இப்படி சொல்லலாம் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இயக்குனர்கள் சங்க 40 வது ஆண்டு விழாவை : இதுவரை காணாதது… இனியும் காண இயலாதது. அப்படி என்ன நடந்தது இந்த விழாவில்? தொடர்ந்து படியுங்க…!
சூப்பர் ஸ்டார் பற்றிய செய்திகளையே சுவாசித்து வரும் எனக்கு இன்றைக்கு ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். எனக்கு மட்டுமல்ல, இன்றைக்கு நேரு உள் விளையாட்டரங்கில் இறுதியில் நடைபெற்ற கே.பி. - சூப்பர் ஸ்டார் நேர்காணல் நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பை பெற்ற எல்லோருக்கும்.
இயக்குனர்கள் சங்கம் துவங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சனிக்கிழமை நேரு உள்விளையாட்டரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்சிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை நேரில் காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது. சூப்பர் ஸ்டாரை பார்க்கலாமே… என்று விழாவுக்கு போய்விட்டேன்.
கலைநிகழ்ச்சிகளில் எந்திரன் பாடல்கள் இசைக்கப்பட்டு அதற்க்கு சமீரா ரெட்டி மற்றும் குழுவினர் அசத்தலாக நடனமாடினார். எந்திரன் பாடல்கள் இசைக்கப்படும் என்று அறிவிக்கிப்பட்டவுடன் ஆடிட்டோரியமே ஒரு கணம் அதிர்ந்தது.
முக்கிய நடிகர்கள் மேடையில் தோன்றி அவர்களுக்கு பிடித்த இயக்குனர்களை மேடைக்கு அழைத்து அவர்களுடன் அளவளாவுவது போல ஏற்பாடு செய்யப்பட்டது.
இறுதியில் இயக்குனர் சிகரம் கே.பி. தனது சீடர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேர்காணல் செய்வது போல நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கே.பி. நாம் சூப்பர் ஸ்டாரிடம் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்டு அசத்திவிட்டார். சூப்பர் ஸ்டாரும் பதிலுக்கு அசத்தலான பதில்களை கூறி அசத்திவிட்டார். (வகையா மாட்டினாருப்பா நம்மாளு!)
சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த கேள்வி பதில் தொகுப்பால், ஆடிட்டோரியமே அடிக்கடி கைதட்டல்களால் அதிர்ந்தது.
சாம்பிளுக்கு ஒரு கேள்வி:
கே.பி: நீ பஸ் கண்டகடராக இருக்கும்போது யாரையாவது காதலித்திருக்கிறாயா?
ரஜினி : ஆம். உண்டு.
என்ன மீதி கேள்வியை தேடுறீங்களா?
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… (ஹி..ஹி…!)
இந்த கேள்வி பதில் தொகுப்பு சட்டென்று ஆரமபித்து அப்படியே சொல்லக்கூடியதல்ல. காரணம், இந்த தொகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு, கே.பி. கூறிய விஷயங்கள் அத்துனையும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை. அப்போது நிலவிய சூழ்நிலை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. கை தட்டி தட்டி எனக்கு கையே வலி எடுத்திடுச்சு.)
இப்போதைக்கு நேரடியா கேள்வி-பதில் தொகுப்புக்கு போறேன். கூடுதல் அப்டேட்டுக்களை இதே பதிவில் அளிக்கிறேன்.
கே.பி: “நான் இப்போ ஒரு பிரஸ்காரன். அதாவது ஒரு பிரஸ்காரன் மாதிரி கேள்விகள் கேட்கப் போறேன். நான் என்ன கேள்விகள் கேட்கப்போரேன்னு அவருக்கு தெரியாது. அவர் சொல்ல தயங்குகுற கேள்விகளுக்கு தாராளமா ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்லலாம். (ரஜினி நிம்மதி பெருமூச்சு விடுகிறார்). கே.பி. அதை கலாய்க்கிறார். “பார்த்தீங்களா? நான் ‘நோ கமெண்ட்ஸ்’ ன்னு சொல்லலாம்ன்னு நான் சொன்னவுடன் அவருக்கு சந்தோஷத்தை….” (ஆடிட்டோரியம் அதிர்கிறது!)
கே.பி: சிவாஜி ராவ் என்ற ஒரு சாதாரண நடிகனை நான் ரஜினிகாந்தாக்கினேன். நீ உன் சொந்த முயற்சியில் விஸ்வரூபம் எடுத்து இத்துனை உயரத்தை எட்டிவிட்டாய்… அதுவும் இந்த படம் வந்த பிறகு எந்திரன் வந்த பிறகு, நீ எங்கோ உயரத்துக்கு சென்றுவிட்டாய். மூன்று இமயமலை உயரத்துக்கு சென்றுவிட்டாய். (கைத்தட்டல், விசில்). இந்த உயரத்தை அடைந்துவிட்ட நீ, மீண்டும் சிவாஜி ராவாக முடியுமா? அதாவது சர்வர் சுந்தரம் ஆக முடியுமா?
