பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா அட்டகாசமாக ஆரவாரத்துடன் தமிழகம் முழுதும் இன்று வெளியிடப்பட்டது.
சத்யம் திரையரங்கில் நடைபெற்ற எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டாரின் வருகைக்காக காத்திருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. தலைவர் பேசிய பேச்சின் முழு விபரத்தை நீங்கள் எப்படியும் தொலைகாட்சியில் பார்க்கப் போகிறீர்கள் என்றாலும் அங்கு இருந்த சூழலை பிரதிபலிப்பதே நமது நோக்கம்.
சனிக்கிழமை - விநாயகர் சதுர்த்தி அன்று காலை 9.30 மணிக்கு ஒவ்வொரு வி.ஐ.பி.க்களாக சத்யம் வளாகத்துக்கு வர ஆரம்பிக்க, பரபரப்பு அதிகரித்துகொண்டே சென்றது. ஒரு கணத்தில் MAIN ENTRANCE அருகே யாரும் நிற்க முடியவில்லை. “இன்விடேஷன் இல்லே ட்ரெயிலர் ரிலீஸ் டிக்கட் ரெண்டுல ஏதாவது ஒன்னு இருக்கா? இருந்தா உள்ளே போங்க, இல்லே வெளியே போங்க” என்று செக்யூரிட்டிக்கள் மற்றும் போலீசார் விரட்டிக்கொண்டிருன்தனர். தலைவர் வரும்போது எழும் ஆர்பரிப்பை பார்க்க நாம் ஆவலோடு இருந்தபடியால் நம்மிடம் PASS இருந்தும் உள்ளே செல்லாது, சும்மா அங்கும் இங்கும் நடந்தபடி போக்கு காட்டிக்கொண்டிருந்தோம்.
தலைவர் என்ன கெட்டப்பில் வருவார்? வேட்டி சட்டையா, பேன்ட் சாரதா? பைஜாமா குர்தாவா? என்ன அணிந்து வருவார் என்று சஸ்பென்ஸ் ஓடிக்கொண்டிருந்தது.
யாருக்கும் சொல்லிக்கொள்ளாது அங்கு வந்திருந்த நம் நண்பர்கள் சிலரை காண நேர்ந்தது சுவாரஸ்யம். அவர்கள் உள்ளே நுழைந்த விதம் அதை விட சுவாரஸ்யம்.
சரியாக மணி 10.00 இருக்கும் சத்யம் வளாகமே திமிலோகப்பட்டது. பட்டாசுகள் வெடிக்க, கெட்டி மேளம் கணக்காக செண்டை மேளங்கள் அதிர்ந்தன. அனைவர் மத்தியிலும் ஒரு வித பரபரப்பு தொற்றிகொண்டது. செக்யூரிட்டிக்கள் மற்றும் போலீசார் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். புரிந்துவிட்டது. கருப்பு மின்னல் வந்துவிட்டது என்று.
நாம் உள்ளே சென்று, கீழ் தளத்தில் தலைவரை பார்ப்பதற்கு வசதியாக ரெட் கார்பெட்டின் ஓரமாக நின்றுகொண்டோம். நம்மை அப்புறப்படுத்த முயன்ற செக்யூரிட்டிக்கள் மற்றும் காவலர்களிடம் “மன்னன்” பாணியில், “தலைவா… தலைவா….” என்று கெஞ்சி தப்பித்தோம். (தலைவருக்காகத் நாம எந்த அளவு வேணும்னாலும் இறங்கி வருவோம்ல…!)
தலைவர் வந்துவிட்டாலும் சுற்றிருந்த கூட்டத்தை கிழித்து அவர் உள்ள நுழைய ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. அந்த பகல் பொழுதிலும் கேமிராக்களின் பிளாஷ் மழையில் மிதந்தது கீழ் வாயில். (அது ஒரு கண்கொள்ளா காட்சி!) சத்யம் பணியாளர்கள் மொத்த பேரும் அங்கு தான் இருந்தனர். எத்தனையோ முறை அவர்கள் தலைவரை பார்த்திருந்த போதிலும் ஒவ்வொரு முறையும் அவரை பார்க்க அவர்கள் விரும்புகின்றனர் என்பது புரிந்தது. சத்யம் பணியாளர்களும் செக்யூரிட்டிக்களும் அந்த கணம் வி.ஐ.பி. ரேஞ்சுக்கு இருந்தனர். ஒரே மிதப்பு தான் போங்க.
