இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.
சென்னை கோடம்பாக்கத்தில் ‘இளையராஜா ஸ்டுடியோ’ என்ற பெயரில் புதிய ஸ்டுடியோவை இளையராஜா திறந்துள்ளார். இந்நிலையில், இளையராஜாவின் புதிய ஸ்டுடியோவுக்கு வந்த ரஜினிகாந்த், அங்கே நடந்த இசையமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.
முன்னதாக, இளையராஜாவின் வீட்டுக்கு ரஜினிகாந்த் நேற்று முன்தினம் வந்துள்ளார். பின்னர் இருவரும் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளனர். அங்குநடைபெற்ற இசைப்பணிகளை கவனித்த ரஜினி, ‘கோயிலுக்குள் வந்தது போன்ற உணர்வு தனக்கு ஏற்பட்டதாக’ இளையராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, நேற்று காலை, ஸ்டுடியோவுக்கு மீண்டும் வந்த ரஜினி, அங்கு நடக்கும் இசைப் பணிகளை நீண்ட நேரம் அமர்ந்து பார்த்துள்ளார். அதன் வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்த ரஜினிகாந்த், இளைய ராஜாவின் ஸ்டுடியோவுக்கு தற்போது வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
|