 அக்டோபர் எப்போது வரும் , தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே இந்த நேரத்தில் உங்களுடன் சில வார்த்தைகள்.....
தலைவர் வர வேண்டும் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று பெரும்பான்மையான ரசிகர்கள் எதிர்பார்ப்பது உண்மைதான். அப்படி அரசியலுக்கும் வரும் பட்சத்தில் பொறுப்புகளை எதிர் நோக்கியிருக்கும் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள். இதுவரை நிறைய நற்பணிகள் செய்திருப்பீர்கள். இனிமேலும் செய்யப் போகிறீர்கள். மிகவும் நல்ல விஷயம்.
ஒரே ஒரு விநாடி மட்டும் சிந்திக்க இடம் கொடுங்கள். தலைவர் மட்டுமே மாற்றங்களை கொண்டு வர முடியும் என்றால் , எப்போதோ முடிவெடுத்திப்பார். நிறைய சாதித்தும் காட்டியிருப்பார்.
அவருடைய எண்ணத்திற்கு ஈடு செய்யும் அளவிற்கு பொறுமையுடனும், நாட்டு நலன் மீது அக்கறையும் கொண்ட 1000 பேராவது துணையிருக்க வேண்டும். தனியொரு மனிதனால் நிறைய சாதிக்க முடியாது என்பதை உங்களுக்கு சொல்லித் தரவேண்டியதில்லை.
தலைவருக்காக உயிரையும் கொடுக்க தயார் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கலாம். நிச்சயம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை மட்டும் வைத்துக்கொண்டு தலைவரால் எந்தவொரு பொதுநலன் சார்ந்த முடிவும் எடுக்க முடியாது.
அவருடன் துணை நிற்க வேண்டுமானால் நமக்கு முதல் தேவை, சமுக அக்கறை, சமுக கண்ணோட்டம், தொலை நோக்கு பார்வை, சமுகத்தில் நமது பங்கு, புதிய வழிமுறைகள், காலத்துக்கு ஏற்ற கொள்கைள் மற்றும் தற்போதைய அரசியலை கடந்த புதிய சிந்தனைகள்.
நம்மை நாமே சுய சோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. நம்மில் எத்தனை பேர் வருமான வரி செலுத்துகிறோம். மாத சம்பள வேலையில் இருப்பவர்கள் கட்டாய வரி பிடித்தம் செய்யப்படுகிறார்கள். அவர்களை விட்டுவிடலாம்.
சுய வேலை / தொழில் செய்பவர்களில், நம்மில் எத்தனை பேர் வருமான வரி கட்டுகிறோம். நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. பெரும்பாலனவர்கள் வருமான வரி செலுத்துவதாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி. நாம் அதிகமாக உழைப்பவர்கள், நேர்மையாக நடப்பவர்கள் என்று பெருமிதம் கொள்ளலாம்.
இத்தனைக்கும் கருப்பு பணத்தை மையமாக கொண்டு சிவாஜி என்கிற திரைப்படத்தையும் நமக்காக கொடுத்தவர் நமது தலைவர். நம்மில் வருமான வரி செலுத்துபவர்கள் இல்லை என்றால், நாம் உழைக்கவில்லை அல்லது சரியாக பொருளீட்ட முடியவில்லை அல்லது பொருளீட்டினாலும் வரி கட்டுமளவுக்கு நேர்மையானவர்கள் இல்லை என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது. அப்படியென்றால், நம்மால் இந்த சமுகத்திற்கு என்ன செய்ய முடியும்.
எல்லா ரசிகர்களையும் நான் குறை கூறவில்லை. உழைப்பால் முன்னேறி இன்றும் தலைவரே பெருமைப்படும்ளவுக்கு வளர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களே அதற்கு சாட்சி. ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பொறுப்புகளையும், எதிர்பார்ப்புகளை தலைவர் மீது திணித்துவிட்டு சுதந்திரமாக எந்தவொரு பொறுப்பும் இல்லாமல் வலம் வரும் ரசிகர்களிடமே குறை காண்கிறேன்.
தலைவர், வேலையை பார், வீட்டை பார் என்று கடந்த இருபத்து இரண்டு வருஷங்களாக ொல்லிக் கொண்டிருக்கிறார். ஊருக்கு மட்டும் உபதேசம் சொல்லாமல் அதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவர் அவர். உண்மையான ரஜினி ரசிகன் தலைவர் சொன்னதை தன்னுடைய வாழ்க்கையிலும் கடைப்பிடித்தவனாக இருப்பான். அதில் எந்த சந்தேகமுமில்லை.
வருமான வரிமட்டும்தர்ன் பிரச்னையா... அதை மட்டும் கட்டிவிட்டால் பொறுப்பானவர்கள் ஆகிவிடமுடியுமா என்று நீங்கள் கேட்கலாம். வருமான வரி செலுத்துவதனால் மட்டும் சமுக பார்வை உள்ளவர்கள் ஆக முடியாது தான். ஆனால் இன்றைய சூழலில் , இதைக் கூட செய்ய முடியாதவர்களால் சமுதாயத்திற்கு என்ன செய்து விட முடியும்?.
சமுதாயத்திற்கு எதுவும் செய்ய முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களால், எப்படி தலைவருக்கு துணையாக இருக்க முடியும். தமிழ்நாட்டு அரசியலிலும் சமுதாயத்திலும் பெரிய மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று தலைவரிடம் அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்கிறோம். அதற்கு நாம் எந்தளவுக்கு உறுதுணையாக இருக்கப்போகிறோம்?
தலைவர், அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தாலும் கூட நிதானமாகவே செயல்படுவார். இப்போதே அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை. அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்பும் ரஜினி மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் தங்களை சுய சோதனை செய்து கொள்ளுங்கள். இதுதான் கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நம்மை மாற்றிக் கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தலைவரும் துணையிருப்பார். காலமும் கை கொடுக்கும்.
அன்புடன் தினகர்.
|