தலைவர் சரியாக உள்ளே நுழைய, “சூப்பர் ஸ்டார் வாழ்க” என்று தொண்டை கிழிய கத்தினோம். அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் வாழ்க என்ற கோஷங்களால் கிரவுண்ட் ஃபுளோர் அதிர்ந்தது. கேமிராக்களின் பிளாஷ் மழையில் நனைந்தபடி சூப்பர் ஸ்டார் உள்ள நுழைய ஏற்கனவே கீழ வந்து அமர்ந்திருந்தவர்கள் மற்றும் பால்கனியில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று STANDING OVATION கொடுத்தனர்.
நாம் பால்கனியில் முன் வரிசையில் அமர்ந்துகொண்டு அடிக்கடி கீழே தலைவரை எட்டி பார்த்துகொண்டே இருந்தோம். உட்காருங்க… உட்காருங்க… என்று நம்மை கேட்டுகொண்டேயிருன்தனர் பணியாளர்கள். (எங்கே விட்டா கீழே குதிச்சிடுவேனோன்னு அவங்களுக்கு பயம். )
எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் ஹை-லைட்டே சூப்பர் ஸ்டாரின் உரை தான். மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் கருணாஸ் அவரை பேச அழைத்தவுடன், எழுந்த கரவொலி அடங்க ஐந்து நிமிடங்கள் பிடித்தது. உடனடியாக பேச்சை அவரால் துவக்க முடியவில்லை.
எம்.டி.சார். கலாநிதி மாறன் அவர்களே, இயக்குனர் ஷங்கர் அவர்களே என்று ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டு அழைத்த சூப்பர் ஸ்டார், கடைசியாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நண்பர்களே என்று கூறிவிட்டு இறுதியில், “என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களே” என்று கூறியதும் எழுந்த கைதட்டல்கால அரங்கமே ஒரு கணம் அதிர்ந்தது.
மிகவும் காஷுவலாக பேசிய சூப்பர் ஸ்டாரின் பேச்சு வெளிப்படையாக அமைந்தது.
“எல்லா புகழும் இறைவனுக்கே. இந்த ட்ரெயிலரை மலேசியாவில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவிலேயே திரையிட இருந்தோம். ‘ரிலீசுக்கு இன்னும் நாள் இருக்கிறது, பின்னர் வெளியிடலாமே’ என்று ஷங்கர் சொன்னார். கலாநிதி மாறன் அதற்கு சம்மதித்தார். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு திறம்பட செய்து வருகிறார்.
ஷங்கரின் பெரிய கனவை நனவாக்கிஇருக்கிறார் கலாநிதி மாறன். அவர் இல்லாவிட்டால் படம் இந்த அளவுக்கு வந்திருக்காது. ‘படத்துக்கு 3 செட் போட வேண்டும். அதற்கு சென்னையில் வசதி இல்லை. ஐதராபாதில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டிக்குதான் போக வேண்டும்’ என்று சொன்னோம். ‘அப்படியா, உங்களுக்கு எவ்வளவு பெரிய ஃப்ளோர் வேண்டும்?’ என கலாநிதி கேட்டார். சொன்னோம். ஆறே மாதத்தில் பெருங்குடியில் சிறப்பாக மூன்று ஏசி ஃப்ளோர்களை உருவாக்கி கொடுத்தார்.
இரண்டு வருஷம் முன்பு இந்த படம் பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘தென்னிந்தியாவில் பட புரமோஷனை நான் பார்த்துக் கொள்கிறேன். வட இந்தியாவில் மட்டும் மீடியாவுக்கு நீங்க பேட்டி கொடுத்தால் உதவியாக இருக்கும்’ என்று கலாநிதி மாறன் சொன்னார். ‘என் மேல் நம்பிக்கை வைத்து நீங்கள் இவ்வளவு பெரிய படத்தை தயாரிக்கிறீர்கள். கண்டிப்பாக அதை செய்வேன்’ என்று சொன்னேன்.
