ரசிகர்களின் நெஞ்சங்களை வென்ற கூலி இசை வெளியீடு விழா
(Wednesday, 6th August 2025)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 2-ஆம் தேதி மிக கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்களின் ஆரவாரமும், நட்சத்திரங்களின் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகளும் அரங்கை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தின. சுருதி ஹாசன், அனிருத் ரவிச்சந்தர், சத்யராஜ், நாகார்ஜுனா, அமீர்கான் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மேடையில் பேசியது அனைவரையும் கவர்ந்தது. ரஜினிகாந்த் மீதுள்ள தனிப்பட்ட அனுபவங்களையும் அன்பையும் அனைவரும் பகிர்ந்து கொண்டது இந்த நிகழ்வை திரையுலகிற்கே ஒரு உணர்வுபூர்வமான தருணமாக மாற்றியது.
ரஜினியின் பேச்சில் 10 முக்கிய தருணங்கள்
படத்தின் நாயகன் ரஜினிகாந்த் தனது பேச்சில் நகைச்சுவை, நெகிழ்ச்சி, மற்றும் பல சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றில் 10 முக்கிய தருணங்கள் இங்கே:
"இந்த மங்காத்தா வசனம் நாகார்ஜுனாவுக்கு கச்சிதமாக பொருந்தும்" என்று, மங்காத்தா படத்தில் வரும் "எவ்வளவு நாள்தான் நானும் நல்லவனாவே நடிக்கிறது?" என்ற வசனம், கூலி படத்தில் நாகார்ஜுனாவின் வில்லன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் என்று நகைச்சுவையாக பாராட்டினார்.
"நான் உங்ககிட்ட யாருக்கு ரசிகன்னு கேட்டேனா?" என்று ஒருமுறை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "நான் கமல் சார் ரசிகர்" என்று கூறியதை நினைவு கூர்ந்தார். அதற்கு ரஜினி, "நான் உங்ககிட்ட யாருக்கு ரசிகன்னு கேட்டேனா?" என்று கேட்டதாகவும், அதற்கு லோகேஷ், கூலி ஒரு சாதாரண மசாலா படம் இல்லை, புத்திசாலித்தனமான படம் என்பதை அப்படிச் சொன்னார் என்றும் விளக்கினார்.
படத்தின் உண்மையான ஹீரோ லோகேஷ் கனகராஜ் தான் என்று ரஜினி பாராட்டினார். தன்னையும் ஒரு நட்சத்திர பட்டாளத்தையும் வைத்து படம் எடுக்கும்போது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பது இயல்பானது என்றும் குறிப்பிட்டார்.
"சத்யராஜுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அவர் நேர்மையானவர்." சத்யராஜுக்கும் தனக்கும் கொள்கை ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், அவர் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்றும், அப்படிப்பட்டவர்களை நம்பலாம் என்றும் கூறினார்.
"லோகேஷின் இரண்டு மணி நேர இன்டெர்வியூவை என்னால் பார்க்க முடியவில்லை!" என்று லோகேஷ் அளித்த ஒரு நீண்ட நேர்காணலைப் பற்றி வேடிக்கையாகப் பேசினார். உட்கார்ந்து பார்த்தும், படுத்துப் பார்த்தும், தூங்கி எழுந்து பார்த்தும் தன்னால் அதை முழுமையாகப் பார்க்க முடியவில்லை என்றார்.
"நான் ஒருபோதும் இன்டெர்வியூ கொடுக்க மாட்டேன்" என்று ஐந்து வருடங்களாக பேட்டி கேட்கிறார்கள் என்றும், ஒருபோதும் பேட்டி கொடுக்க மாட்டேன் என்றும் ரஜினி உறுதிபடக் கூறினார். பேட்டியில் கோட்டை கழற்றி சோபாவில் வைத்து, ரகசியங்களை எல்லாம் மெதுவாக வெளியில் இழுத்து விடுவார்கள் என்றும் வேடிக்கையாகச் சொன்னார்.
நாகார்ஜுனாவுக்குப் பிறகு படத்தில் ஒரு பெரிய நட்சத்திரம் கேமியோ செய்வதாக லோகேஷ் சொன்னபோது, முதலில் அது கமல் ஹாசன் தான் என்று தான் நினைத்ததாகவும், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் கூறினார்.