ரஜினி: நான் சிவாஜி ராவா இருக்கிறதால தான் ரஜினிகாந்த்தா இருக்கேன். இந்த பேர், புகழ் இதெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை. அதனால தான் நான் இன்னும் இருக்கேன்.
(தொடர்ச்சியை டைப் செய்ய செய்ய முடிந்தளவு அப்டேட் செய்கிறேன். எஞ்சியவற்றை நாளை காலை அப்டேட் செய்கிறேன். கொஞ்சம் FRESH ஆ இருப்பேன்.)
Continued…
கே.பி: ரொம்ப கரெக்ட் அது. என் சர்வர் சுந்தரம் முட்டாள். நான் சொல்றது காரக்டரை. ஆனா ரஜினி மிகவும் புத்திசாலி. ஏனெனில், அவ்வளவு பெரிய நடிகனாகிவிட்ட பிறகு, கடைசியில் நிம்மதி வேண்டும், என்று மறுபடியும் அவன் சர்வராவது போல காட்டியிருப்பேன். அது தேவையில்லை. அவன் ஒரு முட்டாள். இப்போது நினைத்து பார்த்தால் எனக்கு அது ஒரு தப்பான முடிவாக தோன்றுகிறது. காரணம் இப்படி ஒரு பொஷிஷனுக்கு பிறகு அவங் திரும்ப அந்த இடத்துக்கு வரக்கூடாது. அந்த இடத்துல்ல (உச்சத்துல) இருந்துக்கிட்டே என்ன நல்லது செய்யமுடியுமோ அந்த நல்லதை செஞ்சிகிட்டிருக்கணும். அந்த வகையில உன் பதில் ரொம்ப கரெக்டான பதில்.
(கே.பி. இப்படி சொன்னதுக்கும், சூப்பர் ஸ்டார் சொன்ன பதிலுக்கும் உள்ள அந்த interpretion உங்களுக்கு புரியுதா? அதுல தான் விஷயமே இருக்கு!).
கே.பி: நீ கோவிலுக்கு போக முடியாது. ஷாப்பிங் பண்ண முடியாது. ரோட்டுல நடக்க முடியாது. பெட்டிக் கடையில போய் ஒரு டீ சாப்பிட முடியாது. எல்லா சரவணா பாவனையும் நீ விலைக்கு வாங்கிடலாம். ஆனா அங்கே போய் உன்னால் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டாரா நீ கொடுத்த விலை என்ன? ப்ரைவசியே போய்டுச்சே. இது எவ்வளோ பெரிய லாஸ். அதுல உனக்கு வருத்தம் உண்டா…
ரஜினி: வருத்தம் உண்டு. என்னுடைய நிம்மதி சந்தோஷத்தை நான் ரொம்ப பறி கொடுத்திருக்கேன்.
கே.பி: வருத்தம் உண்டு…. கரெக்ட். வருத்தம் இல்லாம எப்படி இருக்கும். என்னக்கே சில சமயம், என் ப்ரைவசி போகும்போது, எண்டா இப்படி பாப்புலரா இருக்கோம் என்று நினைச்சிக்கிறதுண்டு. இந்த உயரத்துல இருக்குற உனக்கு எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியுது…
Continued…
கே.பி: ஆனா… ப்ரைவசியை விட வேற எதை விட்டுபோச்சுன்னு நினைக்கிறே… ஏதாவது ஒன்னு?
ரஜினி: சாதாரண குடிமகனா நான் வெளியில நடமாட முடியல. ஒரு கைதி மாதிரி இருக்கேன். ஒரு PRISONER மாதிரி இருக்கேன்.
கே.பி:ஒரு சூழ்நிலைக் கைதியா இருக்கேன்னு சொல்லு… எனக்கு புரியுது….
கே.பி: சுயசரிதை நீ எழுதலாமே… autobiography…? உன் FANSக்கு உதவியா இருக்குமே? (கைத்தட்டல், விசில்)
ரஜினி: சுயசரிதை எழுதினா எல்லாம் உண்மை எழுதணும். எதையும் மறைக்கக்கூடாது. உண்மை எழுதினா நிறைய பேர் மனம் புண்படும்னு சொல்லி உண்மையை மறைச்சி எழுதக்கூடாது. உண்மையா நடந்ததை நடந்த மாதிரி எழுதனும்னு சொன்னா அதுக்கு தைரியம் வேணும். மகாத்மா காந்தி சுயசரிதையை உண்மையா எழுதினாரு. அந்த தைரியம் எனக்கு வந்தா நான் கண்டிப்பா சுயசரிதை எழுதுவேன்.
Continued…
கே.பி: நீ எழுதனும். எழுதனும்னு நான் விரும்புறேன்.
