சாதனை எவ்வளவு செய்தாலும் அதற்கான ஆதாரம் இல்லையென்றால் நாளடைவில் சாதனைகள் மறக்கப்பட்டு, இருட்டடிப்பு செய்யப்பட்டு விடும். பின்னர் என்ன கதறினாலும் கேட்பார் யாரும் இருக்க மாட்டார்கள்.
தலைவரின் சாதனைகள் அளப்பரியது. தொடர்ச்சியான சாதனைகளால், அது குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான தலைவர் ரசிகர்களுக்கு இல்லாமல் போனது. தலைவரின் சாதனைகள் தெரியுமே தவிர, இது பற்றித் தெரியாதவர்களுக்கு ஆதாரப் பூர்வமாக விளக்க சான்றுகள் குறைவு.
இன்றைய காலத்தில் எதற்கும் ஆதாரம் தேவை என்பதால், சாதனை செய்து இருந்தாலும் சரியான ஆதாரங்கள் இல்லையென்றால் நிரூபிப்பது சிரமம். ஒன்றிரண்டு ரஜினி ரசிகர்கள் தகவல்களைச் சிறிய அளவில் வைத்துப் பகிர்ந்தாலும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
தற்போது நமது தளத்தில் தலைவர் சாதனைகளின் ஆதாரங்கள் வெளி வருவதைக் கவனித்து இருப்பீர்கள். இதற்கு முழுக் காரணம் நம் நண்பர் தீவிர தலைவர் ரசிகர் T.V. ராஜேஷ். இவர் வைத்து இருக்கும் ஆதாரங்களைப் பார்த்தால் தலை சுற்றுகிறது.
எப்படிப்பா! இது போலச் செய்தித்தாள்களைச் சேர்த்து வைத்து இருக்கிறார்?!! நாடி, நரம்பு, சதை, புத்தி அனைத்திலும் ரஜினி வெறி ஊறிப்போன ஒருவரால் மட்டுமே இது முடியும் . இவர் அனுப்பும் ஆதாரங்களைப் பார்க்கவே இரண்டு நாள் ஆகும் போல... அந்த அளவிற்கு வைத்து இருக்கிறார்.
பழைய தகவல்களைப் பார்த்தால் அட! இவ்வளவு விசயம் இருக்கா?! நமக்குத் தெரியாம போச்சே! என்று ஆச்சர்யமாக இருந்தது.
திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் கொடுத்த பேட்டி, கிடைத்த லாபத்தை வெளிப்படையாக விளம்பரம் செய்த விதம், தாறுமாறாகப் படம் ஓடிய நாட்கள் விளம்பரம்!! என்று கொட்டிக் கிடக்கிறது.
சரியாக ஓடாத தலைவர் படம் என்று நாமெல்லாம் நினைத்து இருக்கும் படங்களெல்லாம் செம்ம ஓட்டம் ஓடி இருக்கிறது. இதற்குக் கிடைத்த வசூலை புள்ளி விவரத்துடன் திரையரங்க உரிமையாளர்களே அவர்களது சொந்த செலவில் விளம்பரம் செய்து இருக்கிறார்கள்.
ரசிகர்கள் தலைவருக்குக் கொடுத்துள்ள விளம்பரங்களைப் பார்த்தால், மிரட்டலாக இருக்கிறது. ஒரு நடிகருக்கு இது போல எந்த ரசிகர்களும் இவ்வளவு விளம்பரங்கள் செய்தித்தாள்களில் கொடுத்து இருக்க முடியாது! என்ற அளவிற்கு வெறியர்களாக இருக்கிறார்கள்.
இத்தனை பேப்பர் கட்டிங்குகளையும் சேகரிக்க வேண்டும் என்றால், எவ்வளவு பொறுமை, ஆர்வம் வேண்டும்!! எப்படிப்பட்ட ரசிகனாக இருந்தால் இதையெல்லாம் செய்ய முடியும்...!! நானும் தலைவர் ரசிகன் என்று எளிதாகக் கூறி விடலாம் ஆனால், இவரெல்லாம் ரசிகன் என்பதையும் தாண்டி எங்கோ இருக்கிறார்.
ஒரு தலைவர் ரசிகராக நாமெல்லாம் நண்பர் T.V. ராஜேஷ்க்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம்.
T.V. ராஜேஷ்! தலைவர் ரசிகர்கள் சார்பாக உங்களுக்கு மிகப்பெரிய நன்றி. நன்றி என்ற சொல் நீங்கள் செய்து இருக்கும் பணிக்கு மிகச் சாதாரண வார்த்தை. தலைவரின் சாதனைகளைக் கூறும் போதெல்லாம் நிச்சயம் உங்களின் பெயரும் ரசிகர்களால் நினைவு கூறப்படும்.
ரசிகர்களின் அன்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
கிரி
http://www.giriblog.com/
|