"அமீர்கான்... நான் உங்க ரசிகன்" என்று பாலிவுட்டில் பெரிய மார்க்கெட் இருந்தும், கூலி படத்தில் நடிக்க வந்த அமீர்கானின் அர்ப்பணிப்பையும் நடிப்பையும் பாராட்டி, தான் அவரது ரசிகன் என்றும் தெரிவித்தார்.
சுருதி ஹாசன் தன்னுடன் நடிக்கும்போது, தன் அப்பாவுடன் நடிக்கும்போது இருந்ததை விட அதிக உற்சாகமாக இருந்ததாகக் கூறினார். ஏனென்றால், இங்கு அழுத்தம் இல்லை என்று சுருதி சொன்னதாக ரஜினி கூறினார்.
"நான் 1950 மாடல்... என்னைப் பார்த்து பண்ணுங்க" என்று நடன இயக்குனர் சாண்டியிடம், தான் லட்சக்கணக்கான கிலோமீட்டர் ஓடிய 1950 மாடல் கார் என்றும், தன்னை மெதுவாகவும் பார்த்துப் பத்திரமாகவும் கையாள வேண்டும் என்றும் நகைச்சுவையாகக் கூறினார்.
Superstar Rajinikanth Speech at Coolie Audio Launch
பிற நட்சத்திரங்களின் அன்பான பேச்சுக்கள்
மேடையில் பேசிய மற்ற கலைஞர்களும் ரஜினிகாந்த் மற்றும் படம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்:
சுருதி ஹாசன் தனது கதாபாத்திரமான 'ப்ரீத்தி'யை "வாழ்க்கையில் மறக்க முடியாதது" என்றும், "வாழ்நாள் முழுவதும் ஒரு மகத்தான பாத்திரம்" என்றும் வர்ணித்தார். குறிப்பாக, ரஜினிகாந்த் சார் மேடைக்கு வந்தபோது எழுந்த 'அன்பின் கர்ஜனை'க்கு நன்றி தெரிவித்தார்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், கூலி ஒரு "புத்திசாலித்தனமான படம்" என்று குறிப்பிட்டு, "10 கப், 10 ஃபயர்!" என படத்திற்கு விமர்சனம் கொடுத்து, இது நிச்சயம் மெகா ஹிட் ஆகும் என்று கூறினார்.
கூலி படத்தின் வில்லன் நாகார்ஜுனா அக்கெனினி, "ஒரு கூலி நூறு பாட்ஷாக்களுக்கு சமம்" என்றும், ரஜினிதான் உண்மையான சூப்பர்ஸ்டார் என்றும் பாராட்டினார்.
சத்யராஜ், 73 வயதிலும் ரஜினியின் ஸ்டைல் குறையாததை வியந்து, "ஒரு மனிதன் நடக்கும்போதும், பேசும்போதும், பார்க்கும்போதும் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால், ரஜினி சார் தூங்கும்போதும் ஸ்டைலாக இருப்பார், அது எப்படி?" என்று ஆச்சரியத்துடன் பேசினார்.
அமீர்கான், கதை கேட்காமலேயே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். ரஜினியின் சிரிப்பு, கண்கள், மற்றும் அவரது குணங்கள் தனக்கு பிடிக்கும் என்றும், சம்பளம் அல்லது கால்ஷீட் பற்றி கேட்காமல், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று மட்டுமே கேட்டதாகவும் கூறினார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியுடன் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியது தனது வாழ்க்கையை மாற்றிய அனுபவம் என்றும், கூலி திரைப்படம் ரஜினியின் 50 வருட திரையுலக பயணத்தை கொண்டாடும் மாதத்தில் வெளியாவது பெருமை என்றும் கூறினார். மேலும், நடிகர் சௌபின் பஷீர் இந்த படத்திற்கு பிறகு பேசப்படுவார் என்றும் சுருதி ஹாசன், உபந்திரா, நாகார்ஜுனா, அமீர்கான் ஆகியோரின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்தார்.