கே.பி: இவ்வளவு பெரிய ஸ்டார் டம். அகில இந்திய ரீதியில வந்தாச்சு. இந்தியாவுல நம்பர் ஒன் பொஷிஷனுக்கு வந்தாச்சு. டி.வி.ல எல்லாம் கூட பார்த்தேன் நம்பர் ஒன் டாப் ஸ்டார் நீ தான் இப்போ என்று. (கைத்தட்டல், விசில்). உன்னை தான் சொல்றாங்க எல்லோரும். சோ, அந்த போஷிஷனை காப்பத்திக்கனும்ன்கிற பயமா இருக்கா. இல்லே, ஈசியா எடுத்துக்குரியா….
ரஜினி: காப்பாத்திக்கனும்னு சொல்லி DEFINITE ஆ நான் ட்ரை பண்ணமாட்டேன். ஏன்னு சொன்னா இந்த பொஷிஷனை நான் எதிர்பார்க்கலே. நிறைய படத்துனால வந்த பொசிஷன் இது. ஒரு எந்திரனால வந்த பொசிஷன் இதுன்னு நான் எடுத்துக்ககூடாது.
கே.பி.: பொஷிஷனை நீ எதிர்பார்க்கலேன்னாலும் கூட, நீ அந்த பொஷிஷனுக்கு வந்தாச்சு… இப்போ என்ன பண்ணப்போறோம் என்கிற பயம் இருக்கா?
ரஜினி: அந்த பயம் நிச்சயம் இருக்கு. ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.
Continued…
கே.பி: பர்சனலா ஆயிரம் நல்ல விஷயங்கள் பண்ணியிருக்கே. சத்தம் போடாம பல நல்ல உதவிகள் பண்றே. உன்னை, நடிகன் என்கிற ஸ்தானத்தில் இருந்து DEMI-GOD என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்திய தமிழ் சினிமாவுக்கு நீ என்ன பண்ணப்போறே?
ரஜினி: DEFINETE ஆ நான் , தமிழர்களும் தமிழ் சினிமாவும் பெருமைப் படுறமாதிரி ஏதவாது செய்வேன். (நீண்ட கைத்தட்டல், விசில். அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது).
கே.பி: அப்புறம், இந்த முப்பது வருஷத்துல, நாம் இந்த படத்தை பண்ணியிருக்கலாமே என்று நினைச்சதுண்டா? இந்த படத்தை நாம மிஸ் பண்ணிட்டமேன்னு நினைச்சதுண்டா? எல்லா லாங்குவேஜையும் சேர்த்து சொல்றேன்… இந்த படத்தை நாம பண்ணியிருக்கலாமே.. நாம பண்ணலியே இந்த மாதிரி… என்று நினைச்சதுண்டா?
ரஜினி: உண்டு.
கே.பி: எத்துனை இருக்கு அந்த மாதிரி?
ரஜினி: ஒன்னு ரெண்டு படங்கள் இருக்கு அந்த மாதிரி…
கே.பி: அந்த படம் என்னன்னு சொன்னா நல்லா இருக்குமே…சொல்லலாமே?
ரஜினி: இல்ல… வேண்டாம். நான் சொல்ல விரும்பலே….
Continued…
கே.பி. : நீ ஒரு ஒன்.மேன் ஆர்மி மாதிரி. சில்வஸ்டர் ஸ்டாலோன் மாதிரி. (கைத்தட்டல், விசில்). உன்னுடைய திறமைகள் எல்லாத்தையும் எக்ஸ்ளாய்ட் பண்ணவங்க யாருமே இல்லேன்னு நினைக்கிறேன் நான். நீயே படம் ஏன் டைரக்ட் பண்ணக்கூடாது ?
ரஜினி : கொஞ்சாம் தயக்கத்துக்கு பிறகு… “இல்லே நான் டைரக்ட் பண்றே ஐடியா இதுவரைக்கும் இல்லே. மிகப் பெரிய பொறுப்பு அது.
கே.பி.: இதுவரை இல்ல ஒ.கே. இனிமே… இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல வரலாமே…
ரஜினி : எனக்கு தெரியாது…
கே.பி.: அப்படி ஒருவேளை டைரக்ட் பண்ணினா, என்னை அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்குவியா? (கைத்தட்டல், விசில்).
ரஜினி: உங்களை உட்கார வெச்சி வணங்கி, நீங்க சொல்றதை கேட்டு நான் செய்வேன்.
கே.பி: சட்டுன்னு… இந்த கேள்விக்கு பதில் சொல்லு… இதுவரைக்கும் எத்துனை படம் பண்ணியிருக்கே…
ரஜினி : (உடனே) “154 படங்கள்…” (கைத்தட்டல், விசில்).