இப்போது படம் முடிந்துவிட்டது. எந்திரன் சம்பந்தமாக பேட்டி வேண்டும் என்று எல்லா மீடியாவில் இருந்தும் கேட்கிறார்கள். ‘ஒரே படத்தை பற்றி திரும்பத் திரும்ப நான் என்ன பேட்டி கொடுக்க?’ என்று கலாநிதி மாறனிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘நீங¢கள் எதுவும் செய்ய வேண்டாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசுங்கள். மற்ற விழாக்களுக்கு சும்மா வந்தால் போதும். ரெட் கார்பெட் எப்போதும் உங்களுக்காக விரிக்கப்பட்டிருக்கும்’ என்று பதில் சொன்னார்.
படம் பற்றி முதலில் பேச்சு வந்தபோது ‘நான் பஸ்சில் டிக்கெட் கொடுத்தவன். எனக்கு ஆட்டோ டிரைவர், ரவுடி கேரக்டர் அந்த மாதிரிதான் பொருத்தமாக இருக்கும். விஞ்ஞானி கேரக்டருக்கு நான் எப்படி பொருந்துவேன்?’ என்று ஷங்கரிடம் கேட்டேன். செட்டுக்கு வர சொன்னார். போனேன். அப்புறம் அந்த கேரக்டருடன் ஒன்றிவிட்டேன். ‘அடுத்தது ரோபோவாக நடிக்க வேண்டும்’ என்றார். எந்திரமாக எப்படி நடிப்பது என்றேன். அவரே ஹோம்ஒர்க் செய்து, என்னை நடிக்க வைத்தார். இதில் நான் நடிக்கவில்லை. எல்லாமே ஷங்கர்தான்.
வைரமுத்து பேசும்போது, ‘நூறடி தாண்டிவிட்டார் ரஜினி. அடுத்தது என்ன?’ என்று கேட்டார். அடுத்த படம் பற்றி நான் சிந்திப்பது என் வேலையில்லை. திறமையான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிந்தித்து எனக்கு தரும் வேலையை செய்வேன்.
என் எளிமை பற்றி பெருமையாக பேசினார்கள். சிறு உயரத்திலிருந்து விழுந்தால் அடிபடாது. ஆனால் நீங்கள் என்னை பெரிய உயரத்தில் அமர வைத்துவிட்டீர்கள். இங்கிருந்து விழுந்தாள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுவேன். அதனால் எளிமையாக இருந்தாகணும். வேறு வழியில்லை.
ஸ்டைலாக, இளமையாக இருக்கிறேன் என்றும் சொன்னார்கள். கொஞ்சம் உடல்பயிற்சி, கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் சாப்பாடு, கொஞ்சம் பணம் சம்பாதிப்பது என்று இருந்தால் இளமையாக இருக்கலாம்.
இந்த நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். தமிழர்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமா படமாத்தான் நிச்சயம் அடுத்து செய்வேன். (கொஞ்சம் அழுத்தமாக பேசுகிறார் இந்த இடத்தில்). ‘எந்திரன்’ அத்தகைய படம்தான்.” இவ்வாறு கூறினார் ரஜினி.
சூப்பர் ஸ்டார் பேசி முடித்ததும், பால்கனியில் இருந்த ரசிகர்கள் திபு திபுவென கீழே ஓடி சென்றனர். சூப்பர் ஸ்டார் கிளம்பும்போது அவரை பார்க்கவும் வழியனுப்பவும் தான் இந்த பரபரப்பு.
அதில் சிலர் சூப்பர் ஸ்டாரின் காரை மறித்து அவரை பார்த்து விஷ் செய்ய, அந்த பரபரப்பிலும் அவர்களுக்கு புன்முறுவல் செய்தபடி பதில் வணக்கம் செய்ய தவறவில்லை சூப்பர் ஸ்டார்.
|