Chandramukhi 200 Days Silver Jubilee Function
சென்னை : ""ரசிகர்களுக்கு படத்திற்கு படம் வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் இடைவெளி விட்டு படங்களை கொடுக்கிறேன். அடுத்து வரும் "சிவாஜி' படமும் இதேபோல் வெற்றிப்படமாக அமையும்,'' என்று நடிகர் ரஜினி தெரிவித்தார்.
சிவாஜி புரடக்ஷனில் ரஜினி நடித்த "சந்திரமுகி' திரைப்படத்தின் 200வது நாள் வெற்றி விழா மற்றும் சிவாஜியின் 78வது பிறந்த நாள் விழாவும் சென்னைப் பல்கலைக் கழக நும்ற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று நடந்தது. இவ்விழாவில் சிவாஜியின் மகன் ராம்குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் தாசரி நாராயண ராவ், "சந்திரமுகி' படத்தில் பணியாற்றியவர்களுக்கு நினைவு கேடயங்களை வழங்கி பேசியதாவது:
இது வெற்றிவிழா மட்டுமல்ல, இரண்டு குடும்பத்தின் விழாவாகும். சினிமா அகராதியில், தமிழ் சினிமா உலகில் நடிப்பின் இலக்கணமாக சிவாஜி கணேசனும், "சூப்பர் ஸ்டார்' என்றால் ரஜினியும் தான் இருப்பார்கள். தமிழ் திரையுலகிற்கு ரஜினி வந்த பின்பு ஒரு பெரிய மாற்றத்தைக் கொடுத்துள்ளார். அவரின் பலம் "ஸ்டைல்' தான். அவரின் ஸ்டைல், நடை ஆகியவற்றை பலர் பின்பற்றி வருகின்றனர். வில்லனாக இருந்து, கதாநாயகனாக மாறியவர்களில் நல்ல அந்தஸ்து கிடைத்த ஒரே நபர் ரஜினி தான். நடிகர்கர்களில் பலர் ஆண்டுக்கு மூன்று படங்கள் நடிப்பார்கள். ஆனால், மூன்று ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பவர் ரஜினி; இதுதான் அவரின் ஸ்டைல். சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கவர்ந்த ஒரே நடிகர் ரஜினி. அனைத்தையும் தாண்டி சிறந்த மனிதர் ரஜினி. இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். எல்லா நடிகர்களும் அவர்கள் நடிக்கும் படங்களுக்கு கதாநாயகன் பெயரைச் சுற்றியே படத்தின் பெயர் அமைந்திருக்கும். ஆனால், அதை முற்றிலும் ரஜினி மாற்றியுள்ளார் "சந்திரமுகி'யில். ரஜினி என்னிடம், "நான் நடிப்பதிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன்' என கூறுவார். ஆனால், அவர் நினைத்தாலும் அது முடியாது. அவர் நடித்துக் கொண்டே தான் இருக்க வேண்டும்.
இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், "ரஜினியின் சாதனைகளை அவரால் தான் முறியடிக்க முடியும்.' ரஜினி பழகுவதற்கு மிகவும் எளிய மனிதர்,' என்றார். இயக்குனர் சங்கர் பேசுகையில்: "ரஜினிக்கு நான் தேவையில்லை. எந்தவொரு இயக்குனரை வைத்து படம் இயக்கினாலும் அந்த படம் நிச்சயம் வெற்றிப்படம் தான்.' நான், கமல் உட்பட பலரை வைத்து இயக்கி விட்டேன். ரஜினியை வைத்து "சிவாஜி' படத்தை இயக்கி விட்டால் என் திரையுலக வாழ்க்கை முழுமை பெற்றுவிடும். அவரின் அடுத்த "சிவாஜி' பட வெற்றிக்காக நான் மிகவும் கவனத்துடன் செயல்படுவேன்,' என்றார்.
நடிகர் விஜய்: "ரஜினி என் தலைவர்' தனது படங்களில் அடிக்கடி கூறுவார் "நான் சொல்றதை தான் செய்வேன், செய்றதைதான் சொல்வேன்' என்பார். படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அப்படியே நடந்து கொள்வார். "சந்திரமுகி' கேசட் வெளியீட்டு விழாவில், நான் யானை இல்லை; குதிரை. விழுந்தால் உடனடியாக எழுந்து ஓடுவேன் என்றார். அன்று சொன்னார்; இன்று நிற்கிறார். அதனால் தான் சொல்கிறேன் என் தலைவர் "சொல்வதை தான் செய்வார்.'