கே.பி.: குட். நிறைய பேர் இங்கே என்ன பண்றோம் எங்கே போறம்னு தெரியாம இருக்காங்க. (கைத்தட்டல், விசில்). சில பேர் தான் நடிச்ச படத்தை பார்க்காம கூட இருக்காங்க. இவர் இத்துனை தெளிவா பதில் சொல்றாருன்ணா, ஸ்டடி பண்ணாம இருக்கமாட்டார். குட்.
to be Continued…
கே.பி: இது ஒரு நல்ல சீரியஸ் கேள்வி. ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த முகாலியே ஆசாம், வீர பாண்டிய கட்டபொம்மன், எங்க வீட்டு பிள்ளை, இதெல்லாம் இப்போ ஜனங்க விரும்பி திரும்பவும் பாக்குறாங்க. ஐம்பது வருஷம் கழிச்சி உன்னோட எந்த படத்தை மக்கள் விரும்பி பார்ப்பாங்கன்னு நீ நினைக்குறே?
ரஜினி : ஸ்ரீ ராகவேந்திரர்… (கைத்தட்டல், விசில்). தொடர்ந்து கூட்டம் பாட்ஷா … பாட்ஷா என்று ஆர்பரிக்க அதை தொடர்ந்து பாட்ஷா, எந்திரன் என்ற பெயர்களையும் சேர்த்துக்கொண்டார் ரஜினி. கூட்டம் தொடர்ந்து ஆர்பரிக்கிறது.
கே.பி.: என்னோட படம் எதையும் சொல்ல மாட்டேங்குற பார்த்தியா? (ரஜினி வெட்கப்பட்டு சிரிக்கிறார்.)
கே.பி: ரஜினிகாந்த் என்கிற கலைஞன் கிட்டே ஆயிரம் திறமைகள் கொட்டிகிடக்கு. அமிதாப்பையும் மிஞ்சின இமேஜ் இருக்கு உன்கிட்டே. உனக்குள்ள ஒரு FANSTASTIC SENSE OF HUMOUR இருக்கு. அமிதாப் நடிச்ச சீனி கம் மாதிரி ஒரு படம் பண்ணுவியா? எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா நீ அந்த மாதிரி ஒரு படம் பண்ணுவியா?
ரஜினி: ஒரு ஆர்டிஸ்டா எனக்கு எப்பவுமே கமர்ஷியல் படங்கள் மேல தான் இண்டரஸ்ட்.
கே.பி : ஏன் சீனி கம் கமர்ஷியல் படம் இல்லியா?
ரஜினி: எஸ்… ofcourse. ஆனா அது ஒரு சின்ன கமர்ஷியல்.
கே.பி : உன்னை அறிமுகப்படுத்தியவன் என்கிற முறையில் சொல்கிறேன். நீ இன்னும் தேசிய விருது வாங்கவில்லை என்பது எனக்கு வருத்தமா இருக்கு. எப்போது வாங்குவே?
ரஜினி : அது டைரக்டர்ஸ் கையில தான் இருக்கு… (கைத்தட்டல், விசில்).
கே.பி: உன்னை வெச்சு என்னால இனிமே படம் பண்ண முடியாது. உன்னோட இமேஜ் எங்கேயோ போய்டிச்சு. ஆனா என்னோட இமேஜ் அப்படியே இருக்கு. So, உன்னை வெச்சு இனிம்னே என்னால படம் பண்ண முடியாது. தெரியாது. ஆனா, உன்னை என்னோட நாடகத்துல நடிக்க வைக்க முடியும். மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை திரும்பவும் ரிபீட் பண்ணறேன். அதுல் மேஜரா நீ நடிக்கிறியா?
ரஜினி : நிச்சயமா நடிக்கிறேன்.
கே.பி.: ஏப்ரல் 15 டிராமாவை வெச்சிக்கலாமா? நடிப்பியா? நீ ரெடின்னா நான் ரெடி…..
ரஜினி : (சற்று அமைதிக்கு பிறகு) நீங்க சரின்னு சொன்னா நானும் சரி…
கே.பி.: (உற்சாகமாக) நீங்க சரின்னா நானும் சரின்னு சொல்றாரு அவர்.
கே.பி: கமல்ஹாசன் என்னை வெச்சு படம் டைரக்ட் பண்ணுவேன்னு சொல்லியிருக்காரு. நீ நே அந்த மாதிரி சொல்ல மாட்டேங்குறே? (கூட்டத்தில் சிரிப்பு)
ரஜினி: நீங்க செய்ன்னு சொன்னான் நான் செய்வேன்…
கே.பி.: அதாவது நீ படம் டைரக்ட் பண்ணும்போது…? ஓகே…ஓகே…
கே.பி. : அப்புறம் உனக்கு நான் ரஜினிகாந்த் என்று என்னைக்கு பேர் வெச்சேன் … ஞாபகம் இருக்கா?
ரஜினி : பவுர்ணமியன்னிக்கி….
கே.பி. : என்னைக்கி?
ரஜினி : அதாவது ஹோலி திருநாள் அன்று…!
