, மதுரை என பல ஊர்களிலும் நள்ளிரவுதான் முதல் காட்சி ஆரம்பமானது, குறைந்தபட்சம் ரூ 300லிருந்து 1000 வரை டிக்கெட் விலை இருந்தது. முதல் 3 நாட்கள் அத்தனை அரங்குகளும் ஹவுஸ்புல்தான். அதன் பின்னர் வந்த 5 நாட்களிலும் சராசரியாக 60 முதல் 70 சதவீத பார்வையாளர்கள் இந்தப் படத்துக்கு வந்திருக்கிறார்கள்.
சென்னை நகரைப் பொறுத்தவரை, இப்போது வரை நிறைந்த கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது லிங்கா. சத்யம், லக்ஸ் போன்ற மால்கள் தவிர்த்து, சில மால்களில் இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகளை இருமடங்கு அதாவது ரூ 250 வைத்துதான் விற்பனை செய்தனர். ரூ 120 டிக்கெட்டுக்கு என்றும் ரூ 130 ஸ்நாக்ஸுக்கு என்று கூறியே விற்பனை செய்தனர் முதல் மூன்று நாட்களும். இதற்கான கணக்குகளை முறைப்படி தந்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.
இத்தனைக்கும் லிங்கா படத்துக்கு 100 சதவீதம் கேளிக்கை வரி விலக்கு வேறு. அதன் பலன் முழுவதும் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கையும் களவுமாகப் பிடித்த கர்நாடகாஇப்படி வசூலில் பெரும் மோசடிக் கணக்கைக் காட்டியுள்ள தியேட்டர்காரர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் குறித்து கர்நாடக மாநில வணிக வரித்துறை சமீபத்தில் பெரும் உண்மையை வெளியிட்டுள்ளது.
லிங்கா படம் வெளியான முதல் இரு தினங்களுக்கு தங்கள் அலுவலகத்திலிருந்து 33 அதிகாரிகளை படம் வெளியான பல அரங்குகளுக்கும் அனுப்பி படம் பார்க்க வைத்தது. இரண்டு நாட்களில் மொத்தம் 150 காட்சிகள் பார்த்துள்ளனர் அந்த அலுவலர்கள்.
அவர்கள் சோதனையிட்டதில், ஒரு பெரிய தியேட்டர் குழுமம் கொடுத்த கணக்கில், லிங்காவுக்கு கூட்டமே வரவில்லை என்றும், குறைந்த அளவே டிக்கெட் விற்பனையானது, அதுவும் மிகக் குறைந்த விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருந்ததாம்.
ஆனால் லிங்காவுக்கு எவ்வளவு கூட்டம் அந்த அரங்குக்கு வந்தது என்பதை கண்ணால் கண்ட அதிகாரிகள், அந்த இரு தினங்களில் மட்டும் லிங்காவுக்கு வசூலான தொகையில் ரூ 45 லட்சத்தை கணக்கு காட்டாமல் தியேட்டர் நிர்வாகம் மறைத்ததை அம்பலமாக்கியுள்ளனர். டிகே ரவி என்ற அதிகாரியின் தலைமையில் சாதாரண சினிமா ரசிகர்களைப் போல திரையரங்குகளுக்குப் போய் இந்த உண்மையை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுபோல மொத்த அரங்குகளின் கணக்கையும் அவர்கள் கேட்டுள்ளனர். தமிழகத்திலும் இதுபோல நடந்திருந்தால், லிங்கா விஷயத்தில் தியேட்டர்காரர்கள் செய்துள்ள முறைகேடுகள் அம்பலத்துக்கு வந்திருக்குமே!
|