 ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள லிங்காவுக்கு எதிரான அவதூறு செய்திகளை (விமர்சனங்கள் அல்ல) வெளியிட ஜெயாடிவி, சன் டிவி உள்ளிட்ட 105 அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கும், சிங்கார வேலன் உள்ளிட்ட 9 நபர்களுக்கும் பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லிங்கா படம் வெளியான நான்காவது நாளிலிருந்து அந்தப் படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக திட்டமிட்ட பிரச்சாரத்தை சிலர் மேற்கொண்டனர். அவர்களில் முதன்மையானவர் சிங்காரவேலன் என்பவர். படம் வெளியான முதல் வாரமே, தெரு முனையில் நின்றுகொண்டு படத்துக்கும் ரஜினிக்கும் எதிராக பேட்டிகள் கொடுக்க ஆரம்பித்தார் இவர். பெரும் தொகையைச் செலவழித்து பிரஸ் மீட் வைத்து இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இப்படிப் பிரச்சாரம் செய்தே படத்தைக் கொன்றுவிட்டதாக சிங்காரவேலன் உள்ளிட்டோர் மீது தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் குற்றம்சாட்டினார். இந்நிலையில் படத்துக்கு நஷ்ட ஈடு கோரி பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய்விட்டனர் லிங்கா விநியோகஸ்தர்கள். அத்தோடு, லிங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கிறார் என்று குற்றம்சாட்டப்பட்ட நடிகர் விஜய்யின் பிரியாணி விருந்திலும் பங்கேற்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து, அதை ஊடகங்களிலும் வெளியிட்டார் சிங்காரவேலன். இன்றைக்கு, லிங்கா மற்றும் ரஜினிக்கு எதிராக அரங்கேறிய அத்தனை நடவடிக்கைகளும் தனி மனிதரின் வேலையல்ல, திட்டமிடப்பட்ட கூட்டுச் சதி என்று பலரும் பேச, எழுத ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், சிங்காரவேலன் மற்றும் அவரைச் சார்ந்த 9 பேர், 100-க்கும் மேற்பட்ட பத்திரிகை, டிவி மற்றும் இணையதளங்கள், இனி லிங்கா படம் குறித்து எதிர்மறையாகப் பேசவோ, சிங்காரவேலன் போன்றோர் தரும் அவதூறுச் செய்திகளை வெளியிடவோ, படத்தின் நாயகன் ரஜினிக்கு எதிராக அவதூறு பரப்பவோ கூடாது என பெங்களூரு நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளார் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். ஜெயா டிவி, சன் டிவி போன்ற டிவிக்கள், டைம்ஸ் ஆப் இந்தியா, தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளும் இதில் அடங்கும்.
|