இயக்குனர் வாசு: அன்பு, பண்பு, மரியாதை, உபசரிப்பு இப்படி அனைத்தும் ஒருங்கிணைந்து இருப்பவர் ரஜினி. அவருடைய கணிப்பு நும்ற்றுக்கு நும்று சரியாக இருக்கும்.
நடிகர் பிரபு: "என் தந்தைக்குப் பிறகு ரஜினி அண்ணன் தான் எங்களை வழிநடத்தி வருகிறார். எங்கள் குடும்பத்தில் ஒருவர்,' என்றார்.
விழாவில் ரஜினி பேசியதாவது:
"சந்திரமுகி' ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடியதற்கு முக்கிய காரணம் அமைச்சர் தாசரி நாராயண ராவ் தான். சிவாஜி அப்பாவின் நடிப்பை பார்த்து தான் நான் சினிமாத்துறைக்கு வந்தேன்; "படையப்பா' எடுக்காமல் இருந்திருந்தால் என் சிவாஜி அப்பாவைப் பற்றி முழுமையாக எனக்கு தெரிந்திருக்காது. அவர் என்னிடம் அரசியல், ஆன்மிகம், குடும்ப விஷயம் அனைத்தையும் கூறியிருக்கிறார்.
சில விஷயங்களை வெளியே கூறாதே என்றும் கூறியிருக்கிறார். ஒரு நாள் அவர் என்னை அழைத்து, "நான் இறந்து விட்டால் என் உடலுடன் நீ வருவாயா?' என்று கேட்டார். எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மனிதர்கள் எல்லாம் ஒரு நாள் இறக்க தான் வேண்டும்; என்னுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வாயா? என்றார். "நான் நிச்சயமாக இருப்பேன்' என்றேன். என் தந்தை இறந்தபோது கூட நான் அருகில் இருந்ததில்லை. அதன்படி சிவாஜி அப்பா இறுதி ஊர்வலத்தில் கடைசி வரை கலந்துகொண்டேன்.
நடிப்பின் மகான் அவர். அவருடைய குடும்ப அருமையான குடும்பம். "சந்திரமுகி' படத்தை துவக்கும்போது வடிவேலுவின் கால்ஷீட்டை தான் முதலில் வாங்க வேண்டும் என்று கூறினேன். தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் வரிசையில் அவரும் சிறந்த நகைச்சவை நடிகர். அவருடன் பல படங்களில் நடிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறேன். "சந்திரமுகி' நாளை ரிலீசாகிறது என்றால் அதற்கு முதல் நாளே சில்வர் ஜூப்ளி விழா கொண்டாடியவன் நான். கேசட் வெளியீட்டு விழாவில், நான் யானை அல்ல; குதிரை என்றேன். அதன்படி நான் எழுந்து ஓடினேன். என்னை ஓட வைத்தது நீங்கள். நான் எழுந்திருக்க சக்தி கொடுத்தது "பாபாஜி.' எந்த கடவுளாக இருந்தாலும் முழு நம்பிக்கை வைத்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஆண்டவன் இருக்கிறான். நல்லவர்கள் வாழ்கிறார்கள். சோதனை வந்தால் தான் சாதனை வரும். கஷ்டம் இருந்தால் தான் வாழ்க்கை. துன்பத்தை தேடிப் போகவேண்டாம். அது வந்தால் நொந்து போகவும் வேண்டாம். எதையும் எதிர்த்து போராட வேண்டும்.
என்னுடைய தலைமுடி பற்றி பலர் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். எனக்கு 20 வயதில் முடி நரைத்து விட்டது. அதை மறைக்க நான் பல "டை'களை உபயோகித்தேன். அதனால் என்னுடைய முடி கொட்டி விட்டது. 95 சதவீத முடி கொட்டிய பின்னர் தான் "டை' எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்தேன். படத்திற்கு படம் வித்தியாசமாக ரசிகர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக தான் இடைவெளி விட்டு படங்களை கொடுக்கிறேன். அடுத்து வரும் "சிவாஜி' படமும் இதேபோல் வெற்றிப்படமாக அமையும். இவ்வாறு ரஜினி பேசினார்.
|