கே.பி. : எஸ்… ஹோலி பண்டிகை அன்னைக்கு உனக்கு நான் ”ரஜினிகாந்த்” னு பேர் வெச்சேன். முன்பெல்லாம் ஹோலி பண்டிகையன்னிக்கி என்ன வந்து பார்ப்பே. வெளியூர்ல இருந்தா போன் பண்ணுவே. ஒரு ஏழெட்டு வருஷம் அப்படி செஞ்சே… அப்புறம் என்னை மறந்துட்டியே பா…
ரஜினி : தப்பு தான்… என்னை மன்னிச்சிடுங்க. இனி அப்படி நடக்காது.
கே.பி. : இனிமே விசாரிக்கிரேன்னு சொல்றாரு …ஓகே… நான் அவரை மறக்கலை. எப்படின்னா… ஹோலி பண்டிகை அன்னைக்கு பேப்பர் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ரஜினி ஞாபகம் மட்டும் தான் வரும். வேறெதுவும், வராது. (கைத்தட்டல், விசில்). அப்புறம் இதை உள்ளார்த்தமா சொல்றேன். இவ்ளோபெரிய நடிகன் உருவாவதற்கு நாம காரணமா இருந்திருக்கோம்னு நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கு.
கே.பி.: நான் டைரக்ட் பண்ணும்போது இவர்கிட்டே வந்து ஏண்டா மாட்டிக்கிட்டோம்னு நினைச்சதுண்டா?
ரஜினி : நிறைய வாட்டி…. நிறைய வாட்டி….
கே.பி.: நிறைய வாட்டியா? நான் உன்னை வெச்சு மூணு… இல்லே நாலஞ்சு படம் தான் பண்ணியிருக்கேன். ஆன உன்னை வெச்சு ஒரு ‘தில்லு முள்ளு’ பண்ணினேனே அதை என்னால மறக்க முடியாது… நீ கூட கேட்டே… தில்லுமுல்லு என்னால பண்ண முடியுமான்னு… அது காமெடி படமாச்சே… என்னால பண்ண முடியுமான்னு கேட்டே… நாகேஷ் மாதிரி ஹீரோக்கள் பண்ண வேண்டிய படம் நான் எப்படி சார் பண்றதுன்னு கேட்டே… நான் சொன்னேன்… “உனக்கு காமெடி நல்லா வரும். நீயே பண்ணு. வரலேன்னாலும் நான் பாத்துக்குறேன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு தான் ஒத்துக்கிட்டே… ஞாபகம் இருக்கா?
ரஜினி : ஆமா… நான் காமெடி ரோல் பண்றதான்னு தயங்கினேன்…
கே.பி: ஆமா… அதுகூட உனக்கு வேறொரு தயக்கம் கூட இருந்தது…. அதாவது அந்த படத்துக்காக மீசை எடுக்கணும்ன்னு நீ தயங்கினே…
கே.பி: அப்புறம் எப்பவாவது உன்னை பத்தி நினைக்கும்போது எனக்கு இது ஞாபகத்துக்கு வரும். ‘அவர்கள்’ படத்தைப்போ நான் உன்னை திட்டிநேனே, அது ஞாபகம் இருக்கா?
ரஜினி : நல்லா ஞாபகம் இருக்கு… நல்லா ஞாபகம் இருக்கு.
கே.பி: அன்னைக்கி கன்னாபின்னான்னு திட்டிட்டு கோவிச்சிக்கிட்டு போய்ட்டேன் நான். அப்புறமா வந்து எத்தனையோ தடவை நினைச்சி பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். அதுவும் ஒவ்வொரு முறையும் நீ பெரிய ஸ்டாரா வளரும்போது, இப்படி திட்டிட்டனே உன்னை முண்டம்னு என்னை நானே திட்டிக்குவேன். இப்படி திட்டினியே இன்னிக்கி எப்படி இருக்காரு அவருன்னு என்னை நானே நொந்துக்குவேன்.
கே.பி : படத்துல எல்லாம் இவ்வளவு ஸ்டைல் பன்றியே… சின்ன வயசுல ஓவரா பண்ணியிருப்பியே… கண்டக்டரா இருந்தப்போ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா? (நீண்ட கைத்தட்டல், விசில்).
ரஜினி : பண்ணியிருக்கேன். (நீண்ட கைத்தட்டல், விசில்).
கே.பி : யாருன்னு என்கிட்டே மட்டும் அப்புறம் சொல்லு….(கைத்தட்டல், விசில்).
ரஜினி : கண்டிப்பா….
continued….
கே.பி. : எந்திரன் படம் மிகப் பெரிய படம். அந்த மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியுமா என்பது டவுட் தான். அதுல உன்னோட பெர்பார்மன்ஸ் HATS OFF. (ரஜினி உடனே தேங்க்யூ என்கிறார்) அப்படி பண்ணியிருக்கே நீ… ஒரு டைரக்டரா ஷங்கர் வந்து அத்துணை அற்புதமா உன்னை வேலை வாங்கியிருக்கிறார். ஆனா இந்த எந்திரன் படம் உன்னோட அல்டிமேட்டுன்னு நீ நினைக்கிறியா?
