 கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில், குறைந்தது 39 அப்பாவிக் குடிமக்கள் பலியாகியுள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை இன்னமும் கூடும் அபாயம் நிலவுகிறது. இந்தத் துயரச் சம்பவம் நம் நெஞ்சை உலுக்கியுள்ளது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், காயமடைந்தோருக்கு ஆறுதல்களும் தெரிவித்து, நம் தலைவர் ரஜினிகாந்த் உடனடியாக வெளியிட்ட ட்வீட்டை முதலில் முன்வைக்கிறோம்:
தலைவர் ரஜினிகாந்தின் இரங்கல் செய்தி

தவெக-வின் அலட்சியமும், விஜய்யின் கடமையும்
இந்தத் துயரச் சம்பவம், ஒரு திரைப்பட நட்சத்திரத்தை கண்மூடித்தனமாகப் பார்க்க வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் கூடிய மக்கள் கூட்டம், முறையான பாதுகாப்பற்ற ஏற்பாடுகளால் விளைந்த துயரமிது. இந்த நெரிசலுக்குப் பின்னால், தனது புகழின் பலத்தை மட்டும் நம்பி, ரசிகர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்காத தவெக-வின் அலட்சியம் முதன்மைக் காரணமாகிறது.
சமூக வலைதள மாயை: சினிமா உலகில் 'மில்லியன் வியூஸ்' மற்றும் சமீபத்தில் 'ஸ்பேம்' என நிரூபிக்கப்பட்ட வசூல் சாதனைகள் ஆகியவற்றைப் போலவே, அரசியலிலும் 'கூட்டத்தின் எண்ணிக்கை' என்ற மாயையை மட்டுமே விஜய் நம்புவதாகத் தெரிகிறது. வெறும் கூட்டத்தைக் காட்டுவது மட்டுமே நோக்கமாக இருக்கிறது.
துயரமான சூழலில் விஜய்யின் செயல்பாடு: 39 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்தச் சூழலில், விஜய் உடனடியாக அங்கிருந்து ஊடகங்களிடம் பேசாமல் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுவது, ஒரு பொதுத்தலைவர் இத்தகைய துயரமான தருணங்களில் கடைப்பிடிக்க வேண்டிய அரசியல் முதிர்ச்சி அவரிடம் இல்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. அவர் இந்தச் சூழலை மிகவும் திறமையாகவும் (Strategic Way) தார்மீகமாகவும் கையாண்டிருக்க வேண்டும்.
மக்கள் பாதுகாப்பு: ரஜினிகாந்தின் தீர்க்கமான நிலைப்பாடு
நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்றென்றும் மக்களின் பாதுகாப்புக்கு முதலிடம் கொடுத்தவர். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவரது முடிவுகள் தலைசிறந்த உதாரணம்.
அரசியலைத் தவிர்த்ததில் இருந்த அக்கறை: 2020ஆம் ஆண்டு தனது அரசியல் பிரவேசத்தை அவர் கைவிட்டபோது, தன்னைப் பின் தொடரும் ஒருவருக்குக்கூடத் தீங்கு வரக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
"நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருவோரை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை… என் உயிருடன் போனாலும் பரவாயில்லை... என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை." – ரஜினிகாந்த் (29-12-2020)
ரசிகர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுரை: தலைவர் ரஜினிகாந்த் எப்போதுமே கல்விக்கு முதலிடம் கொடுத்தவர். மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியவர்.
"மாணவர்களுக்கு அரசியல் பற்றி அறிதலும் புரிதலும் இருக்க வேண்டும், ஆனால் முழுமையாக அரசியலில் ஈடுபடாதீர்கள். கல்விதான் முக்கியம்."
ரசிகர்களின் மீதான பாதுகாப்பு உணர்வு: தனது பிறந்தநாளில் ரசிகர்களைச் சந்திப்பதைத் தவிர்த்ததற்கான காரணம், அவரது பாதுகாப்பு உணர்வை அழுத்தமாக உணர்த்துகிறது.
"இரண்டாவது வாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடென்ட் நடந்திருக்கிறது. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவதாக, இதனால் பொதுமக்களுக்கு நிறைய இடையூறு வரும். இதையெல்லாம் தடுக்கிறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்தநாள் அன்றைக்கு யாரையும் சந்திப்பதில்லை." – ரஜினிகாந்த் (1995 தூர்தர்ஷன் பேட்டி)
தனது ரசிகர்களின் உடல்நலம், விபத்து அபாயம், பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு ஆகியவற்றைத் தவிர்ப்பதற்காக தனது தனிப்பட்ட விருப்பத்தைக் கூடத் தியாகம் செய்தவர் ரஜினிகாந்த். இதுவே ஒரு தலைவனின் தார்மீகக் கடமை.
அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளும், விஜய்க்கான சவால்களும்
இந்தத் துயரச் சம்பவத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளும் தங்களுக்குச் சாதகமாக ஆதாயம் தேட முயற்சி செய்வார்கள். விஜய்யின் அரசியல் நகர்வுகளால் ஏற்படும் பிழைகளை எதிர்த்துப் பேசுவது, மற்ற கட்சிகளுக்கு எளிதான அரசியல் ஆதாயமாக இருக்கும்.
மேலும், இந்தச் சம்பவத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மாநில மற்றும் தேசியக் கட்சிகள் விஜய்யை கூட்டணிக்கு இணங்க வைக்கவோ அல்லது நெருக்கடி கொடுக்கவோ முயற்சிப்பார்கள். இது விஜய்க்கு மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தும்.
பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள்
திரை நட்சத்திரங்களைப் பின்பற்றுவதற்கு அறிவு, அனுபவம் தேவையில்லை என்று நினைக்கலாம். ஆனால், குறைந்தபட்சம் உங்கள்மீது அக்கறை கொண்டு, உங்களை முன்னேற்ற விரும்பும் ஒருவரைப் பின் தொடருங்கள். 'பதவிக்கு வந்தால்தான் சேவை' என்று சொல்பவர்களின் வெற்று வார்த்தைகளை நம்பாதீர்கள்.
கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிகள்:
நடிகர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்குச் செல்லும்போது உங்கள் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுங்கள். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களை நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கூட்டத்தின் கட்டுப்பாட்டை மீறி உயிருக்கு ஆபத்து ஏற்படும்போது, அங்கிருந்து விலகிச் செல்வதே அறிவான முடிவாகும்.
விஜய் அவர்களுக்கு எங்கள் வேண்டுகோள்
ரஜினிகாந்த் திரைத்துறையில் ஏற்ற இறக்கங்களைக் கடந்து, யாரையும் இழிவுபடுத்தாமல், தனது ரசிகர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்து, நெறிமுறையான வழியில் பயணித்து, எங்கள் தலைவர் இன்றுவரை தன்னை நிரூபித்துள்ளார்.
அதேபோல, உங்கள் ரசிகர்களையும் குழந்தைகளையும் பாதுகாத்து வழிகாட்டுவதே உங்களின் தலையாய கடமை. இதில், நீங்கள் தேர்தலில் வெல்வது அல்லது தோற்பது என்பதற்கெல்லாம் இடமில்லை. அவர்களை அரசியல் வெற்றிக்கான கருவியாக மட்டும் பயன்படுத்தாதீர்கள். தார்மீக விழுமியங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமே, அரசியல் களத்தில் நீங்கள் உண்மையான சவாலை ஏற்படுத்த முடியும்.
சில பழைய குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது


|