Sep 21, 2024 : டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து பான்-இந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதியான நேற்று, வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
வேட்டையன் பட விழா:
ரஜினிகாந்தின் 170வது படமாக, வேட்டையன் திரைப்படம் உருவாகியிருப்பதால், இதன் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. வழக்கமாக, ரஜினிகாந்தின் பட விழா என்றாலே அது ரசிகர்களால் மாபெரும் கொண்டாட்டமாக பார்க்கப்படும். வேட்டையன் பட விழாவும் அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்தது. நேற்று நடந்த விழாவில் ரஜினிகாந்த், டிஜேஞானவேல், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரானா டகுபதி, அனிருத் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், வேட்டையன் படத்தின் டீசரும் வெளியிடப்பட்டது. படத்தில் நடித்த முக்கிய கதாப்பாத்திரங்களை கடந்த சில நாட்களாக அறிமுகம் செய்து வைத்த லைகா நிறுவனம் ரஜினியின் கதாப்பாத்திரம் குறித்த விவரத்தை மட்டும் வெளியிடவில்லை. டீசரிலும், ரஜினியின் கேரக்டர் குறித்த விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், வேட்டையன் படவிழா மேடையில் படக்குழுவினர் அனைவரும் பேசினர். ஆனால், அனைவரும் காத்திருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் பேச்சுக்காகத்தான்.
ரஜினியின் பேச்சு…
நடிகர் ரஜினிகாந்த், வழக்கமாக தனது பட விழாக்களில் ஏதேனும் குட்டி கதை கூறுவார், ரசிகர்களை மோட்டிவேட் செய்யும் வகையில் பல கருத்துகளை பேசுவார். தன்னுடன் நடித்தவர்கள் மற்றும் அவர்களுடன் ஏற்பட்ட சுவாரஸ்ய அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் கூறிய “காக்கா-கழுகு” கதை வேறு ஒரு பிரபல நடிகரை அட்டாக் செய்வது போல இருப்பதாக கூறப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அந்த பிரபல நடிகரும் தனது பட விழாவில் பதிலடி கொடுத்தால் இது இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையே மோதலாக வெடித்தது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த், லால் சலாம் பட விழாவில் விளக்கம் கொடுத்தார். இந்த முறை அவர் வேட்டையன் பட விழாவில் பேசியது என்ன? இங்கு காண்போம்.
கழுதை – டோபி கதை
மேடையில் பேசிய ரஜினி, ” இயக்குநர் ஞானவேல் என்னிடம் புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடித்த மாதிரி நீங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று இயக்குநர் ஞானவேல் என்னிடம் கேட்டார். அப்போது எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. நான் அவரிடம் இமாச்சல பிரதேசத்தில் நடந்த ஓர் உண்மை கதையைச் சொன்னேன்.
அங்கே ஒரு ஊரில் ஒரு டோபி இருந்தார். அங்குள்ள ஒரு குளத்தினை கடந்து செல்ல ஒரு கழுதையை பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும் சமயத்தில் ஒரு நாள் அந்தக் கழுதை காணாமல் போக அந்த அதிர்ச்சியில் அந்த டோபி எல்லாத்தையும் மறந்துவிடுகிறார். அப்போது அனைவரும் சேர்ந்து அவருக்குக் காவி உடை உடுத்தி அவரை சாமியாராக மாற்றி வழிப்படுகிறார்கள்.
இந்நிலையில் ஒரு நாள் காணாமல் போன கழுதை திரும்பி வருகிறது. மீண்டும் அவருக்கு நினைவு திரும்புகிறது. அப்போது அனைவரும் அந்த டோபியிடம் இப்படியே நாம் இருக்கலாம் என்கிறார்கள். இந்த வாழ்க்கை நன்றாக உள்ளது என்றார்கள்.
அதேபோல் தான் அந்தப் படங்களின் நீக்க பட்ட காட்சிகளை நீங்கள் பார்க்கவில்லை. ஒரு படத்தில் எஸ்.பி அவர்கள் எனக்கு முதல் நாள் 14 பக்கங்கள் கொண்ட வசனம் கொடுத்தவுடன் நான் பேசமாட்டேன் என்றவாறு சென்றுவிட்டேன். அனைவரும் எவ்வளவு திமிர் என்றார்கள்.
போனால் போகட்டும் என்றார்கள். மீண்டும் எஸ்.பி அவர்கள் என்னை அழைத்து உன்னால முடிந்ததை செய் என்றார். பேக் ஷாட், டாப் ஆங்கிள் வைத்து எடுத்துக் கொள்கிறேன் என்றார். கமல் அவர்களுக்கு வேறு கதாநாயகியுடன் நடிக்க வைத்தார்கள்.
அப்போது எனக்கு நாடக நடிகர்களோட நடிக்க வைத்தார்கள். அவ்வாறு வெள்ளை தாடி வைத்து ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் நடித்தேன். தற்போது நல்ல பாதையில் இன்றுவரை போய்கொண்டு இருக்கிறது. இந்தப் படம் ஞானவேலுக்காக ஹிட் ஆகணும். அவர் நம்ம சினிமாவுக்குத் தேவை.” இவ்வாறு ரஜினி பேசினார்.