ரஜினி : இல்லை. (கைதட்டல்… விசில் சத்தம்)
கே.பி.: வெரி குட். கை கொடு ….(தலைவருடன் கைகுலுக்குகிறார்)
continued….
கே.பி: எந்திரன் படத்தை தியேட்டர்ல போய் ரெண்டு தடவை பார்த்தேன். (கைதட்டல்… விசில் சத்தம்) முதல் தடவை, ரஜினி ரசிகனா… ரெண்டாவது தடவை டைரக்டர் ஷங்கருக்காக. ஒரு படத்தை ரெண்டாவது தடவை நான் பார்த்தது எந்திரன் தான். (மீண்டும் கைதட்டல்… விசில் சத்தம்).
ரஜினி : ரொம்ப நன்றி சார்.
கே.பி. : சந்திரலேகாவுக்கு பிறகு.. எந்திரனை தான் ரெண்டாவது தடவை பார்த்தேன்.
ரஜினி : யுவர் ஹானர் சார்…
கே.பி: நீ எப்போவாவது என் படத்தை ரெண்டாவது தடவை பார்த்திருக்கியா?
ரஜினி: நிறைய பார்த்திருக்கேன்…
கே.பி : (நம்ப மறுத்து) என்ன படம்…? எத்தினி தடவை…? நிஜமா சொல்லணும்…
ரஜினி : சர்வர் சுந்தரம், நீர்க்குமிழிகள், அபூர்வ ராகங்கள், அவர்கள்… அவர்கள் படத்தை எட்டு தடவை பார்த்திருக்கேன். அரங்கேற்றம் பன்னிரண்டு முறை…. பார்த்திருக்கேன்.
கே.பி.: ஆடியன்சை பார்த்து… நம்பலாமா இவரை… இவர் சொல்றதை நம்பலாமா? என்று நகைச்சுவையாக கேட்கிறார். (கூட்டத்தில் சிரிப்பொலி).
கே.பி. : பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணிட்டே. எந்திரன் சூப்பர் ஹிட்டாயிடுச்சு… உன்னோட அடுத்த டென்ஷன் என்ன? கவலை ஏதாவது இருக்கா?
ரஜினி : படம் ஒத்துக்கத வரைக்கும் எந்த கவலையும் இல்லே. படம் ஒத்துகிட்டா அடுத்த நிமிஷம் கவலை வந்துடும்.
கே.பி: அது சரி… கவலையே இல்லையேன்னு ஒரு கவலையோன்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு…
கே.பி: திருமதி லதா அவர்களை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்து என் கிட்டே அறிமுகப்படுத்தி, இவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போரேன்னு சொன்னே. ஞாபகம் இருக்கா? எங்கே எப்போ நடந்ததுன்னு சொல்ல முடியுமா?
ரஜினி : கலாகேந்திரா ஆபீஸ்ல. நான் லதாவை கூட்டிகிட்டு வந்து சொன்னேன். இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு. “பெரிய இடமாச்சே… பெரிய இடத்தையெல்லாம் எப்படி பகைச்சு இவன்களை கல்யாணம் பண்ணிக்க்போரே? நீ ரொம்ப கோவக்காரனாச்சே… உன்னை எப்படி இவங்க சமாளிக்கிறாங்க? உன்னை எப்படி புரிஞ்சிக்கிறாங்க….? நல்லா FAMILY பா, நல்ல பொண்ணு. அப்படின்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் லதாவை கூப்பிட்டு “இவன் நல்ல கோவக்காரன் மா. அது மட்டும் பார்த்துக்கோ. ரொம்ப நல்ல பையன்.” அப்படின்னு சொன்னீங்க…
கே.பி: அது உனக்கு ஞாபகம் இருக்கா….? (வியப்புடன்). ஞாபகம் இருக்கு. எனெக்கென்னவோ அது தில்லு முள்ளு ஷூட்டிங் டயம்னு நினைக்கிறேன்.
ரஜினி : ஆமா.. தில்லு முள்ளு ஷூட்டிங் அப்போ தான்.
கே.பி: ஒரு குட்டிக்கதை சொல்ல முடியுமா எனக்காக….? எதைப் பத்தி வேணும்னா இருக்கலாம்..
ரஜினி : சிரிக்கிறார்… இல்ல… நான் ரொம்ப எமொஷனனலா இருக்கேன் இப்போ…
கே.பி: சரி… விடு…
கே.பி: சினிமாத் துறையை தவிர மத்தத துறையில உனக்கு பிடிச்ச சூப்பர் ஸ்டார் யாரு? எந்த துறையில வேணும்னா இருக்கலாம்…. உனக்கு பிடிச்சக் சூப்பர் ஸ்டார் யாரு?
