Neutral statement from
Distributor Association
23 Aug 2008
திரைப் பிரமுகர்கள் அத்தனை பேருக்குமே
மனசாட்சி செத்துவிட்டதா... ரஜினிக்கு எதிராக இத்தனை
அநியாயங்கள் நடந்தும் அவரால் பயன் பெற்ற, கோடீஸ்வரர்களான,
உதவிகள் பெற்ற நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும்
வாய் மூடி ஊமைகளாய்க் கிடக்கின்றஎனவே எனப் பொருமிக்
கொண்டிருந்தனர் ரஜினியின் ரசிகர்கள்.
லைட் மேன்களின் பிரச்சினையில் ஒரு வாரமாக பஞ்சாயத்து
பண்ணிக்கொண்டிருக்கும் ராம நாராயணன் அண்ட் கோவுக்கு,
குசேலனுக்கு எதிரான அநியாயங்களைக் கண்டு கொள்ள நேரமில்லை.
நண்பர்கள் சொல்வதுபோல குஷ்புவுக்கு கொசு கடித்தால்கூட
ஓடோடிப்போய் கலைஞரிடம் சொல்லி அதற்கு மருந்து போடும்
புண்ணிய வேலையைச் செய்யும் நடிகர் சங்கத் தலைவர்
சரத்குமாருக்கும் துணைச் செயலாளர் சத்யராஜூக்கும் இந்தப்
பிரச்சினை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
என்ன செய்வது... இவர்கள் பெவிக்காலைப் பூசிக்கொண்டு
உருண்டால்கூட ஒன்றும் ஒட்டமாடேங்கிறதே... இன்னும் எத்தனை
ஆண்டுகள் ஆனாலும் ரஜினி மட்டும்தான் சூப்பர் ஸ்டார்.
இவர்கள் அனைவரும் சும்மா ஸ்டார்கள். அந்த வயிற்றெரிச்சல்
அவர்களுக்கு.
இனி சினிமாக்காரர்கள் எதற்காகவும் ரஜினியிடம் வரமாட்டார்களா...
அவர்களுக்கு ரஜினியின் தேவை முடிந்துவிட்டதா... என்று
எல்லோரும் ஒருவித கடுப்போடு இருந்த நேரத்தில், ஆதரவுக்
குரல் கொடுத்துள்ளன, விநியோகஸ்தர்கள் சங்கங்கள்.
தமிழ் சினிமா விநியோகத்தைப் பொருத்தவரை இந்த நால்வர்
வைத்ததுதான் சட்டம். அதனால் அவர்களின் குரலுக்கு கூடுதல்
முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது...
விநியோகஸ்தர்களுக்குத் தெரியும் ரஜினி படங்களில்
எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்பது.
அதிலும் ரோபோவின் நாயகனல்லவா ரஜினி... அதனால் இப்போதே ஒரு
பாதுகாப்புக்கு அறிக்கை விட்டு வைக்கிறார்கள். எப்படி
இருந்தாலும் உடுக்கை இழந்த நேரத்தில் நீண்டிருக்கும் உதவிக்
கரங்கள் இவை. பாராட்டுவோம்.
இனி அறிக்கை விவரம்:
ரஜினியை மிரட்டுவதா? – விநியோகஸ்தர்கள் கண்டனம்
வியாபாரத்தில் லாப நஷ்டம் வருவது சகஜம். இதில்
சம்பந்தப்பட்ட பிரமிட் சாய்மிரா நிறுவனத்தை விட்டுவிட்டு,
ரோபோவின் நாயகன், சூப்பர்ஸ்டார் ரஜினியை மிரட்டிப்
பார்ப்பது கண்டனத்துக்குரியது என விநியோகஸ்தர்கள் சங்கம்
அறிக்கை வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர்
கலைப்புலி ஜி.சேகரன், கோவை மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள்
சங்க தலைவர் ஜி.ஆர்.சண்முகம், கோவை மாவட்ட திரையரங்க
உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் எம்.சுப்பிரமணியம்,
மதுரை மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கம் சார்பில்
ஜி.என்.அன்புசெழியன் ஆகியோர் இணைந்து நேற்று மாலை குசேலன்
படம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது:
குசேலன் படப் பிரச்சினை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்கள்
தொடர்ந்து கொடுத்து வரும் அறிக்கைகள், வியாபார அடிப்படை
உரிமைகளை தகர்க்கும் வண்ணம் அமைவது கண்டு அதிர்ச்சி
அடைகிறோம்.