சகுனிகள் குறித்த பேச்சு..
நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் பட விழாவில் மொத்தம் 52 நிமிடம் பேசியதாக கூறப்படுகிறது. அதில் அவர் சகுனிகள் குறித்து பேசியிருக்கிறார்.
“சகுனிகள் இருக்கிற இந்த சமுதாயத்தில் நல்லவனா இருந்தா பிழைக்க முடியாதுங்க. கொஞ்சம்ன் சாணக்கியத்தனமும், சாமர்த்தியமும் வேணும்” என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட விஜய்யின் ரசிகர்கள், வழக்கம் போல “நம்ம தலைவரைத்தான் சொல்கிறாராே” என்று யோசிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
ரஜினிகாந்திற்கு அடையாளமே அவரது ஸ்டைல்தான் என்றாலும், ஒரு சில வசனங்கள் அவரது ரசிகர்களின் மனங்களில் ஆழ பதிந்திருக்கும். அப்படிப்பட்ட டைலாக்குகளில் ஒன்று “கெட்டப்பய சார் இந்த காளி..” இந்த டைலாக்கை அவர் நேற்று வேட்டையன் பட விழாவில் பேசினாராம்.
அனிருத் குறித்து பேச்சு..
“அனிருத் எனக்கு குழந்தை மாதிரி..அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தால் என்னுடையை 10 அடி போட்டோவை மாட்டி வைத்திருப்பார். இவ்வளவு அன்பை நான் எப்படி திரும்ப தர போகிறேன் என்று தெரியவில்லை” என்று பேசியிருக்கிறார். “அனிருத்தை மன்னன் படத்தின் ஷூட்டிங்கின் போது அனிருத்தை முதன் முதலாக பார்த்தேன். அப்போது அவர் சிம்மாசனத்தில் அமர வைத்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டேன். இப்போது இசையின் சிம்மாசனத்தில் அவர் அமர்ந்து கொண்டிருக்கிறார்.
தளபதி படம் குறித்து..
நடிகர் ரஜினிகாந்த், தான் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார். “நீங்கள் தளபதி படத்தை மட்டும்தான் பார்த்தீர்கள். ஒரு காட்சியை படமாக்க எடுக்கப்பட்ட 15-20 டேக்குகள் குறித்து உங்களுக்கு தெரியாது” என்று கூறியிருக்கிறார்.
கடைசியில் பேசியது..
நடிகர் ரஜினிகாந்த், ஏதேனும் ஒரு கருத்தை கூறி தனது உரையை முடிப்பது வழக்கம். அந்த வகையில், “கெட்டவங்க கிட்டதான் நிறைய கத்துப்போம்” என்று கூறியிருக்கிறார்.
இயக்குநர் ஞானவேல் பேச்சு
முன்னதாகப் பேசிய இயக்குநர் ஞானவேல், ரஜினி படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு தமக்குக் கிடைக்க, ‘ஜெய்பீம்’ படம்தான் காரணம் என்றார்.
மேலும், அப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு அளித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
“தற்போது நான் இந்த இடத்தில் நின்றுகொண்டிருப்பதற்கு சூர்யாதான் முக்கிய காரணம். எல்லோருக்கும் ரஜினி படத்தில் ஒரு ஸ்டைல், குறிப்பிட்ட காட்சி பிடிக்கும்.
“அதன்படி, எனக்கு ‘படையப்பா’ படத்தில் வரும் ஊஞ்சல் காட்சி மிகவும் பிடித்தமானது. அதை மனதிற் கொண்டுதான் இந்தப் படத்துக்கான திரைக்கதையை எழுதினேன்,” என்றார் ஞானவேல்.
ரஜினிக்குத் தெரிந்த ரசிகர்களைவிட, தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அந்த ரசிகர்களில் தாமும் ஒருவர் என்றார்.
“அமிதாப் பச்சன் எப்போதெல்லாம் படப்பிடிப்புத் தளத்தில் இருக்கிறாரோ, அதற்கு முன்பாகவே நான் அங்கு இருக்க வேண்டும் என்பதுதான் ரஜினி எனக்கு கூறிய முதல் அறிவுரை. ஆனால் என்னால் அதைச் செய்ய முடியவில்லை.
“காரணம், அமிதாப் தனது கேரவேனுக்குள் செல்லவே மாட்டார். எப்போதும் ரஜினி வருவதற்கு முன்பே தாம் படப்பிடிப்புக்கு வந்துவிட வேண்டும் என்றுதான் அமிதாப் விரும்புவார்.
“இந்த இரு உச்ச நடிகர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும், ஒருவர் மற்றொருவர் மீது வைத்துள்ள மரியாதையும் வியக்க வைத்தது,” என்றார் ஞானவேல்.
விழாவில் பேசிய அனிருத், “நான் பல இசை வெளியீட்டு விழாக்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் தலைவர் ரஜினி ரசிகர்களின் விசில் சத்தத்தைப்போல் வேறெங்கும் கேட்டதில்லை,” என்றார்.
|