ரஜினி : அரசியல் துறை தானே?
கே.பி : ஹாம் அரசியல் துறையா கூட இருக்கலாம்….
ரஜினி : லீ குவான் யூ…லீ குவான் யூ… லீ குவான் யூ… (மூன்று முறை சொல்கிறார்) முன்னாள் சிங்கப்பூர் ப்ரைம் மினிஸ்டர் அவர் (கைதட்டல் விசில்)
கே.பி : தமிழ்ல கவிதை எழுதனும்னு ஆசை வந்திருக்க உனக்கு ?
ரஜினி : நிறைய வந்திருக்கு…
கே.பி : நான் இவர் போல இல்லையேன்னு யாரையாவது பார்த்து ஆதங்கப்பட்டிருக்கியா நீ?
ரஜினி : பட்டிருக்கேன்.
கே.பி : யாரையா பார்த்து ?
ரஜினி : இமயமலையில துறவிகளை பார்த்து ஆதங்கப்பட்டிருக்கேன். இவங்களை மாதிரி நாம இல்லையேன்னு…
கே.பி: எத்துனை தடவை அந்த மாதிரி ஆதங்கப்பட்டிருக்கிறே?
ரஜினி : நிறைய தடவை.. ஒவ்வொரு டயம் ஹிமாலயாஸ் போகும்போதும்…
கே.பி : உனக்குன்னு சின்ன சின்ன ஆசை இருக்குமே? பக்கத்துல யாராவது உட்கார்ந்திருந்தா அவங்க தொடையில கிள்ளுறது… அந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகள் உன் ப்ரென்ட்கள் கிட்டே வேச்சிகிட்டதுண்டா?
ரஜினி : நிறைய இருக்கு… நிறைய இருக்கு…
கே.பி : ப்ரெண்ட்ஸ்கிட்டே சின்ன சின்ன PRANKS பண்ணணும்னு ஆசை இருக்கு அப்போ?
ரஜினி : நிச்சயமா இருக்கு…
RAPID FIRE ROUND
கே.பி : RAPID FIRE ன்னு சொல்வாங்க… இப்போ அந்த ரவுண்டு.. அதாவது நான் கேட்குற கேள்விகளுக்கு டக் டக்னு பதில் சொல்லணும். ஒத்தை வரில, ஒத்தை வார்த்தைல பதில் சொல்லணும்… நீ உடனே சொல்லனும்னு அவசியம் இல்லே… கொஞ்சம் டயம் எடுத்துக்கலாம்…
ரஜினி : ஒ.கே. சார்.
கே.பி : ஒரு நாளைக்கு எத்துனை சிகரெட் பிடிக்கிறே? (கூட்டத்தில் சிரிப்பு)
ரஜினி : இப்போ ரொம்ப கம்மி பண்ணிட்டேன்…
கே.பி : ரொம்ப கம்மி பண்ணிட்டே… ஏன் அதை முழுசா கம்மி பண்ணக்கூடாதா? அதை முழுசா விட்டுரேன்… வேணாம்… அது வேண்டாம்…
ரஜினி : விட்டுரேன் சார்…
கே.பி : வேண்டாம் அது. விட்டுடு.. நானே சிகரெட் பிடிச்சவன் தான். என்னை சிகரெட்டும் கையுமா பார்த்தவன் தான் நீ… நான் விட்டுடலே… ஒரு நாளைக்கு எத்துனை பிடிச்சவன் நான் தெரியுமா? நீயும் அதை விட்டுடேன்…
ரஜினி : நிச்சயமா சார்…
(கே.பி.யை நோக்கி குறிக்கிட்டு கே.எஸ். ரவிக்குமார் : அவரை ஸ்டைலா சிகெரட் பிடின்னு சொன்னதே நீங்க தான்.. என்று கூற ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)
கே.பி.: அவரை ஸ்டைலா சிகெரட் பிடின்னு சொன்னதே நான் தான் .. அப்படின்னு ரவிக்குமார் சொல்றாரு… அவர் என் கிட்டே சிகரெட் தூக்கி போட்டு காண்பிச்சாரு… நான் அதை படத்துல யூஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அவ்வளவு தான். மத்தபடி புகையை விடுன்னு நான் சொல்லலே… என்று கூறி சமாளித்தார் கே.பி.
கே.பி : பிடிச்ச டைரக்டர் தமிழ்ல யாரு?
ரஜினி : மகேந்திரன் சார். (கைத்தட்டல் விசில்)_
கே.பி : பிடித்த நாவல்?
ரஜினி : பொன்னியின் செல்வன்
கே.பி : வெரி குட்… வெரிகுட் … வெரி குட்…
கே.பி : குடும்பத்தோடு போய் ரசிச்ச ஹாலிடே SPAAT எது ?