காலம் காலமாக எத்தனையோ பெரிய படங்கள் எதிர்பாராத வீழ்ச்சி
அடைவதும், சிறிய பெரிய படங்கள் மாபெரும் வெற்றி அடைவதும்
வழக்கமான ஒன்றுதான். ஒரு படத்தின் வெற்றி-தோல்விகள் அவரவர்
இட்டுக்கொண்ட ஒப்பந்தப்படி அமைவதாகும்.
எதிர்பாராத லாபம் அடையும்போது மகிழ்வதும், வீழ்ச்சி
அடையும்போது வருத்தம் அடைவதும் இயற்கையே.
குசேலன் படத்தை கவிதாலயம் தயாரிக்க, உலகம் முழுவதும்
வெளியிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றது.
அவர்களிடம் இருந்து வினியோகஸ்தர்கள் சில பகுதிகளுக்கு உரிமை
பெற்று திரையிட்டனர். பெரும் பகுதிகளை சாய்மீரா நிறுவனமே
திரையிட்டது. அப்படி உரிமை பெற்றவர்களிடம் இருந்து
திரையரங்க உரிமையாளர்கள் பெருத்த லாபம் பெறலாம் என்று பல
வழிகளில் திரையிட்டுள்ளனர்.
கவுரவ வேடம்
இன்னும் ஒரு சில தியேட்டர் அதிபர்கள் மூன்றாவது நபர்களுக்கு
குறிப்பிட்ட தொகைக்கு விற்று விட்டனர். ஆரம்பம் முதல் தான்
இதில் கவுரவ வேடம் ஏற்றுள்ளதாக ரஜினிகாந்த் கூறியது
அனைவருக்கும் தெரியும்.
இது, ஒரு மலையாள படத்தின் மறுபதிப்பு என்பதும் அனைவருக்கும்
தெரியும். இந்த படத்துக்கு இந்த விலை மிக அதிகம் என்று
தெரிந்து பல பேர் அமைதி காக்க, ஒரு சிலர் மட்டும் இந்த
படத்தை லாபம் என்ற நோக்கை மட்டும் வைத்து போட்டா போட்டி
நடத்தி வாங்கியதும் அனைவருக்கும் தெரியும்.
இன்று இழப்பு என்றவுடன் போர்க்கொடி உயர்த்தி மிரட்டுவது ஏன்?
பல படங்களில் அதிகப்படியாக லாபம் பெற்றபோது, அதன்
வினியோகஸ்தருக்கோ அல்லது தயாரிப்பாளருக்கோ திருப்பிக்
கொடுத்தது உண்டா?
படம் பெற்றது சாய்மீரா நிறுவனத்திடம் இருந்து. அதை விடுத்து
ஒப்பந்தமிடாத கவிதாலயத்துக்கும், இதில் எந்த
சம்பந்தமில்லாத ரோபோ படம் தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனத்தின்
மீதும் பாய்வது ஏன்?
ரோபோ படத்தின் கதாநாயகனான ரஜினிகாந்தை மிரட்டிப் பார்க்கவா?
லாபமும், நஷ்டமும் வியாபார ஒப்பந்தத்தின் வழி நடக்க
வேண்டிய ஒன்று. தண்டவாளத்தில் ஓட வேண்டிய ரெயில்
தடம்புரண்டு ஊருக்குள் பாய்ந்தால், அதன் முடிவு எப்படி
இருக்கும்? வேண்டாம் முரண்பட்ட விவாதங்கள், இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்ற பலம்
வாய்ந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கின்றன.
|