ரஜினி : லண்டன்
கே.பி. : தனியா போய் ரசிச்ச ஹாலிடே ஸ்பாட் எது ? ஹிமாலயாஸ் தவிர… (கூட்டத்தினர் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)
ரஜினி : (ஒரு கணம் யோசித்து) நேபால்…
கே.பி : நேபால்? கிட்ட தட்ட ஹிமாலயாஸ் தான் அதுவும்.. (கூட்டத்தினர் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)
கே.பி : பிடித்த உணவு ?
ரஜினி : சிக்கன்
கே.பி : சிக்கன் …? என் கிட்டே சொல்றே அதை பத்தி… அதை நான் தோய்த்து கூட பார்த்ததில்லே… நம்ம வெஜிடேரியன்ல ஏதாவது சொன்னா நாம கூட அதை பாலோ பண்ணலாமேன்னு பார்த்த்தேன்… ஹூம்.. சிக்கன் ன்னு சொல்லிட்டே…
கே.பி : உன்னோட பெஸ்ட் ப்ரென்ட்?
ரஜினி : ராஜ் பகதூர்
கே.பி : பத்திரிக்கைகள்ல எல்லாம் சொல்வாங்களே… ராஜ் பகதூர் .. ?
ரஜினி : ஆமா…
கே.பி : குட்… குட்…
கே.பி : உனக்கு பிடிச்ச டிரைவிங் எது? அந்த காலத்துல…
ரஜினி : ஜாவா மோட்டார் பைக்
கே.பி : மிகவும் மகிழ்ச்சியான தருணம்… ?
ரஜினி : கே.பி.சார் எனக்கு மூணு படத்துல கொடுத்த வாய்ப்பு…
கே.பி: மிகவும் வருத்தமான சம்பவம் ?
ரஜினி : எங்கப்பா இறந்த போது
கே.பி : பெரும் மகிழ்ச்சி தந்த பாராட்டு ?
ரஜினி : நீங்க எனக்கு எழுதின லெட்டர். முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர். உன்னை அறிமுகப்படுத்தியதற்கு பெருமைப்படுரேன்னு சொல்லி பாராட்டியிருந்தீங்க..
கே.பி : உன்னால் மறக்க முடியாத ஒரு அவமதிப்பு?
ரஜினி : நோ கமெண்ட்ஸ்…
கே.பி : சொல்ல விரும்பலியா ? சரி விட்டுடு…
கே.பி : உனக்கு நிறைவேறாத ஆசை?
ரஜினி : நோ கமெண்ட்ஸ்…
கே.பி : REGRETS.. எதற்காகவாவது ரொம்ப வருத்தப்பட்டதுண்டா?
ரஜினி : நிறைய இருக்கு….
கே.பி : உன்னை பத்தி உன்கிட்டே உனக்கு பிடிச்ச விஷயம் எது ?
ரஜினி : உண்மை பேசுறது (பலத்த கைதட்டல் விசில்)
கே.பி : என்னை பத்தி உனக்கு பிடிக்காத ஒரு விஷயம்?
ரஜினி : நீங்க கோபப்படுறது…
கே.பி : அந்த கோபமெல்லாம் விட்டு ரொம்ப வருஷம் ஆச்சுப்பா நான். இப்போ கொப்படுரதில்லே… நான்.
கே.பி : ஒரே ஒரு கேள்வி கேக்கணும் நான்… கேட்கட்டுமா ?
ரஜினி : கேளுங்க சார்
கே.பி : நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா?
ரஜினி : (மேலே கையை காண்பித்து) ஆண்டவன் கையில இருக்கு (கைத்தட்டல் விசில்)
கே.பி : நீ தேசிய விருது வாங்கணும். சிவாஜி கணேசன் வாங்கலே… சிவாஜி ராவ் நீயாவது வாங்குவியா? நீ வாங்கணும்…
ரஜினி : உங்க ஆசீர்வாதத்துல… நிச்சயம் வாங்குவேன் சார்.
கே.பி : உன்கிட்டே நான் இவ்ளோ நேரம் கேட்டுக்கிட்டுருக்கேனே கேள்வி.. என்கிட்டே உனக்கு ஏதாவது கேள்வி கேக்கணுமா?
ரஜினி : எப்போ சார் முடிப்பீங்க…? (வாட்ச்சை பார்த்துக்கொண்டே கேட்கிறார்) (கூட்டத்தில் பயங்கர சிரிப்பொலி)நேரம் அப்போது இரவு 11.00 ஐ தாண்டிவிட்டது…)
கே.பி. : முதல்ல உனக்கு சொன்னேனே விதி அது எனக்கும் பொருந்தும்… நோ கமெண்ட்ஸ்…
கே.பி. - ரஜினி நேர்காணல் தொகுப்பு இனிதே முடிந்தது. விழாவின் மற்ற சுவாரஸ்யமான பகுதிகள் சம்பவங்கள் தனிப்பதிவாக வெளிவரும்.
|